Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா: 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

முதல் ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்க்கும் வகையில் இரண்டாவது போட்டியில் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தை பந்தாடி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இரண்டாவது போட்டி இன்று (அக். 25, 2017) மகாராஷ்டிராவில் உள்ள புனேயில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் குல்தீப் நீக்கப்பட்டு அக்சர் படேல் வாய்ப்பு பெற்றார்.

பந்துவீச்சு அபாரம்

நியூசிலாந்து அணிக்கு கப்டில், முன்ரோ ஜோடி ஏமாற்றியது. புவனேஷ்வர் ‘வேகத்தில்’ கப்டில் (11) ஆட்டமிழந்தார். பும்ரா பந்தில் கேப்டன் வில்லியம்சன் (3) சிக்கினார். முன்ரோ 10 ரன்களில் அவுட்டானார். பின், இணைந்த ராஸ் டெய்லர், லதாம் ஜோடி நிலையாக விளையாடியது. இந்த நேரத்தில் பாண்ட்யா ‘வேகத்தில்’ டெய்லர் (21) சிக்க, இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். லதாம் (38), நிக்கோலஸ் (42), கிராண்ட்ஹோம் (41), சான்ட்னர் (29) ஆறுதல் தந்தனர். மில்னே (0) ஏமாற்றினார்.

நியூசிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்தது. சவுத்தீ (25), பவுல்ட் (2) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 3, பும்ரா, சகால் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

ரோகித் ஏமாற்றம்:

231 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு, ரோகித் சர்மா 7 ரன்களில் சவுதி வேகத்தில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த கேப்டன் கோஹ்லி 29 ரன்களில் டி-கிராண்ட்ஹோம் வேகத்தில் ஆட்டம் இழந்தார்.

தவான் அரைசதம்:

பின் தவானும், தினேஷ் கார்த்திக்கும் பொறுப்புடன் விளையாடி ரன்கள் குவித்தனர். அரைசதம் கடந்த தவான் 68 ரன்களில் மில்னே வேகத்தில் வெளியேறினார். தன் பங்குக்கு 30 ரன்கள் குவித்த பாண்ட்யா, சான்ட்னர் சுழலில் சிக்கினார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் காரத்திக் அரைசதம் கடந்தார்.

சுலப வெற்றி:

46 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை(232) எட்டிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் தினேஷ் கார்த்திக்(64), தோனி(18) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து தரப்பில் சவுதி, மில்னே, சான்ட்னர் மற்றும் டி-கிராண்ட்ஹோம் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

3 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் புவனேஷ்வர் குமார் ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்தது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி வரும் 29ம் தேதி கான்பூரில் நடைபெறவுள்ளது.