Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இன்னொரு வன்முறையை கட்டவிழ்க்க தயாராகிறது தமிழக அரசு!; மாவோயிஸ்ட் விவேக் ‘திடுக்’ தகவல்

 

– சிறப்பு நேர்காணல் –

 

இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் முன்னணி தளகர்த்தர்களில் ஒருவரான விவேக் மாவோயிஸ்ட், கடந்த ஜூன் 27ம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு வந்திருந்தார். எப்போதும் காவல்துறை உளவுப்பிரிவின் நெருக்கமான கண்காணிப்பு வளையத்திற்குள் இருக்கும் அவரை நேரில் சந்தித்தோம். அவருடனான உரையாடலில் இருந்து…

புதிய அகராதி: பிரதமர் மோடியை கொல்வதற்கு மாவோயிஸ்டுகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளி வந்தனவே?

 

விவேக்: பிரதமர் மோடியைக் கொல்ல மாவோயிஸ்டுகள் சதி செய்ததாக, மஹாராஷ்டிரா மாநில உளவுத்துறை ஒரு கடிதத்தை வெளியிட்டது. இது எவ்வளவு பெரிய கேலி கூத்து என்றால், அப்படி கடிதம் எழுதியதாகச் சொல்லப்படும் நபர், ஜேஎன்யூ பல்கலையில் மாணவர் தலைவராக இருந்தவர்.

 

சிறையில் இருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்காக போராடிக் கொண்டிருப்பவர். அவருக்கு உதவி செய்ததாக சொல்லப்படும் ஆட்களும்கூட மிகப்பெரிய சமூக சேவகர்கள், வழக்கறிஞர்கள்.

 

மோடியை கொலை செய்வதாக யாரையாவது ஒருவரை காட்டுக்குள் இருந்து பிடித்து வந்து சொல்லியிருந்தால்கூட மக்கள் ஒருவேளை நம்பிவிடலாம். ஆனால் சாதாரணமாக நகர்ப்புறத்தில் இருப்பவரை பிடித்து வந்து இப்படி சொல்வது முட்டாள்தனமானது.

 

ரெண்டாவது விஷயம்… மாவோயிஸ்ட் போன்ற ஓர் அமைப்பு, இந்த மாதிரியான ஆள்களை வைத்து இப்படிப்பட்ட வேலையை செய்யாது. என்னத்த சொல்றதுனே தெரியல. ஒருவேளை, மோடியைக் கொல்லணும்னு முடிவு செய்தால் அதற்கென பயிற்சி பெற்ற ஆள்களை ரகசியமாக தயார் பண்ணித்தான் செய்வார்கள். ராஜிவ்காந்தியை புலிகள் கொன்றார்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்த கொலை எப்படி நடத்தப்பட்டது என்பது அது நடந்து முடியும் வரை யாருக்குமே தெரியாது.

 

இது உளவுப்பிரிவின் அப்பட்டமான… மோசடியான வேலை என்பதை நீங்க புரிஞ்சிக்கலாம். உளவுப்பிரிவு கைப்பற்றியதாக சொல்லப்படும் கடிதத்தில் யார் பணம் தருவார், யார் உதவி செய்வார் என்றெல்லாம் சிலருடைய பெயர்களைக் குறிப்பிட்டுள்ளனர். அந்தக் கடிதத்தில் தேதிகளைக்கூட தவறாக குறிப்பிட்டுள்ளனர்.

 

முன்னுக்குப்பின் முரணாக உளவுத்துறையே குளறுபடியான கடிதத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது. மாவோயிஸ்டுகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பெயர் இருக்கிறது. ஒரு கடிதம் எழுதுவது என்றால்கூட மிக ரகசியமாகத்தான் எழுதுவார்கள். இதெல்லாம் உளவுத்துறைக்கும் நன்றாகவே தெரியும்.

மோடியைக் கொல்ல சதி நடப்பதாக இதற்குமுன் ஏழெட்டு தடவை சொல்லியிருக்காங்க. இதைச் சொல்லியே சில பேரை சுட்டும் கொன்னுட்டாய்ங்க. மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இஷ்ரத் ஜஹான், மோடியைக் கொல்வதற்காக குஜராத்துக்குள் ஊடுருவியதாக சொல்லி, அந்தப் பெண்ணை சுட்டுக் கொன்றனர்.

