Monday, June 17மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…! பாரதி எனும் காதல் மன்னன்!!

பாரதியார்: 11.12.1882 – 11.9.1921

 

பாரதி என்ற பெயரைக்
கேட்டதுமே புரட்சிக்கவி
என்ற முன்னொட்டும் மனதில்
வந்து அமர்ந்து கொள்ளும்.
ஆங்கிலேய அடக்குமுறையால்
கூன் விழுந்த இந்தியர்களிடையே
தன் பாட்டால் சுதந்திரத்தீ
மூட்டியவனை அப்படித்தான்
பார்க்க முடியும். கவித்திறத்தால்
பெண் விடுதலையையும்,
சுதந்திர வேள்வியையும் வளர்த்தவன்.
இவை மட்டுமே
அவன் முகமன்று.

நான் பாரதியின் இன்னொரு
முகத்தைப் பார்க்கிறேன்.
அதுதான் அவனுக்குள் இருக்கும்
காதல் உணர்வு.
சுதந்திர இந்தியா வேண்டும்
என்பதும் கூட காதல் உணர்வுதான்.
ஆனால் கண்ணம்மா மீது
அவன் கொண்ட காதல் அளப்பரியது.
அவனுக்கு மட்டுமேயானது.
139வது பிறந்த நாளைக்
கொண்டாடும் இன்றைய
நாளிலும் கூட அவன் எழுதிய
காதல் கவிதைகளை அத்தனை
எளிதில் கடந்து விட இயலாது.

 

காதலில் விழுவது
பலவீனமானவர்க்கே உரித்தானது
என்ற உளவியல் சிந்தனையும்
இல்லாமல் இல்லை. ஆனால்,
திகுதிகுவென்று எரியும் தீப்பந்தமாகவே
வாழ்ந்தவனிடத்திலும் கண்ணம்மா
மீதான காதல் பனிமலையாய்
உருவெடுத்து இருக்கிறது.
எரிமலையும் பனிமலையும்
ஒருங்கே கொண்ட குணாம்சம்
என்றால் அது பாரதிதான்.

 

‘கண்ணம்மா என் காதலி’யில்,

 

சுட்டும் விழிச்சுடர்தான் – கண்ணம்மா!
சூரிய சந்திரரோ?
வட்டக் கரியவிழி – கண்ணம்மா!
வானக் கருமைகொல்லோ?
பட்டுக் கருநீலப் – புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் – தெரியும்
நட்சத் திரங்களடீ!

 

என செஞ்சுருட்டியில்
பாட்டாகவே பாடி, நம்மை
அவன் பக்கம் சுருட்டிக் கொள்கிறான்.
அவனுக்குள் கண்ணம்மா மீதான
காதல் ஜீவநதியாய் ஓடிக்கொண்டே
இருந்திருக்கிறது. சாத்திரங்களை
பின்னர் பார்த்துக் கொள்ளலாம்
என்கிறான். சம்பிரதாய,
சடங்குகளைச் செய்து முடிக்கும்
வரை பொறுமை காக்க இயலாத அவன்,
இப்போதைக்கு முத்தமொன்று
போட்டுவிடலாம் என
கண்ணம்மாவின் பட்டுக்
கன்னங்களில் ‘பச்சக்’கென
முத்திரை பதித்து ரோமியாவாகிறான்.

 

ஆணைப் போல, இடம், பொருள், ஏவலின்றி ஒரு பெண்ணால் நடந்து கொள்ள முடியுமா? 21ம் நூற்றாண்டிலும் பெண்களுக்கான கட்டுப்பாடுகளில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழவில்லை. இந்த நிலையில், பாரதியின் காலத்தில் பொதுவெளியில் கணவனுக்கு இணையாக மனைவி சாலையில் நடந்து செல்வதே கூட மநுஸ்மிரிதியை மீறியதுதானே?

