Saturday, March 2மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

‘வசூல் சக்ரவர்த்திக்கு’ ஐஏஎஸ் பதவி உயர்வா?; கொதிப்பில் கூட்டுறவுத்துறை!

கூட்டுறவு சங்கங்களிடம் டார்கெட் வைத்து வசூல் வேட்டை நடத்தும் தணிக்கைத்துறை அதிகாரிக்கு கன்ஃபெர்டு ஐஏஎஸ் ஆக பதவி உயர்வு வழங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று கூட்டுறவுத்துறை பணியாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் 4474 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்கள் வாயிலாக அதன் உறுப்பினர்களுக்கு வேளாண் கடன், நகை அடகு கடன் போன்ற நிதிச்சேவைகளும், வேளாண்மைக்குத் தேவையான மானிய விலை உரம் உள்ளிட்ட இடுபொருள்களும் வழங்கப்படுகின்றன. தவிர, உறுப்பினர்களிடம் இட்டு வைப்பும் பெறப்படுகிறது.

தனியாருக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் நகை அடகுக் கடன் வழங்குவதில் கூட்டுறவு சங்கங்கள் கொடிகட்டி பற க்கின்றன.

இதுபோன்ற நிதிச்சேவைகள் நடைபெறுவதால், முறைகேடுகளைக் களையும் நோக்கில் ஒவ்வொரு கூட்டுறவு சங்கமும் ஆண்டுக்கு ஒருமுறை தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.

கூட்டுறவு தணிக்கைத்துறை இணை இயக்குநர் மணிவாசகத்தைக் கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய கூட்டுறவு ஊழியர்கள். (கோப்பு படம்).

இதற்கென தனித்தனி மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, அதற்கென தணிக்கை அலுவலர்கள் (ஆடிட்டர்) நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டலத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் தணிக்கைப் பணிகளைக் கண்காணிக்க, இணை இயக்குநர் மணிவாசகம் நியமிக்கப்பட்டு உள்ளார்.

அவருடைய தலைமையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உதவி இயக்குநர் (தணிக்கை) அந்தஸ்தில் மாவட்ட அளவிலான அதிகாரியும், அவர்களுக்குக் கீழ் 150க்கும் மேற்பட்ட தணிக்கை அலுவலர்களும் பணியாற்றி வருகின்றனர்.

கூட்டுறவு சங்கங்களை ஆய்வு செய்யும் தணிக்கை அலுவலர்கள், முறைகேடு நடந்ததாக ஸ்பெஷல் ரிப்போர்ட் அனுப்பி விடுவோம் என்று மிரட்டுவதாகவும், அவ்வாறு ஸ்பெஷல் ரிப்போர்ட் போடாமல் இருக்க ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று மிரட்டுவதாகவும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் மத்தியில் புகைச்சல் இருந்து வந்தது.

குறிப்பாக, சேலம் மண்டல கூட்டுறவுத் தணிக்கைத்துறை இணை இயக்குநர் மணிவாசகம், வசூலில் ரொம்பவே கறார் காட்டுவதாகவும் கூறப்பட்டது.

கடந்த 11.12.2017ம் தேதி அவருக்கு எதிராக சேலத்தில், ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்க பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊர் முழுக்க, அவருடைய முறைகே டுகளைக் கண்டித்து பகிரங்கமாக சுவரொட்டிகளும் ஒட்டினர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய பெயர் கூற விரும்பாத கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் சங்க முன்னாள் மாநில நிர்வாகி, பல திடுக்கிடும் தகவல்களைச் சொன்னார்.

சேலம் மண்டல கூட்டுறவு தணிக்கைத்துறை இணை இயக்குநர் மணிவாசகம், ஒவ்வொரு சங்கத்திடமும் டார்கெட் வைத்து பணம் வசூலிக்கிறார்.

அவர் கேட்பதாகக்கூறி, தணிக்கை அலுவலர்கள் பணம் கேட்டு நச்சரிக்கின்றனர். பணம் கொடுக்காவிட்டால், ‘ஸ்பெஷல் ரிப்போர்ட் அனுப்பப்படும்; மேலிடத்தில் பேசிக்கொள்ளுங்கள்’ என்று மிரட்டுகின்றனர்.

இது தொடர்பாக கூட்டுறவு தணிக்கைத்துறை இயக்குநர் ராமசாமியிடம் நேரடியாக புகார் அளித்திருக்கிறோம். அவரும், சேலம் மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நேரடியாக சென்று தணிக்கை அலுவலர்களிடம் விசாரணை நடத்தினார்.

80 சதவீத தணிக்கை அலுவலர்கள், மணிவாசகம் மீது பணம் கேட்டதாகவும், வசூலித்ததாகவும் ஒப்புக்கொண்டு கைப்பட வாக்குமூலம் எழுதிக் கொடுத்துள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். அவருடைய சொந்த ஊரான கடலூர் மாவட்டத்தில் 60 ஏக்கர் நிலம் வாங்கிப்போட்டுள்ளார். சில சினிமா படங்களுக்குக்கூட நிதியுதவி செய்ததாகவும் சொல்கின்றனர்.

டார்கெட் வைத்து வசூல் செய்யும் மணிவாசகத்திற்கு கன்ஃபெர்டு ஐஏஎஸ் ஆக பதவி உயர்வு வழங்கும் வேலைகள் அரசுத்தரப்பில் நடந்து வருகின்றன. அதற்கான கோப்புகள் வேகமாக நகர்வதாகவும் தெரிகிறது.

அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், ஐஏஎஸ் ஆக பதவி உயர்வு வழங்கும் பணிகளையும் தமிழக அரசு உடனடியாக கைவிட வேண் டும். அவரை உடனடியாக இடமாற்றமும் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், விரைவில் அவருக்கு எதிராக மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரும் போராட்டம் நடத்தப்படும்.

இப்படி பல பகீர் குற்றச்சாட்டுகளை சொன்னார் அந்த முன்னாள் நிர்வாகி.

இணை இயக்குநர் மணிவாசகம், கன்ஃபெர்டு ஐஏஎஸ் ஆக பதவி உயர்வு பெறுவதற்கு ஆளுங்கட்சியின் அதிகார மையத்தில் துணை பொறுப்பில் உள்ள ஒருவரின் நேர்முக உதவியாளர் மூலமாகவும், அரசு ஊழியர்கள் சங்க முன்னாள் நிர்வாகி சூரியமான நபர் ஒருவர் மூலமாகவும் மேல்மட்டத்திற்கு ‘கவனிப்புகளை’ முடித்துவிட்டதாகவும் ஒருதரப்பினர் கூறுகின்றனர்.

மற்றொரு தரப்போ, ”கூட்டுறவு சங்கம் என்றாலே சில விஷயங்கள் அப்படி இப்படித்தான் இருக்கும். தணிக்கை அலுவலர்கள் தணிக்கைக்கு வரும்போது 10 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை வாங்குவது வழக்கம்தான்.

ஆனால், மணிவாசகத்திற்கு எதிராக பணியாளர்கள் சங்கத்தினர் ஊர் முழுக்க சுவரொட்டிகளை ஒட்டியதும், தணிக்கை இயக்குநரிடம் நேரடியாக புகார் செய்த பிறகும் வசூல் வேட்டை இன்னும் அதிகமாகிவிட்டது.

இப்போதெல்லாம் கூட்டுறவு சங்கங்களிடம் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் நல்லவிதமாக அறிக்கை வழங்குகின்றனர். இல்லாவிட்டால், ஸ்பெஷல் ரிப்போர்ட் அனுப்புவதாக வெளிப்படையாகவே மிரட்டுகின்றனர்,” என்கின்றனர்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து, நாம் சேலம் மண்டல கூட்டுறவு தணிக்கைத்துறை இணை இயக்குநர் மணிவாசகத்திடம் மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்டோம். எந்த ஒரு கேள்விக்கும் தயக்கமின்றி தன் தரப்பு பதில்களை முன்வைத்தார்.

”கூட்டுறவு சங்கங்களில் ஒரு முறைகேடு என்றால் பாதிக்கப்படுவது மக்கள்தான். அங்கு புழங்குவது மக்களுடைய பணம். அதனால், தணிக்கையில் கொஞ்சம் கெடுபிடியாக இருந்தேன்.

அப்படி கெடுபிடி காட்டியதால்தான் 5 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டு உள்ளது. இதை பிடிக்காதவர்கள் என் மீது புகார் கூறுகின்றனர்.

என் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க இயக்குநருக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், புகாருக்குள்ளான என்னை விட்டுவிட்டு அவரே நேரடியாக தணிக்கை அலுவலர்களை விசாரிப்பது முறையல்ல.

இயக்குநரின் நடவடிக்கைகள் குறித்து அரசிடம் நானும் புகார் அளித்திருக்கிறேன். எனக்கு எதிராக எல்லா தணிக்கை அலுவலர்களும் புகார் கூறவில்லை. அவர்களில் ஒரு பிரிவினர் அப்படி புகார் கூறியிருக்கிறார்கள். இயக்குநர் கேட்டதன் பேரில் எழுதியும் கொடுத்துள்ளார்கள்.

எந்த ஒரு கூட்டுறவு சங்கத்திலும் நேரடியாக தணிக்கை செய்யும் களப்பணியாளர் பொறுப்பு இணை இயக்குநருக்கு கிடையாது. மாவட்ட அளவில் உதவி இயக்குநர்கள், அவர்களுக்குக் கீழ் தணிக்கை அலுவலர்கள் இருக்கின்றனர். அவர்களில் யாராவது பணம் வாங்கியிருக்கலாம்.

பணம் கொடுப்பது, வாங்குவது இரண்டுமே குற்றம்தான். நான் கேட்டதாகச் சொல்லி கூட்டுறவு சங்கங்களில் பணம் பெற்றிருந்தால், தணிக்கையாளர்கள்தான் முதல் குற்றவாளி ஆவர்.

நான் அவர்களிடம் பணம் ஏதும் பெறவில்லை. அப்படியிருக்கும்போது நான் கேட்டதாக என் பெயரை பயன்படுத்தியிருந்தால் அது அடுத்த குற்றமாகும்.

என் மனைவி ஓர் அரசு ஊழியர். கடலூரில் என் பெயரிலோ, உறவினர்கள் பெயரிலோ 60 ஏக்கர் நிலம் கிடையாது. இன்னும் சொந்தமாக கார் கூட வாங்கவில்லை.

எனக்கு ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் வரை ஊதியமாக கிடைக்கிறது. இரண்டரை லட்சம் ரூபாய் வருமான வரியும் செலுத்துகிறேன். வருமானத்துக்கு மீறி எந்த சொத்தும் சேர்க்கவில்லை. 60 ஏக்கர் நிலமும், பண்ணை வீடும் இருப்பது உண்மையெனில் தாராளமாக நிரூபிக்கட்டும்,” என்றார் மணிவாசகம்.

 

– பேனாக்காரன்.