இலங்கைக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய சுழல் பந்து வீச்சாளர்களின் துல்லிய தாக்குதலால், அந்த அணியை 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக வீழ்த்தியது.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுடன் மூன்று டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டி, ஒரிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் நகரில் இன்று (டிசம்பர் 20, 2017) நடந்தது. இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கியது.
லோகேஷ் ராகுல் அரை சதம்:
டாஸ் வென்ற இலங்கை அணி, பனிப்பொழிவு காரணமாக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான லோகேஷ் ராகுல், ரோஹித் ஷர்மா சிறப்பான தொடக்கம் தந்தனர். ரோஹித் ஷர்மா 17 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் லோகேஷ் ராகுல் அபாரமாக ஆடி அரை சதம் அடித்தார். சர்வதேச டி20 போட்டிகளில் அவர் அடிக்கும் இரண்டாவது அரை சதம் ஆகும்.
ராகுல் 61 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யரும் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு கூட்டணி அமைத்த தோனி மற்றும் மனீஷ் பாண்டே, இலங்கை பந்து வீச்சை எளிதாக சமாளித்து ஆடினர்.
180 ரன் குவிப்பு:
தோனி கடைசி ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 180 ரன்களைக் குவித்தது. தோனி 39 ரன்களுடனும், மனீஷ் பாண்டே 32 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து, 181 ரன்கள் இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. பனிப்பொழிவு காரணமாக இரண்டாவதாக பந்து வீசும் அணிக்கு ரொம்பவே சவாலாக இருக்கும் என்று அந்த அணி கருதியது. ஆனாலும், பனிப்பொழிவையும் சமாளித்து இந்திய சுழல் பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹலும், குல்தீப் யாதவும் தாக்குதல் நடத்தினர்.
சுழலில் சுருண்டது:
தொடக்க ஓவரிலேயே வேகப்பந்து வீச்சாளர் உனத்கட் இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர் டிக்வெல்லா (13 ரன்) விக்கெட்டை வீழ்த்தி நம்பிக்கை அளித்தார்.
அபாரமாக பந்து வீசிய யுஸ்வேந்திர சாஹல், 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்றொரு சுழல் பந்து வீச்சாளரான குல்தீப் யாதவும் தன் பங்குக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இலங்கை அணி ஒட்டுமொத்தமாக நிலை குலைந்தது.
ஆரம்பக்கட்டத்தில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தும், விக்கெட் இன்றி தவித்த ஹர்திக் பாண்டியா கடைசிக்கட்ட ஓவர்களை அபாரமாக வீசினார். அவரும் 3 விக்கெட்டுகளை வீழ்த்த, இலங்கை அணியின் ஆட்டம் சீக்கிரத்திலேயே முடிவுக்கு வந்தது.
சாஹல் ஆட்டநாயகன்:
இதனால் 16 ஓவர்களிலேயே இலங்கை அணி 87 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக உபுல் தரங்கா 23 ரன்கள், குஷால் பெரேரா 19 ரன்கள் எடுத்தனர். 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 1&0 கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய சுழல் பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது டி20 போட்டி, வரும் 22ம் தேதி இந்தூரில் நடக்கிறது.
சாதனை:
சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் அதிக ரன்கள் (93 ரன்) வித்தியாசத்தில் இந்திய அணி பெறக்கூடிய இரண்டாவது வெற்றி இது. இதற்குமுன், கொழும்புவில் இங்கிலாந்து அணியை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே இந்திய அணியின் அதிகபட்ச வித்தியாசமாக இருந்தது.