தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 187 சாதி ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
உடுமலை சங்கர் ஆணவ படுகொலை வழக்கில் இன்று (டிசம்பர் 12, 2017) திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கில் சங்கரின் மனைவியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியது:
ஆணவப் படுகொலைக்கு எதிரான இந்த தீர்ப்பை வரவேற்கிறோம். சாதியைக் கவுரவமாகக் கருதி, சங்கரை பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 187 சாதி ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. ஆனால், தமிழகத்தில் சாதி ஆணவப் படுகொலைகளே நடக்கவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் பொறுப்பில் இருந்தபோது கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இதுபோன்ற கொலைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக சட்டப்பேரவையில் பேசி வருகிறது.
சாதி ஆணவப்ப டுகொலைக்கு வழக்கமான இந்திய தண்டனை சட்டம் மட்டும் போதாது. இதற்கென தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும். இது தொடர்பாக தனிநபர் மசோதாவும் கொண்டு வந்திருக்கிறோம். இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன் கூறுகையில், ”சாதி ஆணவப்படுகொலைகள் தமிழ்நாட்டில் நடப்பது உண்மையிலேயே வெட்கக்கேடானது.
இந்த மண்ணில்தான் பெரியார், ஜீவா, சங்கரய்யா, அண்ணா, நல்லக்கண்ணு, கருணாநிதி போன்ற தலைவர்கள் எல்லாம் சாதி கொடுமைகளுக்கு எதிராகவும், தீண்டாமைக்கு எதிராகவும் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வந்தனர்.
எனினும், இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு இனியும் ஆணவக்கொலை செய்ய எண்ணுவோருக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் வகையில் அமைந்துள்ளது,” என்றார்.
மக்கள் கண்காணிப்பக அமைப்பின் தலைவர் ஹென்றி டிபேன் கூறுகையில், ”உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் முறையாக, திறமையாக விசாரணை நடத்திய காவல்துறையினர், வாதாடிய அரசு வழக்கறிஞர்கள், நீதிபதி ஆகியோரையே இந்த தீர்ப்பின் பெருமை சாரும். விசேஷமான இந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆணவக் கொலைக்கு தூக்கு தண்டனை விதிப்பது என்பது கொடூரமான தண்டனையாக கருத முடியாது. வாழ்நாள் முழுக்க குற்றவாளிகள் சிறையில் கிடப்பதுதான் நல்லது. இரட்டை அல்லது மூன்று ஆயுள் தண்டனை கூட தரலாம்.
இதுபோன்ற அனைத்து வழக்குகளிலும் தரமான விசாரணை அமைய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்,” என்றார்.
‘எவிடென்ஸ்’ அமைப்பின் நிறுவனர் கதிர் கூறுகையில், ”இந்த தீர்ப்பு வரவேற்புக்குரியது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 58 முறை ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அனைத்து மனுக்களுமே தள்ளுபடி செய்யப்பட்டது. கவுசல்யா மன உறுதியுடன் நின்ற ஆளுமைக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் இந்த தீர்ப்பை பார்க்கிறேன்.
இதுபோன்ற வழக்குகளில் அரசுத்தரப்பில் யாராவது ஒரே ஒரு வழக்கறிஞர் மட்டுமே ஆஜராகி வாதாடுவார். எங்கள் கோரிக்கைகளை ஏற்ற நீதிமன்றம் கூடுதலாக 3 வழக்கறிஞர்களை நியமித்து வழக்கை நடத்தியது.
போலீஸ் டிஎஸ்பியின் தீவிர விசாரணையும் இந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்க உதவியாக இருந்தது. மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்,” என்றார்.
உடுமலை சங்கர் படுகொலை வழக்கை நேரடியாக விசாரணை நடத்திய போலீஸ் டிஎஸ்பி விவேகானந்தன் கூறியது:
சங்கர் கொலை நடந்த இரண்டாம் நாளே முக்கிய குற்றவாளிகளை கைது செய்துவிட்டோம். அதனால் மேற்கொண்டு குற்றங்கள் நடக்காமல் தடுக்க முடிந்தது.
இந்த வழக்கைப் பொருத்தவரை புலன் விசாரணை, நீதிமன்ற விசாரணை என இரு பகுதியாக பிரிக்கலாம். அப்போதைய போலீஸ் ஐஜி, எஸ்பி, ஏடிஎஸ்பிக்கள் இந்த வழக்கின் புலன் விசாரணை பகுதியை நிறைவாகச் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் நேரில் பார்த்த பொதுமக்கள், அரசுத்தரப்பு, மருத்துவத்துறை, காவல்துறை என மொத்தம் 120 சாட்சிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தினோம்.
வழக்கின் தேவையைப் பொறுத்து நீதிமன்றத்தில் மொத்தம் 67 சாட்சிகளை ஆஜர்படுத்தினோம். அவர்களில் ஒருவர் மட்டும் பிறழ் சாட்சிய £கிவிட்டார். மற்றவர்களின் சாட்சியங்கள் இந்த வழக்கில் போதுமானதாக இருந்தன. 45 நாள்களில் முழுமையான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம்.
வன்கொடுமை தடுப்புப் பிரிவு வழக்கு என்பதால், சங்கர் கொலை வழக்கை நானே நேரடியாக விசாரணை நடத்தினேன். இந்த வழக்கில் கவுசல்யாவின் தாய் உள்பட மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்.
எனினும், தீர்ப்பு நகல் கையில் கிடைத்த பின்னர்தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க முடியும்.
இவ்வாறு டிஎஸ்பி விவேகானந்தன் கூறினார்.