 

உண்மையில், மஹாராஷ்டிராவில் அந்தப் பெண் தங்கியிருந்த அறையில் இருந்தே பிடித்துச்சென்ற காவல்துறையினர், குஜராத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து படுகொலை செய்தனர் என்பது பின்னாளில் தெரிய வந்தது.

 

மோடியினுடைய பிரபல்யம் வீழும்போதெல்லாம், அவர் மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரிக்கும்போதெல்லாம், ‘யாரோ என்னைக் கொல்லப் போறாங்க’ என்று சொல்லி மக்களின் பரிதாபத்தை அள்ளிக்கொள்ளும் அயோக்கியத்தனம்தான் வெளிப்படுகிறது.

 

இன்னொன்று… இப்படி காரணம் காட்டி ஜனநாயக ரீதியாக போராடும் சக்திகளை எல்லாம் ஒடுக்குவதற்கான சதி வேலையாகத்தான் இந்த விஷயத்தை பார்க்கிறேன். இது ஒரு அப்பட்டமான கேலிக்கூத்து.

 

இன்று இந்தியா முழுக்க, பழங்குடியினரிடம் இருந்து காட்டைப் பிடுங்கறது, மீனவர்களிடம் இருந்து கடலையும் அதை சார்ந்த பகுதிகளையும் பிடுங்கிறது, விவசாயிகளிடம் இருந்து நிலத்தைப் பிடுங்கிறது, தொழிலாளர்களின் வாழ்க்கையை அழிக்கிறது தொடர்கிறது. இந்த நிலைமைக்கு வந்த பின்னணியை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

 

புதிய அகராதி: முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கார்ப்பரேட்டுகளின் சுரண்டல்கள் மிக ஆழமாக ஊடுருவி இருக்கிறதே?

 

விவேக்: இன்றைக்கு ஏகாதிபத்தியங்கள் மிகப்பெரிய நெருக்கடியில் மூழ்கிக் கிடக்கின்றன. அமெரிக்காவும், சீனாவும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் வணிகப் போர் தொடுத்து வருகின்றன. கடன் பொருளாதாரத்தில்தான் அவர்களின் வண்டியே ஓடிட்டு இருக்கு. இந்தியாவில் உள்ள அவர்களின் அடிமை தரகு முதலாளிகள் ரிலையன்ஸ், டாடா உள்பட யாராலையும் வங்கிக்கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. வாராக்கடன் பட்டியலை எடுத்துப் பார்த்தால் விளங்கிக் கொள்ள முடியும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கார்ப்பரேட்டுகள் இருத்தலைத் தக்க வைத்துக்கொள்ள மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களைக்கூட பறித்தால் மட்டுமே தாங்கள் வாழ முடியும் என்பதுதான் உண்மை. அதனால்தான் நாடே அழிந்தாலும் பரவாயில்லை என்று இயற்கை வளங்களை சூறையாடுகின்றனர்.

 

எளிய மனிதர்கள் வாழ்விழந்து ஏதிலிகளாக மாறினாலும் பரவாயில்லையென்று அவர்களின் நிலங்களையும், இருப்பிடங்களையும் பறித்துக் கொண்டிருக்கின்றனர். இனியும் இவர்கள் நிச்சயம் நிறுத்த மாட்டார்கள்.

மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து துன்பப்படுவாங்க என்பதைப் பார்த்தோ, மீனவனுக்கு இந்த தொழிலை விட்டால் வேறு தொழில் இல்லையே என்பதைப் பார்த்தோ, பழங்குடிகளின் வாழ்க்கை கொடூரமாக அழியுதே என்று நினைத்தோ இவர்கள் நிறுத்தப்போவது இல்லை.

 

மக்களின் வாழ்க்கையை பறிக்கக்கூடிய பொருளாதார யுத்தத்தையும், அதை எதிர்த்துப் போராடக்கூடிய மக்களை ஒடுக்குவதற்கு அவர்கள் மீது நேரடியான யுத்தத்தையும் திணித்து, தங்கள் லாப வெறியை தீர்த்துக் கொள்கின்றனர்.

