Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கிரிக்கெட்: இந்தியா போராடி தோல்வி; ஆஸி., முதல் வெற்றியை சுவைத்தது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி கடுமையாக போராடினாலும் தோல்வியைத் தழுவியது. தொடர் தோல்வியால் துவண்டு போயிருந்த ஆஸ்திரேலியா, முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும், மூன்று டி-20 போட்டிகளிலும் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை ஏற்கனவே இந்திய அணி 3-0 கணக்கில் வென்று உள்ளது.

இருப்பினும், 5 போட்டிகளிலும் ஆஸி.,யை வீழ்த்த வேண்டும் என்று முனைப்புடன் இந்தியாவும், எப்படியும் இந்தப் போட்டியில் வென்று காட்டி, தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற வெறியுடன் ஆஸி., அணியும் நேற்று (செப். 28) நான்காவது ஒரு நாள் போட்டியில் களமிறங்கின. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் போட்டி நடந்தது.

உள்ளே – வெளியே:

இந்திய அணியில் இதுவரை களமிறங்காத வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, உமேஷ் யாதவ், முகமது ஷமி, அக்சர் படேல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ஆஸி., அணியில் ஆஷ்டன் ஏகர், மேக்ஸ்வெல் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக மாத்யூ வேட், ஆடம் ஸாம்பா சேர்க்கப்பட்டனர்.

டேவிட் வார்னர் சதம்:

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் ஆகியோர் அபாரமாக ஆடினர். டேவிட் வார்னருக்கு இது 100வது ஒரு நாள் போட்டியாகும். இருவரும் ரன் குவிக்கும் வேகத்தைப் பார்த்தபோது எப்படியும் 350 ரன்களுக்கு மேல் குவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

அபாரமாக ஆடிய டேவிட் வார்னர் தனது 14வது சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் 124 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சரவெடி காட்டிய ஆரோன் பின்ச் துரதிர்ஷ்டவசமாக 94 ரன்களில் அவுட் ஆகி, சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். பின்னர் வந்த கேப்டன் ஸ்மித் 3 ரன்களில் நடையைக் கட்டினார். டிராவிஸ் ஹெட் 29, ஹேன்ட்ஸ்கோம்ப் 43 ஆகியோரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 334 ரன்களை குவித்தது. இந்தத் தொடரில் ஓர் அணி குவித்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.

இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். எனினும், அவர் 71 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

இந்தியா அபாரம்:

அடுத்து, 335 ரன்கள் இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களான ரோஹித் ஷர்மா, ரஹானே இருவரின் ஆட்டமும் அபாரமாக இருந்தது. இந்த பார்னர்ஷிப்பே, இந்தியாவை வெற்றி பெறச் செய்து விடும் என்று நம்பிக்கை அளிக்கும் வகையில் அவர்களின் ஆட்டம் இருந்தது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக ரோஹித் ஷர்மா 65 ரன்களில் ரன்&அவுட் ஆனார். ரஹானே 53 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் கோஹ்லி, இந்தப் போட்டியிலும் நீண்ட நேரம் களத்தில் நிற்கவில்லை. அவர் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியிலும் நான்காவது விக்கெட்டுக்கு களமிறக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா, ஆபத்பாந்தவனாக இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் 41 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன்பின் இந்திய அணிக்கு எந்த இணையும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

விக்கெட் சரிவு:

கேதர் ஜாதவ் மட்டும் கொஞ்சம் தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 67 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய தோனி, மனீஷ் பாண்டேவுடன் இணைந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வார் என எதிர்பார்த்த நிலையில் பாண்டே 33 ரன்களில் வெளியேறினார். இதனால் அணியின் மொத்த சுமையும் தோனியின் தோள்களில் விழுந்தது. அவரும் பந்தை எல்லைக்கோட்டுக்கு விரட்ட போராடினார். ஆனாலும், அவரை வீழ்த்தும் முனைப்பில் பந்து வீச்சில் தீவிரம் காட்டினார்கள் ஆஸ்திரேலிய வீரர்கள். கடைசியில் தோனியும் ஒரு சிக்ஸர் அடித்த திருப்தியுடன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அக்சர் படேல் 5 ரன்களில் அவுட் ஆனார்.

முகமது ஷமி 6 ரன்களுடனும், உமேஷ் யாதவ் 2 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து, 313 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெற்றிக்காக போராடி இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ரிச்சர்ட்ஸன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டேவிட் வார்னர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்ந்து தோல்வியால் துவண்டிருந்த ஆஸ்திரேலியா அணி, முதல் முறையாக இந்த தொடரில் வெற்றியை சுவைத்தது. அத்துடன், வெளிநாட்டு மண்ணில் தொடர்ந்து 11 போட்டிகளில் தோல்வி கண்டிருந்த ஆஸ்திரேலியா அணி, இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தது.

ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வரும் அக்டோபர் 1ம் தேதி நாக்பூரில் நடக்கிறது.

நழுவிய சாதனை:

கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ் 1, ஸ்ரீலங்கா 5, ஆஸ்திரேலியா 3 என தொடர்ந்து 9 ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளது. இந்தப் போட்டியில் வென்றிருந்தால் கேப்டனாக தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்ற சாதனைக்குரியவராக இருப்பார். ஆனால், நான்காவது ஒரு நாள் போட்டியில் தோற்றதால் கோஹ்லியின் சாதனை கைநழுவிப் போனது. வீடியோ இணைப்பு .