Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!; பின்னணி என்ன?

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் விரைவில் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா, கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். அதைத்தொடர்ந்து, மஹாராஷ்டிரா மாநில ஆளுநராக உள்ள சி.வித்யாசாகர் ராவ், தமிழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு செப். 22ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இறந்தார். இதைத்தொடர்ந்து அதிமுக சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ் அணி என மூன்று அணிகளாக உடைந்தது. தமிழக ஆளுங்கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பங்களால் ஆட்சியும் ஸ்திரத்தன்மையை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. தமிழகத்திற்கு முழுநேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழகத்திற்கு பன்வாரிலால் புரோஹித்தை புதிய ஆளுநராக நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். தமிழகம் மட்டுமின்றி, அஸ்ஸாம், அருணாச்சல் பிரதேசம், பீஹார், மேகாலயா ஆகிய நான்கு மாநிலங்களுக்கும், அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்திற்கும் புதிய ஆளுநர்களை நியமித்து குடியரச்சுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

பன்வாரிலால் புரோஹித், விரைவில் தமிழக ஆளுநராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூர்வீகம்:

பன்வாரிலால் புரோஹித்தின் பூர்வீகம், மஹாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதி ஆகும். 1940ம் ஆண்டு, ஏப்ரல் 16ம் தேதி பிறந்தார். தற்போது அவருக்கு 77 வயது ஆகிறது. ஹிதாவடா என்ற நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இப்போதும் இருந்து வருகிறார்.

அரசியல் பயணம்:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவராக விளங்கிய பன்வாரிலால் புரோஹித், பின்னர் பாஜகவில் ஐக்கியம் ஆனார். கட்சி நிர்வாகம் மற்றும் அமைச்சர் என இரண்டிலும் பழுத்த அனுபவம் கொண்டவர்.

1978ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், நாக்பூர் கிழக்கு தொகுதியில் இருந்து முதன்முதலாக எம்எல்ஏ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980ம் ஆண்டு, நாக்பூர் கிழக்கு தொகுதியில் இருந்து எம்எல்ஏ ஆனார். 1982ம் ஆண்டில், அவர் மஹாராஷ்டிரா மாநில நகர்ப்புற வளர்ச்சி, குடிசைகள் மேம்பாடு மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்தார்.

பின்னர் 1984 மற்றும் 1989ம் ஆண்டுகளில் நடந்த மக்களவை தேர்தலில் நாக்பூர் தொகுதியில் வெற்றி பெற்று, எம்பி ஆனார். காங்கிரஸ் கட்சியில் நல்ல செல்வாக்குடன் இருந்தாலும், பாஜகவின் ராம ஜென்ம பூமி இயக்கத்திலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான கரசேவையிலும் தன்னை ஈபடுத்திக் கொண்டதால் காங்கிரஸ் மேலிடத்தின் அதிருப்திக்கு ஆளானார். அதனால் அவர் அக்கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தோல்வி முகம்:

1991ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தத்தா மேக்கேவிடம் தோல்வி அடைந்தார். 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு, மீண்டும் எம்பி ஆனார்.

அப்போது பாஜகவில், வேகமாக வளர்ந்து வந்த பிரமோத் மஹாஜனுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் வழங்கப்பட்டு வந்த முக்கியத்துவத்தை பன்வாரிலால் புரோஹித் ரசிக்கவில்லை. அதனால் ஏற்பட்ட அதிருப்தியில் பாஜகவில் இருந்து, 1999ல் திடீரென்று விலகினார்.

அதையடுத்து மீண்டும் தாய்க்கட்சியான காங்கிரசில் இணைந்தார். 2003ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்தும் வெளியேறிய பன்வாரிலால் புரோஹித், விதர்பா ராஜ்ய கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். ஆனால், தனி ஆவர்த்தனமாக அவரால் சோபிக்க முடியவில்லை.

அதனால் 2004ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் நாக்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். பிறகு, 2009ம் ஆண்டில், பாஜக ஆதரவுடன் அதே தொகுதியில் போட்டியிட்ட பன்வாரிலால் புரோஹித், காங்கிரஸ் வேட்பாளர் விலாஸ் முட்டம்வாரிடம் தோல்வி அடைந்தார். அதன்பின், பாஜகவில் மீண்டும் தன்னை இணைத்துக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு, அஸ்ஸாம் மாநில ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். விரைவில் அவர் தமிழக ஆளுநராக பொறுப்பேற்க உள்ளார்.