Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை சுட்டது யார்? காவல்துறையில் குழப்பம் நீடிப்பு!

ராஜஸ்தான் கொள்ளையர்களைப் பிடிக்கச்சென்ற தனிப்படை காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனை, உடன் சென்ற மற்றொரு ஆய்வாளர் முனிசேகர்தான் சுட்டுக்கொன்றார் என்று தகவல்கள் பரவிய நிலையில், அதை சென்னை மாகர காவல்துறை அவசர அவசரமாக மறுத்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தேவர்குளத்தைச் சேர்ந்தவர் பெரியபாண்டியன் (48). சென்னை மதுரவாயல் காவல்நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கொளத்தூர் பகுதியில் ஒரு நகைக்கடையில் நடந்த கொள்ளையில் ராஜஸ்தானைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் நாதுராம் மற்றும் அவருடைய கூட்டாளிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நாதுராம் மற்றும் கூட்டாளிகளைத் தேடி ஆய்வாளர் பெரியபாண்டியன், கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மற்றும் 5 தலைமைக் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் ராஜஸ்தான் மாநிலம் சென்றனர்.

கடந்த 13ம் தேதி, நாதுராம் கும்பலை தமிழக தனிப்படை காவல்துறையினர் சுற்றிவளைத்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் நாதுராம் துப்பாக்கியால் சுட்டதில் ஆய்வாளர் பெரியபாண்டியன் பலியானதாக உடன் சென்ற ஆய்வாளர் முனிசேகர் தமிழக காவல்துறையில் தகவல் அளித்தார்.

இது தொடர்பாக தமிழக காவல்துறை, ராஜஸ்தான் மாநில பாலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் பார்கவ்வின் உதவியை நாடினர். அவருடைய நேரடி மேற்பார்வையில் துப்பாக்கிச் சூடு நடந்த எல்லைக்கு உட்பட்ட ஜெய்த்ரன் காவல்துறையினர் விசாரித்தனர்.

இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதில் முக்கியமானது, நாதுராம் சுட்டதினால் ஆய்வாளர் பெரியபாண்டியன் சாகவில்லை என்றும், முனிசேகர் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த தோட்டாதான் பெரியபாண்டியனின் உயிரை பலி வாங்கியிருப்பதும் தெரியவந்தது.

சம்பவம் நடந்தபோது, நாதுராம் மற்றும் அவருடைய கூட்டாளிகளிடம் துப்பாக்கியே கிடையாது என்றும் பாலி மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த தகவல் குறித்து விசாரித்து உறுதிப்படுத்த தமிழக காவல்துறையினர் ராஜஸ்தான் விரைந்தனர்.

இதில், பாலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் பார்கவ் அளித்த தகவல்கள் அனைத்தும் உண்மை என்பதும், நாதுராம் கும்பலுடன் ஏற்பட்ட மோதலின்போது ஆய்வாளர் முனிசேகர் அவர்களை நோக்கி சுட்டுள்ளார். அப்போது தவறுதலாக ஆய்வாளர் பெரியபாண்டியன் மீது குண்டு பாய்ந்து அவர் இறந்துள்ளதை உறுதி செய்தனர்.

எனினும், இந்த தகவலை ஆய்வாளர் முனிசேகர் ஏன் மறைத்தார் என்பது குறித்து இன்னும் விசாரணை ஆரம்பமாகவில்லை.

இப்படி ஒரு தகவல் நேற்று காலை பரபரப்பாக பரவிய நிலையில், அதை சென்னை மாகர காவல்துறை அவசர அவசரமாக மறுத்துள்ளது.

காவல்துறை மறுப்பு:

சென்னை மாநகர காவல்துறை நேற்று மாலை வெளியிட்டுள்ள ஒரு பத்திரிகை செய்திக் குறிப்பில், ”ஆய்வாளர் பெரியபாண்டியன் மரணம் குறித்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்த்ரன் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறையினர் எந்த கருத்தையும் கூறவில்லை,” என்று தெரிவித்துள்ளது.