 

புதிய அகராதி: சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் எட்டு வழிச்சாலைக்கு எதிராக வெடித்துள்ள மக்கள் போராட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

விவேக்: எட்டுவழிச்சாலை திட்டத்தை எடப்பாடி அரசாங்கம் கொண்டு வந்திருக்கிறது. மலைகளில் குவிந்துள்ள கனிம வளங்களை எடுத்துச்செல்லும் ஜிண்டால் கம்பெனிக்காகத்தான் இந்த சாலை போடப்படுகிறது என்பது மக்களுக்கு தெளிவாகவே தெரிகிறது.

 

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் நலனுக்காக லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பலியிடுவது என்பது எப்படி வளர்ச்சி என்று இவர்கள் சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஏராளமான மக்களின் விளைநிலம் பறிபோகுது. அவர்களின் வீடுகள் போகுது. அவர்கள் வாழ்ந்த வரலாறு போகுது.

 

தமிழகத்திற்கு கொஞ்சநஞ்சம் இயற்கை அரணாக இருக்கக்கூடிய கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, ஜருகு மலை போன்ற மலைகள் கடித்துக் குதறப்படப் போகின்றன. காடுகள் அழிக்கப்படப் போகின்றன.

 

இப்படிப்பட்ட கொடூரமான செயலை… வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை சூறையாடுவது, மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதை எல்லாம் ஓர் அரசாங்கமே செய்கிறது என்றால், இந்த அரசாங்கத்தை எப்படிப்பட்டதாக நாம் பார்க்க முடியும்? இந்த அரசாங்கம் ஏகாதிபத்தியத்தின் எடுபிடியாக சொந்த மக்களை சூறையாடக்கூடிய அரசாங்கமாகத்தான் பார்க்க முடியும்.

 

இந்த அரசாங்கம், மிகப்பெரிய அயோக்கியத்தனத்தை செய்துக்கிட்டு இருக்கு. எதிர்த்துக் குரல் கொடுக்குறவங்கள… பாவம் ஒரு கிழவி… வயதான மூதாட்டி…. அவங்கள ஐம்பது போலீசு பிடிச்சுட்டு போறாங்க. மாணவர் அமைப்பைச் சேர்ந்த வளர்மதி போன்ற மாணவியை கைது செய்கின்றனர். மன்சூர் அலிகான் போன்ற நடிகர், ஒரு கருத்தை தெரிவிச்சார்ங்கிறதுக்காக பல நாள்கள் கழிச்சு அவரை வீட்டில் சென்று அரெஸ்ட் செய்கின்றனர்.

இதையெல்லாம் நாம் எப்படி பார்க்கிறது…? பன்னாட்டு நிறுவனங்களால் இயக்கப்படக்கூடிய கேடுகெட்ட ‘பனானா அரசாங்கம்’ என்று சொல்வார்களே அப்படித்தான் எடப்பாடி அரசு இருக்கிறது. அந்தமாதிரி நிலையில்தான் இன்றைக்கு மோடியினுடைய எடுபிடியாய்… கார்ப்பரேட்டுகளின் எடுபிடியாய் எட்டு வழிச்சாலை திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இது பசுமை வழிச்சாலை அல்ல. பசுமையை அழிக்கும் சாலை. அதுமட்டுமல்ல. மக்களின் வாழ்வை அழிக்கக்கூடிய கொடூரமான திட்டம்.

 

புதிய அகராதி: சொந்த குடிமக்களின் மீது அரசாங்கமே வன்முறையை கட்டவிழ்ப்பதை எப்படி கருதுகிறீர்கள்?

 

விவேக்: ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழக மக்கள் தாமாகவே ஒன்றுதிரண்டு, ஓட்டுக்கட்சிகளை எல்லாம் மீறி தங்கள் கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர். ஏறத்தாழ இந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகம் போராட்டக்களமாக மாறி இருக்கிறது. ஜல்லிக்கட்டு, நீட் அதற்கப்புறம் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கு.

 

இது இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் அவர்களுக்குப் பின்னால் இருக்கும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கு. அவர்கள் எந்தெந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தணும்னு நினைக்கிறாங்களோ அதையெல்லாம் எதிர்த்து மக்கள் உறுதியாக போராடுகின்றனர்.

