Saturday, April 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு; கிராம சபையில் பரபரப்பு!; எடப்பாடி மண்ணில் ஓயாத சலசலப்பு!!

 

முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் இன்று (ஆகஸ்ட் 15, 2018) நடந்த கிராம சபைக்கூட்டங்களில் எட்டு வழிச்சாலை, விமான நிலைய விரிவாக்கத் திட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், ஒட்டுமொத்த அதிகார வர்க்கமும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறது.

 

கிராம ஊராட்சிகளின் மேம்பாட்டுக்காக ஆண்டுதோறும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நான்கு நாள்களில் கட்டாயமாக அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதன்படி, சுதந்திர தினமான இன்று தமிழகம் முழுவதும் உள்ள 12618 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடந்தன.

இக்கூட்டம் கூட்டப்படுவதற்கு ஏழு நாள்களுக்கு முன்பாக தண்டோரா போட்டு, மக்களுக்கு எந்த இடத்தில் கூட்டம் நடக்கிறது? எத்தனை மணிக்கு தொடங்குகிறது? விவாதிக்கப்பட வேண்டிய பொருள்கள் என்னென்ன என்பது முன்கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும்.

 

ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியின் மீது மக்களுக்கு இன்னும் முழு நம்பிக்கை ஏற்படவில்லை என்பதை நன்கு உணர்ந்துள்ள தமிழக அரசு, கிராம சபைக்கூட்டங்களில் கொண்டு வரப்படும் தீர்மானங்கள் மூலம் ஆட்சிக்கு மேலும் கெட்டப்பெயர் ஏற்பட்டு விடுமோ என அஞ்சியது.

 

எனெனில், கிராம சபைக்கூட்டத்தில் கொண்டு வரப்படும் தீர்மானம் ஒருபோதும் காலாவதியாகாது. கிராம சபைக்கூட்ட தீர்மானத்தை உயர்நீதிமன்றமும் ஒரு வழக்கில் முழுமையாக ஏற்றுக்கொண்டு தீர்ப்பு அளித்துள்ளதால், இதன் வலிமை எப்படிப்பட்டது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக்கோரியும், இப்போது கனன்று கொண்டிருக்கும் எட்டு வழிச்சாலைக்கு எதிராகவும் மக்கள் போர்க்கொடி தூக்கினால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என்பதால், பல மாவட்டங்களில் குறிப்பாக எடப்பாடியின் சொ ந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் கிராம சபைக்கூட்டம் பற்றி முறையான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

 

அதேநேரம், எட்டு வழிச்சாலை, விமான நிலைய விரிவாக்கம் ஆகிய திட்டங்களுக்கு எதிர்ப்பு கிளம்பிய கிராமங்களில் முன்கூட்டியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

 

குள்ளம்பட்டியில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில் விவசாயிகள் பன்னீர்செல்வம், கிரிதரன், வெற்றிவேல் உள்ளிட்டோர், எட்டு வழிச்சாலைத் திட்டத்தால் விவசாயமும், இயற்கை வளமும் அழிவதால் அத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று எடுத்த எடுப்பிலேயே தீர்மானம் கொண்டு வந்து ‘டாப் கியர்’ போட்டனர்.

 

அரசுத்தரப்பில் பார்வையாளராக வந்திருந்த அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சி உதவியாளர் செந்தில், குள்ளம்பட்டி கிராம உதவியாளர் வடிவேல் ஆகியோர் இந்த தீர்மானத்தைக் கேட்டவுடன் நிலை குலைந்தனர். செந்தில், விவசாயிகளுக்கு சில விளக்கங்களைக் கொடுத்தும், அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக பதிவேட்டில் குறிப்பிட முடியாது என மறுத்த கிராம உதவியாளர் வடிவேல், திடீரென்று பதிவேட்டை தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.

இதனால், வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் வராவிட்டால் உண்ணாவிரதம் அல்லது சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்று விவசாயிகள் கூறினர். நேரம் செல்லச்செல்ல நிலைமை வேறு திசையில் பயணிப்பதை அறிந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து, ‘எட்டு வழிச்சாலைக்கு எதிரான தீர்மானம் ஏற்கப்பட்டதாகவும், அதை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும்’ பதிவேட்டில் குறித்துக்கொண்டனர். அதற்கு அத்தாட்சியாக விவசாயிகள் கையெழுத்திட்டனர்.

 

குள்ளம்பட்டி ரமேஷ், குமரேசன் ஆகியோர் பயன்பாடின்றி கிடக்கும் கழிப்பறைகளை பயன்பாட்டுக்குக் கொண்டு வரக்கோரியும், தெருவிளக்கு, குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கேட்டும் தீர்மானம் கொண்டு வந்தனர்.

 

வெற்றிவேல் என்ற இளைஞர், குள்ளம்பட்டி கிராம ஊராட்சியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப்பணிகள், அதற்கான வரவு, செலவு கணக்குவழக்கு விவரங்களை சமர்ப்பிக்கும்படி குரலை உயர்த்தினார். அதற்கு கொஞ்சம்கூட அசைந்து கொ டுக்காத கிராம உதவியாளர் வடிவேல், தணிக்கை விவரங்களை சமர்ப்பிக்காமல் கடைசி வரை சிரித்தே சமாளித்தார்.

 

குப்பனூரில் நடந்த கிராம சபைக்கூட்டத்திலும் எட்டு வழிச்சாலைக்கு எதிராக இரண்டு தீர்மானங்களும், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கோரி ஒரு தீர்மானமும் கொண்டு வரப்பட்டது.

பூலாவரியில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில் மாஜி எம்எல்ஏ எஸ்.கே.செல்வம் தலைமையில் விவசாயிகள், எட்டு வழிச்சாலைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். அதற்கு அரசுத்தரப்பில் வந்திருந்த பிரதிநிதிகள், அரசுக்கு எதிராக எந்த தீர்மானமும் பதிவு செய்ய முடியாது என மறுத்தனர். இதைக் கேட்டு ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் பூலாவரி கிராம சபைக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. பிறிதொரு நாளில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடக்கும் எனத்தெரிகிறது.

 

பாரப்பட்டியிலும் எட்டு வழிச்சாலைக்கு எதிரான தீர்மானத்தை பதிவு செய்ய மறுத்து அதிகாரிகள் வெளிநடப்பு செய்ய முயன்றனர். அவர்களின் வாகனங்களை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அங்கே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கிராம சபைக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது எட்டு வழிச்சாலைக்கு எதிராக தீர்மானத்தை பெற்றதாகவும், ஆட்சித்தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் பதிவு செய்து கொண்டனர்.

 

சேலம் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுவதற்கும் அதைச் சுற்றியுள்ள ஓமலூர், பொட்டியபுரம், சிக்கனம்பட்டி, காமலாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று நடந்த கிராம சபைக்கூட்டத்திலும் அத்திட்டத்திற்கு எதிரான தீர்மானங்களை சம்பந்தப்பட்ட கிராம மக்கள் கொண்டு வந்தனர்.

 

எந்த ஒரு கிராம சபைக்கூட்டத்திலும் அந்தந்த ஊர்களில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்தோ, அதற்கான செலவினங்கள் குறித்த தணிக்கை அறிக்கையோ சமர்ப்பிக்கப்படாதது மற்றும் மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்து கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை ஏற்காமல் அதிகாரிகள் போக்குக் காட்டியது ஆகியவற்றால் பொதுமக்களும், விவசாயிகளும் அதிகாரிகள் மீதும், ஆட்சியாளர்கள் மீதும் மேலும் அதிருப்தி அடைந்துள்ளனர்.