Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பட்ஜெட்: நடுத்தர வர்க்கத்தினருக்கு பெருத்த ஏமாற்றம்!

2018-2019ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினரும், சம்பளக்காரர்களும் எதிர்பார்த்த வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படாததால், பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

2018-2019ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையை நடுவண் நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று காலை 11 மணியளவில் வாசிக்கத் தொடங்கினார். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு பிறகான பட்ஜெட் என்பதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. மேலும், பாஜக அரசின் கடைசியாக வாசிக்கும் முழு ஆண்டுக்கான பட்ஜெட் என்பதால் பல்வேறு சலுகைகளும் எதிர்பார்க்கப்பட்டது.

நாடு முழுவதும் 8.27 கோடி வரி செலுத்துவோர் உள்ளனர். அவர்களில் 1.88 கோடி பேர் மாத சம்பளக்காரர்கள். மாத சம்பளம் பெறுவோருக்கான வருமானவரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் ஏதுமில்லை. முந்தைய நிலவரம் அப்படியே தொடரும். நிரந்தர கழிவு முறை மீண்டும் தொடரும். அதன்படி, ரூ.40 ஆயிரம் நிரந்தர கழிவாக கொள்ளலாம். போக்குவரத்து, மருத்துவ செலவினங்களுக்கு ரூ.40 ஆயிரம் நிரந்தர கழிவாக தொடரும் என்று அருண் ஜெட்லி அறிவித்தார்.

இதனால் வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயரும் என எதிர்பார்த்திருந்த மாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள், நடுத்தரவர்க்கத்தினர் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.

பட்ஜெட் துளிகள்:

2017-18 நிதியாண்டில் நேரடி வரி 12.6% அதிகரித்துள்ளது. மறைமுக வரி 18.7% அதிகரித்துள்ளது.

85.51 லட்சம் பேர் புதிதாக வருமான வரித்தாக்கல் செய்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கை கடந்தாண்டு 66.26 லட்சமாக இருந்தது.

குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கான ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. குடியரசுத்தலைவருக்கான ஊதியம் 5 லட்சமாகவும், துணைக் குடியரசுத்தலைவர் ஊதியம் 4 லட்சமாகவும், ஆளுநர்களின் ஊதியம் 3.5 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

நிதி பற்றாக்குறை:

கடந்த 2017-2018 நிதியாண்டில் ரூ.5.95 லட்சம் கோடியாக (3.5%) நிதி பற்றாக்குறை இருந்தது. 2018-2019 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3% நிதி பற்றாக்குறையைக் கொண்டுள்ளதாக அருண்ஜெட்லி தெரிவித்தார்.

ஆதார் மூலம் தனிநபர் ஒருவர் தனித்த அடையாளத்தை பெற்றுள்ளதாகவும், விரைவில், தனிப்பட்ட நிறுவனங்களுக்கும் இத்தகைய ஆதார் எண் வழங்கப்படும் எனவும் நிதியமைச்சர் கூறினார்.

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் மூலம் ராணுவம் நவீனமயமாக்கப்பட்டுள்ளதாக அருண் ஜெட்லி தெரிவித்தார். அந்நிய நேரடி முதலீட்டுக்காக தனி துறை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கிராமங்களுக்கு இலவச வைஃபை வசதி ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் 5 லட்சம் கிராமங்களில் ஹாட்ஸ்பாட் தளங்கள் உருவாக்கப்படும். அதற்காக, ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கும் உதான் திட்டத்தின்கீழ் ஏற்கனவே 16 விமான நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் அதிக விமான நிலையங்கள் இணைக்கப்படும் என அருண்ஜெட்லி தெரிவித்தார். இந்திய விமான நிலைய ஆணையத்தின்கீழ் 154 விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்திய ரயில்வேக்கு 2018-2019 நிதியாண்டுக்கு ரூ.1,48,528 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எல்லா ரயில் நிலையங்களிலும் வைஃபை, சிசிடிவி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும் என நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார்.

