Wednesday, May 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கமல் – ரஜினி: இருதுருவ அரசியலா? இணைந்த கைகளா?

விரைவில் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்த கமல்ஹாசன், தன்னை மக்களுக்கு பிடிக்கவில்லை எனில், மக்கள் விரும்பும் ஒருவருக்கு இயன்ற உதவிகள் செய்யவும் தயாராக இருக்கிறேன் என்று திடீரென்று பல்டி அடித்துள்ளார்.

கோடம்பாக்கம் என்பது திரையுலகின் கனவுத்தொழிற்சாலை மட்டுமல்ல. அது, அரை நூற்றாண்டுக்கும் மேலாக அரசியல் தலைவர்களை உருவாக்கும் தொழிற்கூடமாகவும் இருந்து வந்திருக்கிறது. இப்போதும் தமிழர்களில் கணிசமானோர் கோடம்பாக்கத்தின் வாசலில்தான் தலைவர்களை தேடிக்கொண்டிருக்கின்றனர்.

கமல், ரஜினி ஆகியோருக்குள் எழுந்துள்ள அரசியல் அபிலாஷைகளும் அத்தகையதுதான். அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா இல்லையா என்பது தேர்தலில்தான் தெரியும். இருவருமே தனித்து இயங்குவது குறித்துதான் பேசி வருகின்றனர். ஆனாலும், தமிழருவி மணியன் போன்றவர்கள் ரஜினி, கமல் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தங்களின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

காட்சி ஊடகங்களும்கூட இதே கேள்வியை கமலிடம் முன்வைக்கின்றன. அப்போதெல்லாம், ‘நானும் ரஜினியும் இணைவது என்பது சினிமாவில் சாத்தியப்படலாம். அரசியலுக்கு அது சரிவருமா எனத் தெரியவில்லை,’ என்று பட்டும்படாமல் பதில் அளித்து வந்தார்.

 

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளில் (செப். 30), தனது அரசியல் நிலைப்பாடு குறித்து கமல் பேசுகையில், அவர் மறைமுகமாக சில குறிப்புகளை வெளிப்படுத்தியதாகத் தெரிகிறது. நேற்றைய தினம் அவர் அந்த மேடையை, தனது ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது குறித்துக்கூட விளம்பரம் செய்துகொள்ள பயன்படுத்திக் கொண்டார்.

கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளிலும் தனக்கான இடத்தை தேடிப்பிடித்துக் கொள்வதற்கும் ஒரு சாமர்த்தியம் தேவைப்படுகிறது. அது, கமல்ஹாசனிடம் இயல்பாகவே கைவரப்பெற்றிருக்கிறது. அதுவும் கோடிக்கணக்கான பேர் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் வெறுமனே தொகுப்பாளராக மட்டுமே வந்து போக அவர் ஒன்றும் மா.கா.பா. ஆனந்தோ கோபிநாத்தோ அல்லவே.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் தருவாயில் அவர் தனது அரசியல் பிரவேசம் குறித்து சில செய்திகளைச் சொன்னார். அப்போது அவர் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்ததை காண முடிந்தது.

பிக்பாஸ் மேடையில் கமல் பேசுகையில், ”இது என்ன ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிதானே என்று இகழ்ந்தவர்களுக்கு மத்தியில், எனக்கும் உங்களுக்கும் ஒரு ரத்த பந்தத்தை ஏற்படுத்தினீர்கள். அதற்கு நான் கடமைப் பட்டிருக்கிறேன். இதைப்பேச அனுமதி அளித்தார்களே… அதற்கு கோடானு கோடி நன்றி. ஆறரை கோடி நன்றி. அந்த ஆறரைக் கோடி மக்களுடன் நான் செய்யும் உரையாடல் எட்டு கோடியாக மாற வேண்டும் என்பது எனது பேராசை. அதை நிகழ்த்திக் காட்டுவதற்கு ஓர் ஊக்கியாக, எரிபொருளாக, சக்தியாக நீங்கள் இருந்திருக்கிறீர்கள். இது ஒரு முடிவல்ல. ஒரு துவக்கம்.

இங்கே துவங்கிய எனது உரையாடல் தொடர்ந்து நடக்கும். அங்கு வருவேன். வந்தே தீருவேன். (மக்களை பார்த்து கையை நீட்டிச் சொன்னார். அப்போது பலத்த கரவொலி எழுந்தது). என்ன வருவேன் வருவேன் என்கிறீர்களே என்னவாக வருவேன் என்று கேட்காதீர்கள். தொண்டரடிப்பொடியாக வருவேன். ஆசையில் வருவதல்ல. அன்பில் வருகிறேன். வெறும் ஆர்வத்தில் வருவதல்ல. கடமையுடன் வருகிறேன். இங்கு கிடைக்கும் இந்த அன்பு அங்கும் கிடைக்கும் என்பதற்கான ஓர் அச்சாரம் எனக்கு கிடைத்து விட்டது. இனி என்ன வேலை எனக்கு என்று கேட்கமாட்டேன். உங்கள் வேலைதான் என் கடமை.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சொன்னால் நடிக்கிறேன். நடிக்க வேண்டாம். வேறு வேலையைப் பார். உனக்குக் கொடுத்திருக்கும் சேவகம் செய் என்று சொன்னால் செய்கிறேன். இல்லை அதற்கு நீ லாயக்கு இல்லப்பா வேற ஆள் பார்த்துக்கறோம் என்றால் நன்றி. அவருக்கு ஏதாவது உதவி பண்ண வேண்டும் என்றாலும் செய்கிறேன்.