 

சாத்திரம் பேசுகிறாய் – கண்ணம்மா
சாத்திர மேதுக்கடீ?
ஆத்திரம் கொண்டவர்க்கே – கண்ணம்மா!
சாத்திர முண்டோடீ?
மூத்தவர் சம்மதியில் – வதுவை
முறைகள் பின்புசெய்வோம்;
காத்திருப் பேனோடீ? – இது பார்,
கன்னத்து முத்தமொன்று!

 

என மண்ணுக்கான நேயம் முதல்
மனைவி மீதான காதல் வரை
எதிலும் அவன் எல்லைகளை
வகுத்துக் கொண்டதே இல்லை.
பாரதி, காலம் கடந்தும்
நிற்க அதுவும் காரணம்.

 

காதலில் வீழ்ந்தார்க்கு, காணும் காட்சிகளில் எல்லாமே காதல் கொண்டவரின் முகம்தானே விரியும். எங்கெங்கு காணினும் சக்தியடா என பெண்களைப் போற்றியவனுக்கு, எங்கெங்கு காணினும் கண்ணம்மாவின் உருவமே தெரிந்து இருக்கிறது.

 

”நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;
நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;
பிரித்துப் பிரித்துநித மேக மளந்தே,
பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை;
சிரித்த ஒலியினிலுன் கை விலக்கியே,
திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்,”

 

என அலை கடலிலும், நீல வானத்திலும், கரையொதுங்கும் நுரைகளிலும், பட்டென உடையும் நீர்க்குமிழிகளிலும், மேகங்களிலும் கண்ணம்மாவின் முகத்தையே காண்கிறான் பாரதி.

 

பெண்ணின் கன்னம் சிவக்க சிவக்க முத்தமிடலாம். ஆனால், பாரதி அதிலும் உச்சம் தொடுகிறான். எப்படி எனில், ‘கன்னங் கன்றிச் சிவக்க முத்த மிட்டதில்லையோ?’ என்கிறான். முத்தமிட்டு முத்தமிட்டே கன்னங்கள் கன்றிப்போய் விட்டதாம். முத்தத்தால் யுத்தமே செய்திருக்கிறான் போலிருக்கிறது.

 

தலைவனும் தலைவியும் சந்தித்துக் கொள்ளும் இடமும், நேரமும் பாங்கன், பாங்கியர் மூலமாக குறியிட்டுச் சொல்வது சங்க இலக்கியங்களிலும் சொல்லப்பட்டு உள்ளன. பொது வெளிகளில் ஆணுக்கு இருக்கும் சுதந்திரம் பெண்ணுக்கு இல்லை. ஆனாலும், காதலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் காதலனிடம், தான் சொன்னபடி குறித்த இடத்திற்கு வராமல் ஏமாற்றுவது பெரும் குற்றமாகிவிடுகிறது. தலைவி என்ன காரணம் சொன்னாலும் அவன் ஏற்பதாயில்லை. அந்த ஏமாற்றத்தில் அவன் உடல் கொதிக்கிறது. மார்பு துடிக்கிறது.

 

கண்ணம்மா ஒருமுறை குறிப்பிடம் தவறியதால் ஏற்பட்ட ஏமாற்றத்தை,

 

தீர்த்தக் கரையினிலே – தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந் தால்வருவேன் – வெண்ணிலாவிலே
பாங்கியோ டென்றுசொன்னாய்.
வார்த்தை தவறிவிட்டாய் – அடி கண்ணம்மா!
மார்பு துடிக்குதடீ!
பார்த்த விடத்திலெல்லாம் – உன்னைப் போலவே
பாவை தெரியுதடி!

மேனி கொதிக்குதடீ – தலை சுற்றியே
வேதனை செய்குதடீ!
வானி லிடத்தையெல்லாம் – இந்த வெண்ணிலா
வந்து தழுவுதுபார்.

