Sunday, April 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பாகமதி – சினிமா விமர்சனம்

அனுஷ்கா நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் இன்று (ஜனவரி 26, 2018) ஒரே நாளில் வெளியாகி இருக்கிறது, ‘பாகமதி’. ஹாரர் மற்றும் அரசியல் திரில்லர் கலந்த புதிய கோணத்தில் மிரட்டுகிறாள் பாகமதி.

நடிப்பு: அனுஷ்கா, உண்ணி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத், முரளி ஷர்மா, பிரபாஸ் சீனு, ‘தலைவாசல்’ விஜய், வித்யூலேகா, தேவதர்ஷினி மற்றும் பலர். இசை: எஸ்எஸ் தமன்; ஒளிப்பதிவு: மதி; எடிட்டிங்: கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ்; தயாரிப்பு: ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ்; இயக்கம்: ஜி.அசோக்.

பாகமதி கதையை அனுஷ்காவிடம் கடந்த 2012ம் ஆண்டிலேயே சொல்லிவிட்டு, அவருடைய கால்ஷீட்டுக்காக அய்ந்து ஆண்டுகள் காத்திருந்தாராம் படத்தின் இயக்குநர். அந்த காத்திருப்பு, கொஞ்சமும் வீண் போகவில்லை. இயக்குநருக்கும், அனுஷ்காவிற்கும் இது ஒரு குறிப்பிடத்தக்க படம்தான்.

கதை என்ன?:

பாகமதியில், சஞ்சலா என்ற பாத்திரத்தில் அனுஷ்கா ஒரு நேர்மையான அய்.ஏ.எஸ். அதிகாரியாக வருகிறார். தான் திருமணம் செய்துகொள்ளப் போகும் காதலனை கொலை செய்த வழக்கில், அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். சிறைக்கு வருவதற்கு முன்பு, கலெக்டராகவும் பணியாற்றிய அவர், அமைச்சர் ஈஸ்வர பிரசாத்தின் (ஜெயராம்) தனிச்செயலராகவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

ஜெயராம் மீது நேர்மையான அமைச்சர் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, கோயில்களில் உள்ள புராதன சிலைகள் தொடர்ந்து கடத்தப்படுவது குறித்து கேள்வி எழுப்புகின்றனர். அதற்கு ஜெயராம், பதினைந்து நாள்களில் சிலை கடத்தல் கும்பலை பிடிப்போம். இல்லாவிட்டால் அரசியலுக்கு முழுக்கு போடுவதாக அறிவிக்கிறார்.

அவருடன் இருக்கும் பிரகாஷ் என்பவர்தான் தன்னுடைய அடுத்த அரசியல் வாரிசு என்பதையும் சூசகமாக சொல்கிறார். அவர் ஏதோ சதித்திட்டம் செய்து, தமிழக முதலமைச்சர் ஆகப் பார்ப்பதாக கருதும் அரசியல் எதிரிகள், ஜெயராம் மீது சில குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.

இந்த விவகாரம், சிபிஐயின் கைகளுக்குப் போகிறது. ஜெயராம் மீதான புகார்களை விசாரிக்க சிபிஐ இணை இயக்குநர் அந்தஸ்தில் இருக்கும் ஆஷா சரத், தமிழகம் வருகிறார். அவருக்கு உருப்படியான தகவல்கள் ஏதும் கிடைக்காததால், அவருடைய தனிச்செயலராக பணியாற்றி வந்த அனுஷ்காவிடம் விசாரிக்க முடிவு செய்கிறார்.

இதற்காக, கைதியாக சிறையில் இருக்கும் அனுஷ்காவை வெளியே கொண்டு வருகிறது, சிபிஐ. ஊருக்கு ஒதுக்குப்புறமாக பாழடைந்து கிடக்கும் பாகமதி பங்களாவுக்குள் வைத்து அவரிடம் விசாரணை நடத்துகிறார் ஆஷா சரத்.

ஆனால், அந்த பங்களாவுக்குள் சென்றதில் இருந்து சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன. பாகமதி பேய், அனுஷ்காவின் உடலுக்குள் புகுந்து, ஆட்டுவிக்கிறது. அவரிடம் சிபிஐ போலீசாரால் உண்மைகளை விசாரிக்க முடிந்ததா? பாகமதி பேய் அனுஷ்காவின் உடலில் ஏன் புகுந்தது? அனுஷ்கா தன் காதலனை ஏன் கொன்றார்? ஜெயராம், முதல்வர் ஆனாரா? என்பதை ஹாரரும், அரசியல் திரிலிங்கும் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் அசோக்.

