Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

2ஜி வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி ஓ.பி.சைனி யார்?; “ஊழலுக்கு எதிரான கறார் கந்தசாமியாம்”!!

2ஜி அலைக்கற்றை வழக்கில் தீர்ப்பு அளித்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, ஊழலுக்கு எதிராக ரொம்பவே கறார் காட்டக்கூடிய நீதிபதி என்றும், காவல்துறையில் உதவி ஆய்வாளராக இருந்து நீதித்துறைக்கு வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்குத் தணிக்கைத்துறை அறிக்கை சமர்ப்பித்தது. இது தொடர்பாக அப்போது கூட்டணியில் இருந்த திமுக அமைச்சர் ஆ.ராஜா, திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்பி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடந்து வந்தது. மத்திய கணக்குத் தணிக்கைத்துறை ரூ.1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக கூறியிருந்தாலும், சிபிஐ தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் ரூ.30984 கோடி அளவுக்கே நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டு இருந்தது.

உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் விசாரணைகள் முடிந்து, இன்று தீர்ப்பு அளிக்கப்ட்டது. போதிய ஆதாரங்கள் இல்லாததால், ஆ.ராஜா, கனிமொழி உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

வழக்கம்போல் வழக்கில் தொடர்புடைய திமுக கட்சி இந்த தீர்ப்பை வரவேற்றும், அதற்கு எதிர் நிலையில் உள்ள பாஜக, அதிமுக போன்ற கட்சிகள் தீர்ப்பை விமர்சித்தும் கருத்து தெரிவித்துள்ளன. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தீர்ப்பு அளித்த நீதிபதி ஓ.பி.சைனி, ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் எப்போதும் உறுதியாக இருப்பவர் என பெயர் பெற்றவர் என்கின்றன நீதித்துறை வட்டாரங்கள்.

அவரைப்பற்றி மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே…

  • ♦ டெல்லி காவல்துறையில் முதன்முதலாக உதவி ஆய்வாளராக தனது பயணத்தை தொடங்கியிருக்கிறார் ஓ.பி.சைனி. அவருடைய முழு பெயர் ஓம் பிரகாஷ் சைனி. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்.

 

  • ♦ ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓ.பி.சைனி, காவல்துறையில் ஆறு ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில், நீதித்துறையில் பணியாற்ற ஆசைப்பட்டு மாஜிஸ்ட்ரேட் பணிக்கான தேர்வை எழுதினார். அந்தாண்டு தேர்வு எழுதியவர்களில் ஓ.பி.சைனி மட்டுமே தேர்வு பெற்று, மாஜிஸ்ட்ரேட் பணியில் சேர்ந்தார்.

 

  • ♦ 2ஜி வழக்கு தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் அமைக்குமாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி அரசுக்கு உத்தரவிட்டனர். அந்த வழக்கை ஓ.பி.சைனி விசாரிக்கவும் உத்தரவிட்டனர். அப்படித்தான் 2ஜி வழக்கிற்குள் அவர் இணைந்தார்.

 

  • ♦ 2ஜி வழக்கை விசாரிப்பதற்கு முன்பாக ஓ.பி.சைனி, காமன்வெல்த் விளையாட்டில் நடந்த ஊழல் தொடர்பாக சுரேஷ் கல்மாடி மற்றும் அவருடைய கூட்டாளிகள் லலித் பானோட், வி.கே.வர்மா, கேயுகே.ரெட்டி, பிரவீன் பக்ஷி, தியோருகர் ஷேகர் ஆகியோர் மீதான புகாரை விசாரித்து வந்தார்.

  • நீதித்துறையில் ஓ.பி.சைனி எப்போதும் தனித்துவத்துடனும் அதிரடியாகவும் செயல்பட்டு வந்திருக்கிறார். கடந்த மார்ச் 19ம் தேதி, 2ஜி வழக்கில் தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி சிஆர்பிசி சட்டப்பிரிவு 319ன் கீழ், பாரதி ஏர்டெல் நிறுவன இயக்குர் சுனில் மிட்டல், ஹட்சிசன் மேக்ஸ் நிறுவன அதிபர் அசிம் கோஷ், ஸ்டெர்லின் செலுலார் நிறுவன அதிபர் ரவி ருயா ஆகியோரை கைது செய்ய உத்தரவிட்டார்.

 

  • ♦ நீதித்துறை முன்பு அனைவரும் சமம் என்பதையும் தனது செயல்பாடுகள் மூலம் அவ்வப்போது உணர்த்தி வ ந்துள்ளார். கார்ப்பரேட் அதிபர்கள், அரசியல் விஐபிக்கள் என்றெல்லாம் பாகுபாடு பார்ப்பதில்லை.

 

  • ♦ தேசிய அலுமினியம் கார்ப்பரேஷன் நிறுவன தலைவர் ஏ.கே.ஸ்ரீவஸ்தவா மீதான ஊழல் வழக்கை விசாரித்தபோது, அவர் ஜாமீனில் விடுதலை செய்யும்படி கேட்டும், அவருடைய மனுவை நிராகரித்துள்ளார்.

 

  • ♦ பெண் என்பதால் தன்னை தன்னை உடனடியாக ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கனிமொழி மனுத்தாக்கல் செய்தார். அவருக்கு எப்படியும் ஜாமீன் கிடைத்துவிடும் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், ‘இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளவர்களில் முக்கிய நபர் மட்டுமின்றி, சக்தி வாய்ந்த நபரும்கூட. அதனால் ஜாமீனில் விடுதலை செய்ய முடியாது,’ என்று உத்தரவிட்டார். அதேபோல், தயாளு அம்மாள் விசாரணையில் இருந்து ஆஜராகாமல் இருக்க விலக்குக் கோரிய மனுவையும் நிராகரித்தார்.

 

  • ♦ சட்டம், நீதித்துறையுடன் எப்போதும் சகோதரத்துவம் காட்டக்கூடியவர் என ஓ.பி.சைனியைப் பற்றி குறிப்பி டுகின்றனர். வழக்கு விசாரணையின்போது எப்போதாவது மட்டுமே லேசான புன்னகையை உதிர்க்கக்கூடிய அவர், நீதிமன்ற விசாரணை அறைக்குள் யாராக இருந்தாலும் ஒழுங்கையும், அந்த அவைக்குரிய கண்ணியத்தையும் பின்பற்ற வேண்டும் என்பதிலும் கறாராக இருப்பாராம். ஒருமுறை நீதிமன்ற விசாரணையின்போது பத்திரிகையாளர்கள் சிலர் செல்போன் பயன்படுத்தியதையும் அவர் கண்டித்துள்ளார்.

  • ♦ பாரம்பரியமிக்க டெல்லி செங்கோட்டை மீது கடந்த 2000ம் ஆண்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பின் பயங்கரவாதி முகமது ஆரிஃப் மற்றும் கூட்டாளிகள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் 2 பேர் உள்பட 3 பேர் இறந்தனர். இந்த வழக்கை விசாரிப்பதற்காக டெல்லியில் சிறப்பு பொடா நீதிமன்றம் அமைக்கப்பட்டு, அதன் நீதிபதியாக ஓ.பி.சைனி நியமிக்கப்பட்டார்.

 

  • ♦ அந்த வழக்கை விசாரித்த ஓ.பி.சைனி கடந்த 2005ம் ஆண்டு, முகமது ஆரிஃபுக்கு தூக்கு தண்டனையும் மற்றும் 6 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார். முகமது ஆரிஃப் மீதான தூக்கு தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த தீர்ப்புக்குப் பிறகே அவர் இந்திய அளவில் கவனம் பெற தொடங்கினார்.