Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

”சிங்கப்பூரின் உன்னதமான சர்வாதிகாரத்தை விரும்புகிறோம்” – கமல் ட்வீட்

நடிகர் கமல்ஹாசன், சிங்கப்பூர் நாட்டின் உன்னதமான சர்வாதிகாரத்தை விரும்புவதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வழக்கம்போல் அவருடைய கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளன.

மத்திய, மாநில அரசுகள் மீதான விமர்சனங்களை ட்விட்டர் சமூக வலைத்தளம் மூலம் நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். ‘மெர்சல்’ படத்தின் சில காட்சிகளுக்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அந்தப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார் கமல்ஹாசன்.

இந்நிலையில், திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் இசைக்கப்படுவது குறித்து மறுபரிசீலனை செய்யலாம் என்று சில நாள்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து இருந்தது.

இது தொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”சிங்கப்பூரில் தேசிய கீதம் தினமும் நடுநிசியில் மட்டுமே இசைக்கப்படுகிறது. அதேபோல் தூர்தர்ஷனில் செயல்படுத்துங்கள். என்னுடைய தேச பக்தியை வலுக்கட்டாயமாக பல இடங்களில் சோதனை செய்யாதீர்கள்,” என்று பதிவிட்டு இருந்தார்.

இதற்கு பாஜக ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தேசிய கீதம் இசைக்கும்போது 52 வினாடிகள்கூட எழுந்து நிற்க முடியாதா? என்று சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு கமல் ரசிகர்கள் தக்க பதிலடியும் கொடுத்து வருகின்றனர்.

இந்த பரபரப்புக்கு இடையே, நேற்று (அக். 25, 2017) இரவு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”சில விமர்சகர்களின் கருத்துப்படி சிங்கப்பூர் வாதங்களில் பயிரிடுவதால், அது ஓர் உன்னதமான சர்வாதிகாரமாக இருக்கிறது. நாம் அதை விரும்புகிறோம். இல்லை ப்ளீஸ்.,” என்று பதிவிட்டு இருந்தார்.

அவருடைய பெரும்பாலான ட்வீட்டுகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இருக்காது என ரசிகர்களே கருதுகின்றனர். நேற்றைய பதிவும்கூட எளிமையாக புரியவில்லை என்று ட்விட்டரில் பலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.

பாஜக ஆதரவாளர்கள், ரஜினி ரசிகர்கள் பலர் அவரை வழக்கம்போல் கிண்டலடித்து கருத்துகளை பதிவிட்டு இருந்தனர். கமல் ரசிகர்கள் அதற்கு தக்க பதிலடி கொடுத்து வருவதால் கமல்ஹாசனின் ட்விட்டர் பக்கம் மீண்டும் பரபரப்பு அடைந்துள்ளது.