இதெல்லாம் பிளஸ்:

ஓர் அய்.ஏ.எஸ். அதிகாரியாக சேலையில் மிடுக்குடன் வலம் வரும்போதும், பாகமதி பேய் தன் உடலில் இறங்கியதும் மாறும் அவருடைய உடல்மொழியையும் பார்க்கையில், அனுஷ்காவுக்காக இயக்குநர் ஏன் அய்ந்து ஆண்டுகள் காத்திருந்தார் என்பது புரிகிறது. அனுஷ்காவைத் தவிர வேறு யாரும் இப்படியொரு நடிப்பை வழங்கிட முடியாது.

படம் முழுக்க அனுஷ்காதான் தெரிகிறார். அவருக்காகவே இந்தப் படத்தைப் பார்க்கலாம் என்பதை ரசிகனுக்கு ஆசையை கடத்தி விடுகிறார். ஆனால், அருந்ததி அளவுக்கு மிரட்டலோ, தேவசேனா அளவுக்கு மிடுக்கோ இல்லை என்றாலும் மோசமில்லை.

அடுத்தது, ஆஷா சரத். இனிமேல் தமிழ் திரைப்படங்களில் ஒரு வலுவான பெண் போலீஸ் அதிகாரி பாத்திரம் என்றால், அதற்கு ஆஷா சரத்தை விட்டால் ஆளே இல்லை என்பதை பாபநாசம் படத்திற்குப் பின்னர் இதிலும் நிரூபித்திருக்கிறார். சிபிஐ அதிகாரியின் உடல்மொழி, அத்தனை இயல்பாக பொருந்திப் போகிறது. அனுஷ்காவுக்கு அடுத்து அதிகம் கவனம் ஈர்ப்பவர் ஆஷா சரத் தான்.

நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழ் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கிறார் ஜெயராம். நேர்மையான அமைச்சராகவும், அதற்குள் எத்தனை வில்லத்தனம் ஒளிந்திருக்கிறது என்பதையும் திரையில் அவர் காட்டும் விதம் ரசிக்கும்படி இருக்கின்றன. அவருடைய இரண்டு விதமான குணாம்சங்களே, அவருடைய நடிப்புக்கு போட்டி.

ஹாரர், திரில்லர் படத்திற்குத் பெரும் பலம் சேர்ப்பது டெக்னிக்கல் டீம்தான். அதை இயக்குநர் கச்சிதமாக பிடித்துக்கொண்டார். இந்தப் படத்துக்கு தமனின் பின்னணி இசை ரொம்பவே கைகொடுத்திருக்கிறது. குறிப்பாக, அனுஷ்கா ஆணி அடிக்கும் காட்சியில் பின்னணி இசைதான் பயங்கரத்தைக் கூட்டுகிறது.

பேய் பங்களாவுக்குள் நிகழும் அத்தனை காட்சிகளிலும் அளவான ஒளியில் மிரட்டியிருக்கின்றார் ஒளிப்பதிவாளர் மதி.

சில மர்ம முடிச்சுகளுடன் இடைவேளை விடுவது, இரண்டாம் பாதியை ரொம்பவே எதிர்பார்க்க வைத்துவிடுகிறது. அத்தனை முடிச்சுகளையும் படம் முடிவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பாக அவசரகதியில் அவிழ்ப்பது சற்று அயற்சியை ஏற்படுத்துகிறது. பாடல்கள் இல்லாமல் இருப்பது கூட முக்கிய அம்சம்தான்.

இதெல்லாம் மைனஸ்:

முன்பாதியில் சில காட்சிகளையும், இரண்டாம் பாதியில் சில காட்சிகளின் நீளத்தையும் குறைத்திருக்கலாம்.

எளிதில் யூகிக்கக் கூடிய காட்சிகளும், லாஜிக் என்பதையே மறந்துவிட்டிருப்பதும் படத்தின் மீதான பரபரப்பை வெகுவாக குறைத்து விடுகின்றன. சினிமா என்பது நாமே தெரிந்து ஒப்புக்கொள்ளும் பொய்தான். என்றாலும், கைதியாக இருக்கும் முன்னாள் அய்ஏஎஸ் அதிகாரியை, அத்தனை எளிதில் யாருக்கும் தெரியாமல் சிறையில் இருந்து வெளியே கொண்டு வந்துவிட முடியுமா?

கிராமப்புற, பட்டியலின மக்களுக்காக ஒருவர் தன் உயிரையே கொடுக்கிறார் என்பதெல்லாம் இக்காலத்தில் நிகழக்கூடிய ஒன்றா? என்பது போன்ற தர்க்க நியாயங்கள் இல்லை. காதலராக வரும் உண்ணிமுகுந்தனுக்கு பெரிய அளவில் வேலை இல்லை. தேவதர்ஷினி, வித்யூலேகா பாத்திரங்களும் வீணடிக்கப்பட்டு இருக்கின்றன.

நம்பி போகலாம்:

தர்க்க நியாயம் மீறல்கள் போன்ற குறைகள் இருந்தாலும், குடும்பத்துடன் சென்று பாகமதியை கண்டுகளிக்கலாம்.

 

– வெண்திரையான்.