சுற்றுலா பயணிகளை கவர 10 சுற்றுலா தளங்கள் மேம்படுத்தப்படும். இதற்கான வசதிகள் அம்ருத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்.

வேலைவாய்ப்பு:

கடந்தாண்டில் அரசு என்ன செய்தது என்பதை அருண்ஜெட்லி பட்டியலிட்டார். அனைத்து துறைகளிலும் 3 ஆண்டுகளுக்கான தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் 12%-ஐ மத்திய அரசு பங்கு வகித்துள்ளதாக அருண் ஜெட்லி தெரிவித்தார்.

முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கோடி கடனுதவி செய்யப்படும் என அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். இந்த நிதியாண்டில் முத்ரா யோஜனா திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட ரூ.10.38 கோடி கடனுதவியில் 70% பெண்களை சென்றடைந்ததாக அருண் ஜெட்லி கூறினார்.

ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் பெரிய தரவுத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசு சார்பற்ற சொத்துக்களை சமாளிக்க விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கங்கை நதியை தூய்மைப்படுத்த 187 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். கங்கையை சுற்றி அமைந்துள்ள 115 மாவட்டங்களில் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஏழைகளுக்கு இலவச மருத்துவக் காப்பீடு:

10 கோடி ஏழை குடும்பங்களுக்கு வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ வசதிக்கான காப்பீடு வழங்கப்படும். இதன் மூலம் 50 கோடி மக்கள் பயனடைவார்கள்.

மாணவர்களுக்கு தரமான கல்வியை மேம்படுத்துவதற்காக, கல்வித்துறையில் பள்ளிகளில் உள்கட்டமைப்பை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கோள்ளப்படும். எஸ்.சி. மாணவர்களுக்கான பள்ளிகளும், ஆசிரியர்களுக்கான திட்டங்களும் ஊக்குவிக்கப்படும்.

உஜ்வாலா திட்டத்தின் கீழ் 8 கோடி ஏழைப் பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்படும் எனவும், 4 கோடி கிராமப்புற வீடுகளுக்கு கட்டணமில்லா மின்சார இணைப்பு வழங்கப்படும் எனவும் அருண்ஜெட்லி தனது பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். இரண்டு கோடி கழிப்பறைகள் அடுத்த ஒரு வருடத்தில் ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம் கட்டப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

காற்று மாசுபாட்டை கட்டுபடுத்த ஹரியானா, பஞ்சாப், டெல்லி மாநிலங்களுக்கு நிதி உதவி செய்யப்படும்.

கால்நடை மற்றும் மீன்வளத்துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

‘ஆப்பரேஷன் கிரீன்’ திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விளை பொருள் ஏற்றுமதியை ஊக்குவிக்க 42 பிரம்மாண்டமான உணவு பூங்காக்கள் அமைக்கப்படும் என அருண்ஜெட்லி தெரிவித்தார். தேசிய மூங்கில் திட்டத்திற்கு ரூ.1,290 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாய சாகுபடி மற்றும் அவற்றை சார்ந்தவற்றிற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் நலனை பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது. அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் அதன் உற்பத்தி விலையைவிட, குறைந்தபட்ச ஆதார விலை 1.5 மடங்கு உயர்த்தப்படும். வேளாண் சந்தைகள் அமைக்க ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நலனில் இந்த அரசு அக்கறை கொண்டுள்ளது எனவும், 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் எனவும் அருண்ஜெட்லி கூறினார்.

நலிந்தோருக்கு நன்மை செய்யும் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்கும்; இந்த பட்ஜெட்டில் விவசாயம், கல்வியை வலிமைப்படுத்த முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

உலகின் 5 வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா விரைவில் எட்டும். 2018- 2019 ஆம் நிதியாண்டின் 2 ஆம் பகுதியில் 7.2% முதல் 7.5% வரை பொருளாதார வளர்ச்சி இருக்கும்”, என அருண் ஜெட்லி தனது உரையில் தெரிவித்தார்.