அது ‘நீட்’டாக இருக்கட்டும்… கெயில்லாக இருக்கட்டும். கதிராமங்கலம், நெடுவாசலாக இருக்கட்டும். ஸ்டெர்லைட் அல்லது இப்போது நடக்கும் எட்டுவழிச்சாலைக்கு எதிரான போராட்டமாக இருக்கட்டும்… கடந்த இரண்டு வருடங்களாக போராட்டங்கள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

 

இந்த சூழ்நிலையை நிறுத்த வேண்டுமானால் இந்திய அரசும், தமிழக அரசும் மிகப்பெரிய வன்முறையை மக்கள் மீது கட்டவிழ்த்து விட வேண்டிய தேவை இருக்கிறது என்பதை தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுக்கு முன்பே அரசியல் ரீதியாக நம்மால் உணர முடிந்தது. ஆனால், தூத்துக்குடியில் அரசு வன்முறையை நிகழ்த்தும் என ஊகிக்கவில்லை.

 

தூத்துக்குடியை தங்கள் வன்முறைக்கான களமாக, மக்களை அச்சுறுத்துவதற்கான அடையாளமாக, ஒரு வாய்ப்பாக அரசு பயன்படுத்திக் கொண்டது. துப்பாக்கிச்சூடுக்கு பிறகும் அங்கு அரசு அடக்குமுறையுடன்தான் நடந்து வருகிறது. மக்கள் அதிகாரம் அமைப்பின் முப்பதுக்கும்  மேற்பட்ட தோழர்கள் கைது, தேசிய பாதுகாப்பு சட்டம் போடுவது என அரசு மக்களை அச்சுறுத்தி வருகிறது.

 

இதுமட்டுமல்ல. இன்றைக்கு எட்டுவழிச்சாலைக்கான போராட்டங்கள் வந்துவிட்டது. இதை அடங்குவதற்கும் இன்னும் கொடூரமான வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடவும் வாய்ப்பு இருக்கு. நிச்சயமாக அரசின் கொடூர அடக்குமுறைகளை எதிர்த்து நிற்காமல், மக்கள் போராட்டங்கள் முன்னேற முடியாது.

 

அரசின் இன்னொரு கொடூர வடிவமாக இங்கு பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை என எல்லாவற்றையும் படிப்படியாக நசுக்கி வருகிறது. பேட்டி கொடுத்தால் கைது… கருத்து தெரிவித்தால் கைது… கூட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தால் கைது… இந்த மாதிரியான பாசிச சூழலை…. போராட்ட உரிமையை முற்றிலுமாக பறிக்கும் வேலையை அரசும், நீதித்துறையும் சேர்ந்தே செய்கிறது. இது இன்னும் மோசமாகக்கூட மாறலாம்.

 

நாளைக்கு யுஏபிஏ சட்டத்தைப் பயன்படுத்தி போராடக்கூடிய போராளிகளை மாவோயிஸ்டுகள், பயங்கரவாதிகள் என்று சொல்லி கைது செய்யவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதையெல்லாம் புரிந்து கொண்டு அரசை எதிர்த்து எந்தளவுக்கு உறுதியாகவும், திடமாகவும் போராடுகிறோமோ அந்தளவுக்குதான் நாம் வெற்றியடைய முடியும். அப்போதுதான் அரசின் அடக்குமுறைகளை நாம் முறியடிக்க முடியும்.

 

இந்த அரசுக்கும் ஜனநாயகத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. இது கார்ப்பரேட் நலனுக்காக தன்னுடைய சொந்த மக்களின் ரத்தத்தைக் குடிக்கும் அரசு என்பதை மக்கள் புரிந்து கொண்டால் மட்டும்தான் அவர்கள் தங்கள் போராட்டத்தின் அடுத்தக்கட்டத்திற்கு நகர முடியும்.

 

புதிய அகராதி: தமிழகத்தில் சுற்றுச்சூழல் மீதான அக்கறை அதிகரித்துள்ளதாக நினைக்கிறீர்களா?

 

விவேக்: அப்படி நினைக்கவில்லை. தமிழகத்தில்தான் இயற்கை மீதான தாக்குதல் அதிகளவில் நடக்கிறது. தோல் தொழிற்சாலைகளால் வட ஆற்காடு பகுதி முழுவதும் நாசமாகி விட்டது. ராணிப்பேட்டை, வாழத்தகுதியற்ற நகரமாகி விட்டது. அங்கு உற்பத்தி ஆகும் தோல் பொருள்களில் 80 சதவீதம் வெளிநாட்டு ஏற்றுமதிக்கானவை. பன்னாட்டு நிறுவனங்களுக்காக நாம் நம் வளத்தை அழித்துக் கொண்டிருக்கிறோம்.

