Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

”நாங்களும் சோடா பாட்டில் வீசுவோம்!” – ஜீயர் சடகோப ராமானுஜர் காட்டம்

ஆண்டாள் குறித்த சர்ச்சை சற்று ஓய்ந்திருந்த நிலையில், ”எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும்”, என ஜீயர் சடகோப ராமானுஜர், கவிஞர் வைரமுத்துக்கு கண்டனம் தெரிவித்து இருப்பது மீண்டும் பிரச்னையை ஊதிப்பெரிதாக்கி உள்ளது.

அண்மையில், தினமணி நாளிதழ் நடத்திய நிகழ்ச்சியொன்றில் ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து உரையாற்றினார். அதில், வெளிநாட்டு ஆராய்ச்சியாளர் ஒருவரின் கட்டுரையை மேற்கோள் காட்டி பேசினார். அந்த உரையில், வைரமுத்து ஆண்டாள் குறித்து தரமற்ற வார்த்தைகளில் பேசியதாக சர்ச்சை எழுந்தது.

இதனால், அவருக்கு எதிராக இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக, ஜீயர் சடகோப ராமானுஜர், வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலுக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

மேலும், ஜீயர் சடகோப ராமானுஜர் அதனை வலியுறுத்தி உண்ணாவிரதமும் மேற்கொண்டார். இதையடுத்து, அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். ஆனால், பிப்ரவரி 3-ஆம் தேதிக்குள் வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால், மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன் என தெரிவித்தார்.

இந்நிலையில், வைரமுத்துவுக்கு எதிராக ஆண்டாள் கோவிலில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் மீண்டும் இதே கருத்தை வலியுறுத்தினார். அப்போது, “இறை நம்பிக்கைக்கு எதிராக இனி யாரும் பேசக்கூடாது. அவ்வாறு பேசினால் நாங்கள் பொறுத்திருக்க மாட்டோம். எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும். ஆனால், நாங்கள் அதனை செய்ய மாட்டோம்”, என தெரிவித்தார்.

அப்போது, அருகிலிருந்தவர்கள் உற்சாகமாக சிரித்தனர். இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.