Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பள்ளிக்கூடம் கட்ட சொந்த நிலத்தை தானமாக வழங்கிய பெரியபாண்டியன்!

ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களின் துப்பாக்கிச்சூட்டில் வீரமரணம் அடைந்த தமிழக காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன், சொந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டுவதற்காக தனக்குச் சொந்தமான 10 சென்ட் நிலத்தை தானமாக வழங்கியவர் என்ற நெகிழ்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே பாலி மாவட்டத்தில் கொள்ளையர்களை சுற்றி வளைத்த தமிழக காவல்துறை தனிப்படையினர் மீது கொள்ளை கும்பல் இன்று (டிசம்பர் 13, 2017) துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், சென்னை மதுரவாயல் காவல்நிலைய சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் (48) சம்பவ இடத்திலேயே பலியானார்.

தமிழக காவல்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, வீரமரணம் அடைந்த பெரியபாண்டியன் பற்றி நெகிழ்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

சோகத்தில் மூழ்கிக் கிடக்கும் சொந்த ஊர் மக்கள்.

பெரியபாண்டியனின் சொந்த ஊர், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே உள்ள தேவர்குளம் சாலைப்புதூர் கிராமம். அந்த ஊரைச் சேர்ந்த பெரிய நிலக்கிழாரான செல்வராஜ் – ராமாத்தாள் தம்பதியரின் மகன்தான் பெரியபாண்டியன்.

தமிழக காவல்துறையில் அவர் முதன்முதலில் சாதாரண இரண்டாம்நிலைக் காவலராகத்தான் பணியில் சேர்ந்துள்ளார். 16.6.1993ம் தேதி அவர் காவலராக பணியில் சேர்ந்தார். திருச்சி போலீஸ் பயிற்சிப்பள்ளியில் பயிற்சியை முடித்த பின்னர், மணிமுத்தாறு பட்டாலியனில் பணியாற்றி வந்தார்.

தலைமறைவான ராஜஸ்தான் கொள்ளையர்கள்.

பின்னர் காவல் உதவியாளர் பணிக்கான போட்டித் தேர்வை எழுதி வெற்றி பெற்றார். கடந்த 2000ம் ஆண்டில் நேரடி உதவி ஆய்வாளர் பணியில் சேர்ந்தார். 2014ம் ஆண்டில் அவருக்கு ஆய்வாளர் பதவி உயர்வு கிடைத்துள்ளது. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதிதான் மதுரவாயல் டி-4 காவல் நிலையத்தில் சட்டம்&ஒழுங்கு பிரிவு ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ளார்.

சென்னை ஆவடியில் வசந்தம் நகர் நேரு தெரு&4ல் வசித்து வந்த அவருக்கு பானுரேகா என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். மனைவி, அரசுப்பள்ளி ஆசிரியர். மூத்த மகன், லயோலா கல்லூரியில் படிக்கிறார். இளைய மகன் 8ம் வகுப்பு படிக்கிறார்.

பானுரேகா

பெரியபாண்டியன் மரணம் அடைந்த தகவல் அறிந்த சொந்த ஊர் மக்களும் அவருடைய உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். சொந்த ஊரே சோகத்தில் மூழ்கியது. தான் பிறந்த ஊரில் அரசுப்பள்ளிக்கூடம் கட்டுவதற்காக இடம் தேவைப்பட்டபோது, தனக்குச் சொந்தமான 10 சென்ட் நிலத்தை பள்ளிக்கூடத்திற்கு தானமாக பெரியபாண்டியன் வழங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எப்போதும் காவல்துறை கடமையிலேயே மூழ்கிக்கிடந்த தனது தந்தை, ஒருநாள்கூட எங்களுடன் சேர்ந்து குடும்பமாக ஒரு புகைப்படம்கூட எடுத்துக்கொண்டதில்லை.

வீடு முழுக்க அவர் சிறந்த பணிக்காக விருதுகள், பாராட்டு சான்றிதழ் பெற்ற படங்கள்தான் இருக்கிறது என்று பெரியபாண்டியனின் மகன்கள் கண்ணீர்மல்கக் கூறினர்.

”அவர் உயிருடன் இருந்திருந்தால் மக்களுக்காக இன்னும் நிறைய நல்லது செய்திருப்பார்,” என்று கூறிய அவருடைய மனைவி பானுரேகா, கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தான் சென்றிருந்தபோது கூடுதல் போலீசாரை உடன் அனுப்பி இருந்தால் என் கணவர் பலியாகி இருக்க மாட்டார்.

அவர் தன்னுடன் வெறும் இரண்டே இரண்டு காவலர்கள்தான் இருப்பதாக சொன்னார். சினிமாவில்தான் நடிகர்கள் தனி ஆளாக சாகசம் செய்வார்கள். ரீல் லைப் வேறு. ரியல் லைப் வேறு,” என்று வேதனையுடன் கூறினார்.