 

ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் சாயக்கழிவுகளால் நீர்வளமும், மண் வளமும் கெட்டுவிட்டது. வால்மார்ட் உள்ளிட்ட மூன்று பன்னாட்டு கார்ப்பரேட்டுகளை நம்பித்தான் திருப்பூர் பின்னலாடை வர்த்தகமே நடந்து வருகிறது.

 

கூடங்குளத்தில் அணு உலையாலும், நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தாலும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையாலும் சுற்றுச்சூழல் கெட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. ஆயுதங்கள் வாங்க செலவிடும் தொகையில் சிறு பங்கை, மாற்று எரிபொருளைக் கண்டுபிடிக்க பயன்படுத்தினால் எல்லோருக்கும் நல்லது.

 

புதிய அகராதி: மக்கள் விரோத திட்டங்கள் என்று மத்திய பாஜகவும், தமிழக அதிமுக அரசும் யோசிக்கும்தானே?

 

விவேக்: அப்படி சிந்தித்து இருந்தால் அவர்கள் ஏன் தொடர்ந்து ஹைட்ரோகார்பன், மீத்தேன், எட்டுவழிச்சாலை போன்ற மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்துகின்றனர்? காங்கிரஸ் கட்சிக்கோ, இங்குள்ள திமுக மற்றும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்கோ மதச்சார்பற்ற கொள்கை, சிறுபான்மை நலன் என்ற முகமூடி தேவைப்பட்டது.

இப்போதுள்ள எடப்பாடி அரசுக்கும், மத்தியில் உள்ள பாஜகவுக்கும் அந்த முகமூடி தேவையில்லை. அவர்கள் அப்பட்டமாக ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை நிறுவக்கூடியவர்கள். டெல்லி தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி அரசு பணிந்து போகிறது.

 

புதிய அகராதி: அப்படி எனில், மக்கள் ஏன் காங்கிரஸை புறந்தள்ளிவிட்டு பாஜகவுக்கு ஓட்டுப்போட்டு அரிதி பெரும்பான்மையுடன் அரியணையில் அமர வைக்க வேண்டும்?

 

விவேக்: சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலைப் பற்றி ஓர் உண்மையைச் சொல்கிறேன். அங்கு தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 95.5 சதவீதம் பேர் பெரும் கோடீஸ்வரர்கள். இதிலிருந்து என்ன தெரிய வருகிறது…? தேர்தலில் சாமானியர்கள் போட்டியிடவே முடியாது என்பதுதானே?

 

அண்மைக் காலங்களாக தேர்தலில் வாக்குப்பதிவு விகிதம் கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. இது தேர்தல் ஜனநாயக அமைப்புக்கு நல்லதல்ல என்பதை உணர்ந்த பெரும் கட்சிகள், வாக்காளர்களை காசு கொடுத்து ஓட்டு வாங்க முடிவு செய்தன. அதற்காகத்தான் வசதி படைத்தவனுக்கு மட்டும் சீட் கொடுக்கப்படுகிறது. ஓட்டுக்கு காசு கொடுத்து சொந்த மக்களையே விபச்சாரிகளாக மாற்றிவிட்டனர்.

 

அத்வானியைவிட நரேந்திர மோடி பெரிய தலைவரா என்ன?. 2014 மக்களவை தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பிருந்தே மோடியை திட்டமிட்டு இந்த தேசத்தின் அடுத்த பிரதமர் அவர்தான் என்று கார்ப்பரேட் நிறுவனங்கள், அவர்களின் ஊடகங்கள் திட்டமிட்டு ஒரு பிம்பத்தைக் கட்டி எழுப்பின. பாசிச அடக்குமுறையுடன் ஒரு கட்சி ஆட்சியில் இருந்தால்தான் கார்ப்பரேட்டுகள் தாங்கள் நினைத்ததை சாதிக்க முடியும். அதற்காகவே கொண்டு வரப்பட்டவர்தான் மோடி.

 

#வீடியோ 

 

– பேனாக்காரன்.