Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

2ஜி தீர்ப்பு எதிரொலி: டிபி ரியால்டி, சன் டிவி, யுனிடெக் பங்குகள் உயர்வு!

2ஜி அலைக்கற்றை வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, மாறன் சகோதரர்களின் சன் டிவி நெட்வொர்க் மற்றும் டிபி ரியால்டி, யுனிடெக் நிறுவனங்களின் பங்குகள் இன்று 20 சதவீதம் வரை உயர்ந்தன.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா, கனிமொழி எம்பி உள்ளிட்டோர் மீதான 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு மற்றும் கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்த வழக்கில் இன்று (டிசம்பர் 21, 2017) டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இந்த வழக்கில் டிபி ரியால்டி, யுனிடெக் நிறுவன இயக்குநர்கள் பெயர்களும் சேர்க்கப்பட்டு இருந்தன. போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி 2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து அனைவரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

இதையடுத்து, மும்பை பங்குச்சந்தையில் டிபி ரியால்டி நிறுவனத்தின் பங்குகள் விலை அதிகபட்சமாக 19.89 சதவீதம் வரை உயர்ந்தது. இறுதியில் ரூ.43.70ல் முடிந்தது. அதேபோல், திமுகவுடன் தொடர்புடைய மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான சன் டிவி நெட்வொர்க் பங்கும் 42 புள்ளிகள் வரை உயர்ந்து, ரூ.982ல் முடிந்தது.

யுனிடெக் நிறுவனத்தின் பங்குகள் 11.86 சதவீதம் வரை உயர்ந்து, 7.92ல் முடிந்தது.

இன்று, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 33756 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 10440 புள்ளிகளிலும் லேசான சரிவுடன் முடிவுற்றன.