Tuesday, November 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!; கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு!!

உடுமலை சங்கர் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்ணின் தந்தை உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து, திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் இன்று (டிசம்பர் 12, 2017) பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

உடுமலை சங்கரும் கவுசல்யாவும் திருமண கோலத்தில்…

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் வேலுசாமி. இவருடைய மகன் சங்கர் (22). திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமி மகள் கவுசல்யா (19).

இருவரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பிஇ படித்து வந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் காதலித்து வந்த நிலையில், பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இருதரப்பு பெற்றோரையும் எதிர்த்து அவர்கள் வீட்டுக்குத் தெரியாமல் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, அவர்கள் இருவரையும் ஆணவப்படுகொலை செய்ய கவுசல்யாவின் தந்தை திட்டம் தீட்டினார்.

கடந்த ஆண்டு மார்ச் 13ம் தேதி, உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் பகுதியில் காதல் தம்பதியினர் சென்று கொண்டிருந்தனர்.

உடுமலை பேருந்து நிலையத்தில் சங்கரை கொன்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்செல்லும் கும்பல்…

அவர்களை வழிமறித்த மோட்டார் சைக்கிளில் வந்த கூலிப்படை கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது. சங்கர், நிகழ்விடத்திலேயே பலியானார்.

படுகாயம் அடைந்த கவுசல்யா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் உடல்நலம் தேறினார்.

உடுமலை பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை நிகழ்வு, அப்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வைரல் ஆனது. கொலையாளிகளைப் பிடிக்கவோ, தடுக்கவோ குழுமியிருந்த மக்களில் ஒருவர்கூட முயற்சிக்காததும் கடும் விமர்சனத்திற்குள்ளானது.

இந்தக் கொலை நடந்த மறுநாளே (மார்ச் 14) கவுசல்யாவின் தந்தை சின்னசாமி நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவருடைய மனைவி அன்னலட்சுமி மார்ச் 29ம் தேதி, தேனி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, கூலிப்படை கும்பலைச் சேர்ந்த ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் என்கிற மைக்கேல், ஸ்டீபன் தன்ராஜ், பிரசன்னா, எம்.மணிகண்டன் ஆகிய 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கொலை, கொலை முயற்சி, கூட்டுச்சதி, வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கு விசாரணை, திருப்பூர் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக நடந்தது வந்தது. வழக்கமாக அரசுத்தரப்பில் ஒரே ஒரு வழக்கறிஞர் மட்டுமே வாதாடுவர்.

ஆனால், முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் நான்கு பேர் கொண்ட குழுவினர் அரசுத்தரப்பில் ஆஜராகி வாதாடினர். நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கில் விசாரணைகள் அனைத்தும் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இன்று (டிசம்பர் 12, 2017) தீர்ப்பு அளிக்கப்பட்டது. பகல் 12.50 மணியளவில் தீர்ப்பு விவரங்கள் வாசிக்கப்பட்டன.

சங்கர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, தாய் மாமன் பாண்டித்துரை, பிரசன்னா ஆகிய மூன்று பேர் மீதான குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபிக்கப்படவில்லை என்றுகூறி, அவர்களை மட்டும் வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார் நீதிபதி அலமேலு நடராஜன்.

எஞ்சியுள்ள கவுசல்யாவின் தந்தை சின்னசாமி (ஏ1), ஜெகதீசன் (ஏ4), மணிகண்டன் (ஏ5), செல்வக்குமார் (ஏ6), கலை தமிழ்வாணன் (ஏ7), மதன் என்கிற மைக்கேல் (ஏ8) ஆகிய ஆறு பேருக்கும் இரட்டை தூக்கு தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தார். ஜெகதீசனுக்கு இரட்டை தூக்கு தண்டனையுடன் ரூ.1.30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஸ்டீபன் தன்ராஜிக்கு (ஏ9) இரட்டை ஆயுள் தண்டனையும், 11வது குற்றவாளியான மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எதிரிகள் அனைவரும் பலமுறை ஜாமீன் கேட்டும் அதற்கு அரசுத்தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக டிஎஸ்பி விவேகானந்தன், தானே நேரடியாக இந்த வழக்கில் மிகத்திறம்பட விசாரணை மேற்கொண்டார். அவருடைய விசாரணையின் உதவியால் அரசுத்தரப்பு வழக்கறிஞர்களும் திறமையான வாதங்களை முன்வைத்தனர்.

கவுசல்யாவின் இப்போதைய தோற்றம்…

ஆணவக்கொலை வழக்கில் இந்தியாவிலேயே முதன்முதலாக 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதும் உடுமலை சங்கர் வழக்கில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பு நாள் என்பதால் இன்று திருப்பூர் நீதிமன்ற வளாகமே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

எனினும், தீர்ப்பு வெளியான பிறகு, ஆணவக்கொலை சரிதான் என்று கூடியிருந்த சிலர் விமர்சித்ததால் நீதிமன்ற வளாகத்தில் கைகலப்பு ஏற்பட்டது. அவர்களை காவல்துறையினர் லேசாக தடியடி நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

முன்னதாக, குற்றம்சாட்டப்பட்டவர்களில் கவுசல்யாவின் தந்தை உள்பட 8 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறப்பட்டது. அதுபற்றி கவுசல்யாவிடம் கேட்டபோது, ‘குற்றவாளிகளை குற்றவாளிகள் என்றுதானே சொல்ல வேண்டும்,’ என்று மட்டும் கூறியிருந்தார்.