இது உங்களை கைத்தட்ட வைக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. என் மனதின் ஆழத்தில் இருந்து வரும் வார்த்தை. எனக்கு வேண்டிய பணத்தை, சுகத்தை, வளத்தை நீங்கள் கொடுத்து விட்டீர்கள். அதற்கான நன்றியைச் சொல்வதற்கு இந்த வாழ்நாள் போதாது. அதற்கு கைம்மாறாக எது செய்தாலும் போதாது. உங்கள் சேவையில் சாவதுதான் நல்ல கலைஞனுக்கு நல்ல முடிவு,” என்றார்.

‘உங்கள் சேவையில் சாவதுதான் நல்ல கலைஞனுக்கு நல்ல முடிவு’ என்று சொல்லும்போது அவருடைய கண்கள் கலங்கின. குரலும் தழுதழுத்தது. கமல்போன்ற ஓர் உலக நடிகர் உண்மையிலேயே கண் கலங்கினாலும்கூட, ‘நல்லா நடிக்கிறான்பா’ என்று போகிற போக்கில் பலரும் பகடி செய்துவிடக்கூடும்.

‘வேறு ஆள் பார்த்துக்கறோம் என்றால் அவருக்கும் உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்’ என்று கமல் சொல்லியது, முக்கிய குறிப்புச்செய்தியாக ரஜினி, கமல் ரசிகர்கள் கருதுகின்றனர். ஒருவேளை, ரஜினிக்கு அரசியல் செல்வாக்கு அதிகமாக இருந்தால் அவரை முன்னிறுத்தி அரசியல் செய்யவும் கமல் தயாராகிவிட்டதாகவே இருதரப்பு ரசிகர்களும் கருதுகின்றனர்.

இந்த யூகங்களுக்கு இடையே, இன்று (அக்டோபர் 1) நடந்த நடிகர் திலகம் சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில், கமலுக்கு நகைச்சுவையாக ஒரு குட்டு வைத்தார்.

”சினிமா புகழ் மட்டும் அரசியலுக்கு கைகொடுக்காது என்பதற்கு சிவாஜியே உதாரணம்தான். அரசியலில் வெற்றி பெறும் ரகசியம் சத்தியமாக எனக்குத் தெரியாது. ஒருவேளை, அந்த ரகசியம் கமல்ஹாசனுக்கு தெரிந்திருக்கலாம். கேட்டாலும் சொல்ல மாட்டேன் என்கிறார். சினிமாவில் மூத்த அண்ணன் நான். என் கூட வா தம்பி சொல்கிறேன் என்கிறார்,” என்று வேடிக்கையாக குறிப்பிட்டார்.

கடந்த சில நாள்களுக்கு முன், ஆங்கில தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியின்போது, ‘ரஜினியின் சில கொள்கைகள் பாஜக உடன் கூட்டணி வைக்க இயல்பாக பொருந்தி வரும்,’ என்று குறிப்பிட்டிருந்தார். ரஜினியைப் பற்றி கமல் இப்படிச் சொன்னதால், ரஜினியை நண்பர் என்று சொல்லிக்கொண்டே அவரை பாஜகவின் ஆதரவாளராக கமல்ஹாசன் பொதுவெளியில் சித்தரிக்க முயற்சிக்கிறார் என்று அப்போது விமர்சனங்கள் கிளம்பின.

அரசியலில் வெற்றி பெற இதுபோன்ற ‘கோத்து விடும்’ தந்திரங்கள்தான் ரகசியம் என்ற தொனியில்தான் ரஜினி, சிவாஜி மணிமண்டப விழாவில் கமலை குறிப்பிட்டு பேசியிருக்கக் கூடும் என்ற யூகங்களும் எழுந்துள்ளன. எனினும், அவர்கள் இருவரும் அரசியல் நுழைவு குறித்து கலந்தாலோசித்து இருப்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் – தேசிய கட்சிகள், பின்னர் திமுக – அதிமுக என இருதுருவ அரசியலே இருந்து வருகிறது. ஒருவேளை ரஜினியும், கமலும் தனித்தனியாக கட்சி தொடங்கினாலும் இருவரும் ஒரே அணியில் இணைந்தோ அல்லது ஒரே கட்சியாகவோ செயல்படவும் வாய்ப்பு இருக்கிறது. நிச்சயமாக அவர்கள் எதிரெதிர் அரசியல் செய்ய மாட்டார்கள் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அதேவேளையில், அவர்கள் இருவரும் இணைந்து செயல்பட்டால் நிச்சயமாக தமிழ்நாட்டில் பெரிய அளவில் அரசியல் மாற்றத்தை முன்னெடுக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.

இணைப்பு 1: கமல் பேச்சு
இணைப்பு 2: ரஜினி பேச்சு

– நாடோடி.