2 ஜி அலைக்கற்றை வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் கனிமொழி எம்பி, முன்னாள் அமைச்சர் ஆ.ராஜா உள்ளிட்ட 14 பேரையும் விடுதலை செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று (டிசம்பர் 21, 2017) தீர்ப்பு அளித்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது திமுகவைச் சேர்ந்த ஆ.ராஜா தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலத்தின் மூலமாக, ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக மத்திய கணக்குத் தணிக்கைத்துறை ஆணையர் வினோத் ராய் (சிஏஜி) அறிக்கை சமர்ப்பித்தார்.
இதுபோன்ற இமாலய ஊழல் குற்றச்சாட்டு சுதந்திர இந்தியா அதற்கு முன் கேள்விப்பட்டதில்லை எனும் அளவுக்கு, அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற புதிய கொள்கையின்படி ஆ.ராஜா, அவருக்கு வேண்டிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றைகளை ஒதுக்கியதாகவும் புகாரில் சொல்லப்பட்டது. எதிர்க்கட்சிகள் இதை வைத்தே காங்கிரஸ், திமுகவுக்கு எதிராக நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வந்தன.
மேலும், ஆ.ராஜா அளித்த சலுகையால் பலன் அடைந்த டிபி ரியாலிட்டி, ஸ்வான் டெலிகாம் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள், கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி கையூட்டு கொடுத்ததாக மற்றொரு புகாரும் எழுந்தது.
ஆ.ராஜாவால் காங்கிரஸ் கட்சியும் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேர்ந்தது. இதனால் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்குள் உரசல் உச்சக்கட்டத்தை அடைந்து, ஆ.ராஜா அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யும் வரை சென்றது.
உச்சநீதிமன்றம் கொடுத்த அழுத்தத்தின் பேரில், கடந்த 2011ம் ஆண்டு ஆண்டு சிபிஐ அதிகாரிகள், ஆ.ராஜா, அவருடைய உதவியாளர் சந்தோலியா, கனிமொழி எம்பி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத் ரெட்டி, தொலைத்தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஸ்வான் டெலிகாம் நிறுவன இய க்குநர்கள் ஷாகித் பல்வா, வினோத் சோயங்கா, யுனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகள் கவுதம் ஜோஷி, ஹரி நாயர், சுரேந்திரா பிபாரா, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், அமிர்தம் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.
அவர்களில் கனிமொழி, ஆ.ராஜா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, ஆ.ராஜா அலைக்கற்றை ஒதுக்கீடு வழங்கிய 122 டெலிகாம் நிறுவனங்களின் உரிமத்தை உ ச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்திருந்தது. அதன் மேற்பார்வையில், டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2ஜி அலைக்கற்றை வழக்கின் விசாரணை நடந்து வந்தது. கடந்த 7 ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கில் கடந்த 5ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நீதிபதி ஓ.பி.ஷைனி, டிசம்பர் 21ம் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி 2ஜி வழக்கில் இன்று (டிசம்பர் 21, 2017) தீர்ப்பு வழங்கப்பட்டது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் ஆ.ராஜா, கனிமொழி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் ஆத £ரப்பூர்வமாக நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டது. அதனால் ஆ.ராஜா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக, நீதிபதி ஓ.பி.ஷைனி தீர்ப்பு அளித்தார்.
மேலும், கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான புகாருக்கும் முகாந்திரம் இல்லை. அதனால் இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ முடக்கியுள்ள சொத்துகளை விடுவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்களை யாராவது கொண்டு வருவார்களா என நானும் ஏழு ஆண்டுகள் காத்திருந்தேன். ஆனால் யாரும் உரிய ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை. குற்றப்பதிரிகையில் கூறப்பட்டுள்ள விவரங்களுக்கும் சிபிஐ தாக்கல் செய்த ஆதாரங்களுக்கும் முரண்பாடுகள் உள்ளன என்றும் நீதிபதி தீர்ப்பின்போது கூறினார்.
இந்த தீர்ப்பினால் திமுக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பெரிய அளவில் மகிழ்ச்சி அடை ந்துள்ளன. சென்னை அறிவாலயம் அருகில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ”வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியை அவமானப்படுத்தி, அழிக்க வேண்டும் என்பதற்காக சிலர் திட்டமிட்டு போட்ட பொய் வழக்கில் இருந்து விடுதலை கிடைத்திருக்கிறது.
இந்த வழக்கில் அனைவருமே குற்றமற்றவர்கள் என்ற தீர்ப்பு தனி நீதிமன்றம் மூலமாக கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. திமுக எந்த தவறையும் செய்யவில்லை என்பது தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து ஊடகங்கள் பெரிய அளவில் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்,” என்றார்.
கனிமொழி எம்பி கூறுகையில், ”இந்த தீர்ப்பால் திமுகவினரும், குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சி அடை ந்துள்ளோம். தவறான பழி சுமத்தப்பட்டு தினமும் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. பல மனவலிகளை ஏற்படுத்தியது.
இப்போது நீதி வென்று நியாயம் கிடைத்திருக்கிறது. இந்த நாளுக்காகத்தான் கடந்த 6 ஆண்டுகளாக காத்திருந்தேன். பணம் தான் அசையாக இருந்திருந்தால் என்னால் 20 வயதிலேயே அரசியலுக்கு வந்திருக்க முடியும். இனி, கட்சியை பலப்படுத்தி, தமிழக மக்களுக்காக பாடுபடுவேன்,” என்றார்.
ஆ.ராஜா கூறும்போது, ”இந்த தீர்ப்பு உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் கூறுகையில், ”ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீது பொய்யான குற்றச்சாட்டை கூறினர். அந்த குற்றச்சாட்டை அவர்களால் நிரூபிக்க முடியவில்லை,” என்றார்.
அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ”இது இறுதி தீர்ப்பு அல்ல. மேல்முறையீடு செய்யும்போது நல்ல தீர்ப்பு கிடைக்கும்,” என்றார்.