 

என்ற பாரதி, கண்ணம்மாவைப் பற்றிய தன் அபிப்ராயத்தை இன்னும் சொல்கிறார். அது உயர்வு நவிற்சியாக சொல்ல முடியாது. பாரதியின் வரலாறை அறிந்தவர்கள் கண்ணம்மா மீதான அவனின் காதலையும் அறிந்திருக்க முடியும்.

 

”தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கு மின்பமெல்லாம்
ஓருருவ மாய்ச்சமைந்தாய்! உள்ளமுதமே! கண்ணம்மா!”

 

என்ற நிலைப்பாட்டில்
அவன் இறுதிவரை மாறுபாடு
கொள்ளவில்லை. பாரதிக்கு,
கண்ணம்மா ஒருபோதும்
சலித்துப் போனவளாகத்
தெரியவில்லை.
வறுமை வாட்டியபோது,
கார்ல் மார்க்ஸூடன் துணை நின்ற
ஜென்னியைப் போல
கண்ணம்மாவால் (செல்லம்மா)
எல்லையற்ற சகிப்புத்தன்மையுடன்
இருக்க முடியவில்லை.
அவன் உலகக்கவிஞன்.
அவனை முழுமையாக
புரிந்து கொள்ள செல்லம்மாவுக்கே
இன்னொரு யுகம் தேவைப்படும்.
அவள் சாமானிய மனுஷி.
அவள், பாரதி எனும் பெருங்கடலை
சிறு கடுகுக்குள் அடைக்க முயன்று முயன்று தோற்றுப் போகிறாள்.

 

ஆயினும், கண்ணம்மா மீதான காதலால் அவளை தனது குலதெய்வம் என்றும் போற்றி வணங்குகிறான். காதலுக்கு உணர்வும், தூய இதயமும் போதுமானது. அதுவும் பணப்பொருளாதாரம் மையமாக வளராத அவன் காலத்திலும்கூட தூய்மையான அன்பை மட்டுமே வைத்துக்கொண்டு என்ன செய்துவிட முடியும் என்ற கேள்வியையும் கண்ணம்மா எழுப்புகிறாள்.

 

நூற்றாண்டைக் கடந்தும் சிந்திக்கும் ஆழம் பாரதிக்கு வாய்த்திருக்கிறது; அவனைப்போல பல மொழிகளில் புலமையோ, கவி புனையும் ஆற்றலோ இல்லாது போனாலும், ஆழாக்கு அரிசி இல்லாத நிலையிலும் கூட குடும்பம் நடத்திவிடும் திறன் பெற்றிருந்த வித்தைக்காரியாகவே கண்ணம்மா சகிப்புத்தன்மையுடன் வாழ்ந்திருக்கிறாள்.

 

யாவற்றையும் பாரதி உணர்ந்த வேளையில், கண்ணம்மா அவனுடன் இல்லை. குழந்தைகளுடன் பிறந்தகத்துக்குச் சென்றுவிட்டாள். உலகத்தையே நேசித்தவனுக்கு தன்னைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருந்த ஒரே ஜீவன் கண்ணம்மாதான் என்ற நம்பிக்கை அவனுக்கு ஆழமாக இருந்திருக்கிறது. அதனால்தான் அவன்…

 

நின்னைச் சரணடைந்தேன் – கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று

மிடிமையு மச்சமு மேவியென் னெஞ்சிற்
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவுபெறும் வணம்

துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட

நல்லது தீயது நாமறியோ மன்னை
நல்லது நாட்டுக! தீமையை யோட்டுக

நின்னைச் சரணடைந்தேன் – கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்.

 

எனப்பாடுகிறான் பாரதி. இந்த தேசத்தைப் பற்றி மட்டுமல்ல; உலகத்தையே நேசித்ததால்தான் அவன் உலகக்கவி, மகாகவி ஆனான். காலன் இரக்கமற்றவன்.

(டிச. 11, 2020 பாரதியின் 139வது பிறந்த நாள்)

 

– பேனாக்காரன்