Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

காமெடி டைம்: பெயர் – ஹெச் ராஜா; உபதொழில் – கலவரமூட்டுவது!

தமிழகத்தில் பாஜகவை எதிர்த்து திமுகவோ, அதிமுகவோ அல்லது ஏனைய பிற அரசியல் கட்சிகளோ அரசியல் செய்ய இப்போதைக்கு தேவை இல்லை என்றே தோன்றுகிறது. அந்தளவுக்கு இளைஞர்கள் மத்தியில் அக்கட்சி கடும் அதிருப்தியை சம்பாதித்து இருக்கிறது.

அதற்கு, அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போன்றோருக்கு குவியும் எதிர்வினைகளே சான்று.

இளைஞர்கள் மொழியில் சொல்வதென்றால், அவர்கள் எதைச்சொன்னாலும் அதை தங்கள் இஷ்டத்துக்கு கிழி கிழினு கிழித்து தொங்கவிடுவது அல்லது மரண கலாய் செய்வது என்ற ரீதியில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

சட்டப்பேரவையில், உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு பிரநிதியைக்கூட கொண்டிராத பாஜக, தங்கள்¢ இருப்பை பதிவு செய்ய விஜய், கமல்ஹாசன் போன்றோர் மீதான கணைகளை வீசுகிறது. எதை எதிர்பார்த்து அந்தக் கட்சி இவற்றையெல்லாம் செய்து வருகிறதோ, அதற்கு மேலாகவே அக்கட்சி இப்போது அறுவடை செய்திருக்கும்.

அவர்களின் திட்டமும் அதுதான். கடந்த பத்து நாள்களாக பெரும்பாலான தமிழர்கள் ஒருமுறையாவது பாஜகவின் பெயரையோ, தமிழிசை, ஹெச்.ராஜாவின் பெயரையோ உச்சரித்து இருப்பார்கள். இன்றைய நிலையில் அதுவே அவர்களுக்கான வெற்றிதானே.

விசிலடிச்சான் குஞ்சுகள், வ-ழக்கம்போல் அவர்களை ட்விட்டரில் கிழித்துத் தொங்க விடுவதும் நடக்கிறது. தமிழிசையை தரம் தாழ்ந்து விமர்சிப்பதும், மீம்கள் வெளியிடுவதையும் கண்டித்து ‘புதிய அகராதி’யில் சில நாள்களுக்கு முன், ‘தமிழிசையை இப்படி செய்வது தகுமா?’ என்று கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

இன்றைக்கு, தி.க. தலைவர் கி.வீரமணியும், அதே கருத்தை வலியுறுத்தி இருக்கிறார். பெரியார் மண்ணில் பெண் அரசியல் தலைவர்களை கொச்சைப்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளார். ஆனால், பாஜகவினரோ ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்ற கவுண்டமணி வசனம்போல் ‘ஜஸ்ட் லைக் தட்’ ஆகவே கடந்துவிட்டனர்.

ஹெச்.ராஜா, திடீரென்று நடிகர் விஜய்யை, ஜோசப் விஜய் என்று முழுப்பெயரையும் சொல்ல, மதத்தை புகுத்தி அரசியல் செய்வதாக விஜய் ரசிகர்கள் கொந்தளித்தனர்.

என்னதான் பெரியார் மண்ணில், பாஜகவினர் மண்டையை மறைத்தாலும் அவர்களுக்கு கொண்டையை மறைக்கத் தெரியாது என்பதற்கு ஹெச்.ராஜாவின், ஜோசப் விஜய் சொல்லாடல் ஒன்றே போதும்.

ஜோசப் விஜய் என்பதை நிரூபிப்பதற்காக ஹெச்.ராஜா விஜய்யின் வாக்காளர் அடையாள அட்டை ஒன்றை ட்விட்டரில் பதிவேற்றம் செய்திருந்தார். தனிமனித அடையாளத்தை பொதுவெளியில் பகிர வேண்டிய தேவை இல்லைதான்.

ஆனால் அதே தவறை, விஜய் ரசிகர்களும் பின்னர் செய்தனர். ஹெச்.ராஜாவின் அடையாள அட்டை என்ற பெயரில் யாரோ ஒருவரின் அடையாள அட்டையை பதிவேற்றம் செய்தனர்.

ஹெச்.ராஜாவின் தந்தை ஹரிஹரன் ஷர்மா என்றும், ஏன் உங்கள் பெயரின் பின்னால் ஷர்மா என்பதை குறிப்பிடவில்லை என்றும் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் அவரை, பிரியாணி அண்டாவை திருடியவர் என்றும், மதக்கலவரமூட்டுவதை உபத்தொழிலாகக் கொண்டவர் என்றும் கிண்டலடித்திருக்கின்றனர்.

அதற்கு ஹெச்.ராஜா தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையை வெளியிட்டு, ”மக்கள் அறியாமையால் யாரோ ஒருவரின் அடையாள அட்டையை வெளியிடுவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதே தவறை ஊடகங்கள் செய்வது கண்டிக்கத்தக்கது,” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டு இருந்தார்.

இதற்கும் விஜய் ரசிகர்களும், மாற்றுக் கட்சி ஆதரவாளர்களும் கடுமையாக கிண்டல் செய்து மீம்களை பதிவிட்டுள்ளனர். மீம்கள் பல நகைச்சுவையாகவும், ரசிக்கும்படியாகவும் இருப்பினும், கருத்தியல் ரீதியில் விமர்சனங்களை முன்வைப்பதே நாகரீக சமூகத்திற்கான அடையாளமாகக் கொள்ள முடியும்.

 

இணைப்பு: வீடியோ மீம்ஸ்.