சென்னை மதுரவாயலைச் சேர்ந்த காவல்துறை ஆய்வாளர், ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளை கும்பலால் இன்று (டிசம்பர் 13, 2017) சுட்டுக்கொல்லப்பட்டார். வீர மரணம் அடைந்த ஆய்வாளருக்கு, சக காவல்துறையினர் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த தேவர்குளம் சாலைப்புதூரைச் சேர்ந்தவர் பெரியபாண்டியன் (48). சென்னை மதுரவாயல் டி-4 காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அவர் கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதிதான் இந்த காவல் சரகத்திற்கு மாறுதல் ஆகி வந்துள்ளார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த முகேஷ்குமார் (37) என்பவர் புழல் புதிய லட்சுமிபுரம் என்ற பகுதியில் மஹாலட்சுமி தங்க மாளிகை என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்தார்.
அந்த கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், சுவரில் துளையிட்டு 3.50 கிலோ தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச்சென்றது. கடந்த நவம்பர் 16ம் தேதி இந்த துணிகரச் சம்பவம் நடந்துள்ளது.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த சென்ராம், கேலாராம், சங்கர்லால், தவ்ராம் ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.
சென்ராமின் மகன் நாதுராம் மற்றும் திருஷ் சவுத்ரி ஆகியோருக்கும் கொள்ளையில் தொடர்பு இருப்பதை அறிந்த காவல்துறையினர் அவர்களையும் பிடிக்க திட்டமிட்டனர்.
ராஜஸ்தானில் பதுங்கியுள்ள அவர்களைப் பிடிக்க மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன், கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மற்றும் மூன்று தலைமைக் காவலர்கள் என ஐந்து பேர் கொண்ட தனிப்படையினர் கடந்த 8ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் விரைந்தனர்.
அங்கு பாலி மாவட்டத்தில் ஓரிடத்தில் கொள்ளையர்களை சுற்றி வளைத்த காவல் ஆய்வாளர்கள் அவர்களை சரணடையும்படி கூறினர். அதற்குள் கொள்ளையர்களின் உறவினர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு கற்களால் தாக்கியுள்ளனர்.
அப்போது, கொள்ளையன் நாதுராம், ஆய்வாளர் பெரியபாண்டியனிடம் இருந்து துப்பாக்கியை பறித்து அவரை சுட்டுவிட்டு அங்கிருத்து தப்பிச்சென்று விட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஆய்வாளர் பெரியபாண்டியன் நிகழ்விடத்திலேயே பலியானார். உடன் சென்ற மற்றொரு ஆய்வாளர் முனிசேகர், தலைமைக் காவலர்கள் மூன்று பேரும் கல்வீச்சில் படுகாயம் அடைந்தனர்.
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் போதிய ஒத்துழைப்பு அளிக்காததாலேயே இந்த துயரச்சம்பவம் நடந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே, தப்பிச்சென்ற கொள்ளை கும்பலை பிடிக்க தமிழக காவல்துறை முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேரில் விசாரணை நடத்த சென்னை காவல்துறை இணை ஆணையர் சந்தோஷ்குமார் தலைமையில் காவல்துறையினர் ராஜஸ்தான் விரைந்துள்ளனர்.
மேலும், இவ்விவகாரத்தில் போதிய உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக ராஜஸ்தான் பாலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் பார்கவ் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழக காவல்துறையினர் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதாக 9 பேரை பிடித்து விசாரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பலியான பெரியபாண்டியனுக்கு பானுரேகா என்ற மனைவியும், ரூபன், ராகுல் என்ற இரு மகன்களும் உள்ளனர். இதற்கிடையே, பலியான காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்கும் என்றும், அவரின் இரு மகன்களின் முழு கல்விச்செலவையும் அரசே ஏற்கும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
பெரியபாண்டியனின் உடலை தனி விமானம் மூலம் சென்னை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சொந்த ஊரில் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
அறிமுகம் இல்லாத வெளிமாநிலம் போன்ற இடங்களுக்கு தனிப்படை காவல்துறையினர் செல்லும்போது போதிய ஆள் பலமும், உள்ளூர் புவியமைப்பை நன்கறிந்தவர்களும் குழுவில் இடம் பெற்றிருப்பது அவசியம் என முன்னாள் காவல்துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாததே ஆய்வாளர் பெரியபாண்டியன் பலிக்கு முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளனர்.