Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா ரகசிய திருமணம்!; இத்தாலியில் அமர்க்களம்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கும் இத்தாலியில் இன்று (டிசம்பர் 11, 2017) ரகசிய திருமணம் நடந்தது.

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியும், பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் கடந்த பல ஆண்டுகளாகவே காதலித்து வந்தனர்.

இருவரின் பெற்றோரும் அவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினர். இதையடுத்து, இந்த ஜோடி திருமண நாளை எதிர்நோக்கிக் காத்திருந்தது.

கடந்த ஜனவரி மாதமே திருமணம் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அப்போது அதை அவர்கள் இருவருமே மறுத்து இருந்தனர்.

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் ட்வென்டி-20 போட்டிகளில் இருந்து விலகிய விராட் கோலி, சொந்த காரணங்களுக்காக விடுப்பில் செல்வதாக அறிவித்தார். அப்போதே, அனுஷ்கா ஷர்மாவை அவர் கரம் பிடிக்கப் போகிறார் என்ற யூகங்கள் ஊடகங்களில் கிளம்பின.

அதன்படி, இன்று விராட் கோலிக்கும், அனுஷ்கா ஷர்மாவுக்கும் இத்தாலி நாட்டின் மிலன் நகரில் திருமணம் நடந்தது. இந்த வைபவத்தில் இருதரப்புக்கும் மிக மிக நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

அதனால் திருமண தகவலை உறுதிப்படுத்த முடியாமல் பன்னாட்டு ஊடகங்களேகூட குழம்பிப் போயின. ஒருவழியாக இரவு 8 மணியளவில்தான் அவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது பற்றிய தகவலை ஊடகங்கள் உறுதி செய்தன.

அதற்குள், ட்விட்டர் பக்கத்தில் ‘விருஷ்கா வெட்டிங்’ என்ற பெயரில் ரசிகர்கள் ஹேஷ்டேக் செய்து வைரல் ஆக்கியுள்ளனர். பல கிரிக்கெட் வீரர்களும், திரைத்துறையைச் சார்ந்தவர்களும் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, திருமண வாழ்க்கையில் ‘நாட் அவுட்’ வீரர்களாக வாழ வாழ்த்துகள் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், விராட் கோலி, அனுஷ்கா ஆகியோரின் பெற்றோர்கள் இரண்டு தனி நபர்களை திருமணத்தின் மூலம் இருவர் ஆக இணைத்துள்ளனர் என்று வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு ரசிகர் குறும்புத்தனமாக, விராட் கோலியின் திருமண வாழ்க்கை அத்தனை சுவாரஸ்யமாக இருக்குமா எனத் தெரியவில்லை. துரத்திப் பிடிப்பது என்பது அவருக்கு ரொம்பவே பிடித்தமானது. அந்தப் பகுதியை அவர் ஏற்கனவே வெற்றிகரமாக முடித்துவிட்டார் என்று பதிவிட்டுள்ளார்.

இன்னொரு ரசிகர், இன்றைக்கு பல பெண்களின் தூக்கம் கலைந்தது என்று பதிவிட்டுள்ளார்.

விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் 26ம் தேதி புது டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரகசிய திருமணம் செய்ததால் இருவரின் ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.