Friday, February 7மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

பெரியார் பல்கலை ஆட்சிக்குழுவில் ‘காலாவதி’ உறுப்பினர்கள்; ஆசிரியர்கள் அதிருப்தி

சேலம் பெரியார் பல்கலை.
ஆட்சிக்குழு உறுப்பினர்களாக உள்ள
ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்ற பிறகும்,
அதே பதவியில் தொடர்வதற்கு
பல்கலை ஆசிரியர் சங்கம்
அதிருப்தி தெரிவித்துள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்
தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி
வரும் பெரியசாமி, வேதியியல்
துறைத்தலைவர் ராஜ் ஆகியோர்
தற்போது ஆட்சிக்குழு உறுப்பினராகவும்
பதவி வகித்து வருகின்றனர்.
இவர்கள் பேராசிரியர் பிரிவில் இருந்து
இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்கள் இருவரும் அக். 9ம் தேதியுடன்
மூத்த பேராசிரியர் ஆக
பதவி உயர்வு பெற்று விட்டனர்.

பல்கலை சாசன விதிப்படி,
ஒருவர் எந்த பிரிவில் இருந்து
ஆட்சிக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டாரோ
அவர் அந்த நிலையில் இருந்து பதவி உயர்வு
பெற்றுவிடும் பட்சத்தில்,
முந்தைய வகைப்பாட்டிலேயே
ஆட்சிக்குழு உறுப்பினராக
தொடர முடியாது.

அதன்படி,
மூத்த பேராசிரியராக பதவி உயர்வு
பெற்றுவிட்ட பெரியசாமி, ராஜ்
ஆகிய இருவரும் உடனடியாக
ஆட்சிக்குழுவில் இருந்து
நீக்கப்பட வேண்டும்.

அதேபோல, இணை பேராசிரியர்
பிரிவில் இருந்து ஆட்சிக்குழு
உறுப்பினராக நியமிக்கப்பட்ட பிரகாஷ் மாறன்
(உணவு அறிவியல்துறை)
பேராசிரியராக பதவி உயர்வு
பெற்றுவிட்டார். உதவி பேராசிரியர்
பிரிவில் நியமிக்கப்பட்ட திலகவதி
(உணவு அறிவியல்துறை)
இணை பேராசிரியராக பதவி உயர்வு
பெற்றுவிட்டார்.

இதனால் இவர்கள் இருவரும்
ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியில்
தொடர முடியாது.
வரும் 16ம் தேதி பெரியார்
பல்கலையில் பட்டமளிப்பு விழா
நடக்கிறது. அதற்கு முன்பாக
தகுதி வாய்ந்த ஆசிரியர்களை
ஆட்சிக்குழு உறுப்பினராக
நியமிக்க வேண்டும்.

இது தொடர்பாக பெரியார் பல்கலை
ஆசிரியர் சங்கத்தின் தலைவர்
வைத்தியநாதன், தமிழக முதல்வர்,
உயர்கல்வித்துறை அமைச்சர்,
தமிழக ஆளுநர் ஆகியோருக்கு
கடிதம் அனுப்பி உள்ளார்.

Leave a Reply