Saturday, April 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

‘கருப்பன்’ – திரை விமர்சனம்!

ஆயுதபூஜை விடுமுறையைக் குறிவைத்து (செப். 29) வெளி வந்திருக்கும் படம் ‘கருப்பன்.

நடிகர்கள்: விஜய் சேதுபதி, தான்யா, பாபி சிம்ஹா, பசுபதி, கிஷோர், சரத் லோகித்ஷ்வா, சிங்கம் புலி, ரேணுகா, காவேரி மற்றும் பலர். இயக்கம்: ஆர்.பன்னீர்செல்வம். இசை: டி.இமான். ஒளிப்பதிவு: சக்திவேல். தயாரிப்பு: ஏ.எம்.ரத்னம்.

‘ரேணிகுண்டா’ படத்தின் மூலம் இளம் குற்றவாளிகளின் கதையைச் சொல்லி, கவனம் ஈர்த்த இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் விஜய் சேதுபதியின் தோளில் சவாரி செய்துள்ள படம்தான் ‘கருப்பன்’. கிராமத்து மாடுபிடி வீரனின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள்தான் இந்தப் படத்தின் ஒரு வரி கதை. ஆனால், தனக்குக் கிடைக்க வேண்டிய பெண், வேறு ஒருவருக்கு கிடைத்து விட்ட ஆற்றாமையில், ஓர் இளைஞன் என்னவெல்லாம் செய்கிறான் என்ற கோணத்தில் திரைக்கதை நகர்கிறது.

அப்படி தான் ஆசைப்பட்ட கதாநாயகியை பறிகொடுத்த வில்லன்தான் பாபி சிம்ஹா. அவர் விரும்பிய பெண்ணை கரம் பிடித்தவர், ஹீரோ விஜய் சேதுபதிதான் என்று நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இது கொஞ்சம் ‘கிழக்குச்சீமையிலே’ காலத்து பழைய கதைதான்.

ஊரில் பெரிய மனிதரான பசுபதி, தன்னுடைய காளையை அடக்கும் வீரனுக்குத்தான் தனது தங்கையை திருமணம் செய்து கொடுப்பேன் என அறிவிக்கிறார். எல்லோரும் எதிர்பார்த்தது போலவே காளையை அடக்கி, மேலும் சில பிரச்னைகளையும் சமாளித்து கதாநாயகியான தான்யாவை, அதாங்க பசுபதியின் தங்கையை மணம் முடிக்கிறார் ஹீரோ. கல்யாணம் ஆனாலும் பரவாயில்லை; அவர்களை பிரித்தாவது தான்யாவுடன் குடும்பம் நடத்த வேண்டும் என்ற (அ)நியாயமான (!) ஆசையில், சதிராட்டத்தில் ஈடுபடுகிறார் பாபி.

கிராமத்து ஹீரோ என்றாலே முறுக்கு மீசை இருக்க வேண்டும்; ‘பருத்திவீரன்’ படத்தில் வருவதுபோல் கரகர குரலில் பேசக்கூடிய நாலு பெருசுகள் இருக்க வேண்டும்; உறவுக்காரர்கள் என்ற பெயரில் கடா மீசைக்காரர்கள் இருக்க வேண்டும். அப்புறம், ஊரில் ஒரு தகராறு என்றால் ஹீரோ உள்பட பலரும் அருவா சுழற்றி சண்டையிட வேண்டும். குலதெய்வ வழிபாடு, திருவிழா காட்சிகள் இருக்க வேண்டும். இப்படித்தான் கிராமத்து கதைக்களம் இருக்க வேண்டும் என்று பாரதிராஜா போட்ட ஓர் அரசாணையை (!) இந்தப் படத்தில் பன்னீர்செல்வமும் அச்சர சுத்தமாக கடைப்பிடிக்கிறார்.

புதுசா என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்கள். அதுதானே?

படத்தின் ஆரம்பத்திலேயே வரும் வாடிவாசல் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் ஒரு காட்சியே, கொடுத்த காசுக்கு திருப்தி பட்டுக்கொள்ளலாம். அந்தளவுக்கு நேர்த்தியாக படமாக்கப்பட்டு உள்ளது. கொஞ்சம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும், காளையை விஜய் சேதுபதி அடக்கும் காட்சியில் தியேட்டரில் விசில் பறக்கிறது. டி.இமானின் பின்னணி இசையும் இந்தக் காட்சியை தூக்கி நிறுத்தி இருக்கிறது.

‘குமுதா ஆப்பி அண்ணாச்சி’ என்று வட சென்னை வட்டார வழக்கில் கெத்து காட்டிய விஜய் சேதுபதி, மதுரை வட்டார மொழியிலும் பின்னி பெடலெடுக்கிறார். படத்தில் தொய்வு ஏற்படும் போதெல்லாம் தனி ஒரு ஆளாக விஜய் சேதுபதிதான் படத்தை தூக்கி நிறுத்துகிறார். ரசிகர்களும் ஆப்பி அண்ணாச்சி!. மாடுபிடி வீரனாக கருப்பன் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார், விஜய் சேதுபதி.

கடைசி வரை ஹீரோவுடன் நட்பாக இருந்து கொண்டே, அவருக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார் பாபி சிம்ஹா. ஆனால், வசன உச்சரிப்பில் பாபி சிம்ஹாவிடம் கிராமத்து வாசனை இல்லை.

சிங்கம் புலியும், விஜய் சேதுபதியும் இணைந்து வரும் காட்சிகள் அலப்பறை. குறிப்பாக, டாஸ்மாக் பாரில் அவர்களின் அலப்பறை கலகலப்பூட்டுகின்றன. மீண்டும் சிங்கம் புலிக்கு நிறைய வாய்ப்புகள் வரலாம். கதாநாயகி தான்யாவும் வெகுவாக கவனம் ஈர்க்கிறார்.

லட்சுமி மேனன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தவற விட்ட வாய்ப்பை தான்யா சரியாகவே பயன்படுத்திக் கொண்டுள்ளார். கணவரின் தவறை அன்பாக சுட்டிக்காட்டி குட்டு வைப்பதிலாகட்டும், கணவரிடம் அன்பொழுக நடந்து கொள்வதிலாகட்டும் ரொம்பவே ரசிக்க வைத்திருக்கிறார் தான்யா.

விஜய் சேதுபதிக்கும், தான்யாவுக்கும் இடையே ஏற்படும் ஊடல், கூடல் காட்சிகளும் ரசிக்கும்படி இருக்கின்றன. பார்வையாளர்களும் வெகுவாக அந்தக் காட்சிகளில் தங்களை பொருத்திப் பார்த்துக் கொள்ளக்கூடும்.

அன்பு செய்து வாழ்வதிலும், அன்புக்குரியவர்களுடன் வாழ்வதும்தான் சந்தோஷமே என்ற மெசேஜையும் சொல்லி முடிக்கிறது கருப்பன்.

படத்தின் மைனஸ் என்றால், டி.இமானின் இசையும், எளிதில் யூகித்து விடக்கூடிய திரைக்கதையும். குறிப்பாக, இமான் இசையில் எந்தப் பாடலும் மனதில் நிற்கவில்லை. அந்தப் பாடல்களும் இளையராஜா இசையை நினைவூட்டும் வகையில் இருக்கிறது.

படத்தின் பிளஸ், விஜய் சேதுபதியும், ஜனரஞ்சகமாகவும் அதே நேரம் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய வகையில் கதை சொன்ன விதமும், கிராமத்து அழகை அள்ளிக் கொடுத்த ஒளிப்பதிவும்.

பழைய மொந்தையில் புதிய கள் என்றாலும், நீண்ட நாள்களுக்குப் பிறகு, ஏ, பி, சி என எல்லா செண்டர் ரசிகர்களையும் திருப்தி படுத்தி இருக்கும் என்று சொல்லலாம். டீசர் இணைப்பு. 

– வெண்திரையான்.