‘இந்த உலகத்தில் யாருமே நல்லவர்கள் இல்லை. எல்லோருக்கும் இரண்டு முகங்கள் இருக்கின்றன. வாய்ப்பு கிடைத்தால் அனைவருமே தவறு செய்யக்கூடியவர்கள்தான். ஆகையால் எல்லோரையுமே சந்தேகிக்க வேண்டும்’ என்ற செய்தியை உரத்துச் சொல்கிறது, ‘திருட்டுப்பயலே-2’ படம்.
நடிகர்கள்: பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா, சுசி கணேசன், எம்எஸ் பாஸ்கர்; ஒளிப்பதிவு: செல்லதுரை; இசை: வித்யாசாகர்; தயாரிப்பு; ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்; கதை, திரைக்கதை, இயக்கம்: சுசி கணேசன்.
ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளமே கதியாகக் கிடக்கும் ஒரு திருமணம் ஆன பெண்ணிற்கு, அதனூடாக அறிமுகம் ஆகும் ஓர் ஆணின் மூலமாக விரும்பத்தகாத நெருக்கடிகள் ஏற்படுகிறது. அந்த நெருக்கடியில் இருந்து அந்தப் பெண்ணை கணவர் காப்பாற்றினாரா?, ஃபேஸ்புக்கில் அறிமுகம் ஆன அந்த ஆண் அந்தக் குடும்பத் தலைவிக்கு எதற்காக குடைச்சல் கொடுக்கிறார்?, குடும்பத்தலைவியின் நிலை என்ன ஆனது? என்பதை சுவாரஸ்யமாக சொல்கிறது திருட்டுப்பயலே-2.
கடந்த 2006ம் ஆண்டு ஜீவன், மாளவிகா, சோனியா அகர்வால் ஆகியோரின் நடிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில் வெளியானது, ‘திருட்டுப்பயலே’. அதே இயக்குநர்; அதே தலைப்பு. ஆனால், வேறு ஒரு ‘சைபர் கிரைம் திரில்லர்’ கதையுடன் வந்திருக்கிறது ‘திருட்டுப்பயலே-2’.
இந்தப் படத்தின் நாயகன் செல்வம் (பாபி சிம்ஹா), காவல்துறை ஆய்வாளர். காவல்துறை நுண்ணறிவுப் பிரிவில் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்கும் வேலையில் இருக்கிறார்.
முக்கிய விஐபிகளின் பேச்சையெல்லாம் ஒட்டுக் கேட்கும் அவர், ஒரு நாள் ஏதேச்சையாக பால்கி என்கிற பாலகிருஷ்ணன் (பிரசன்னா) என்பவரின் பேச்சையும் ஒட்டுக்கேட்க நேரிடுகிறது. அவருடன் எதிர்முனையில் பேசுவது தன் மனைவி அகல்விளக்கு (அமலா பால்) என்பது தெரிய வரும்போது அதிர்ச்சி ஆகிறார். மனைவி பெரும் சிக்கலில் சிக்கிக் கொண்டிருப்பது அவருக்கு தெரியவருகிறது.
மனைவிக்கே தெரியாமல் அவரை பால்கியிடம் இருந்து காப்பாற்ற காவல்துறை ஆய்வாளரான செல்வம் முயற்சிக்கிறார். கணவருக்கு தெரியாமலேயே பால்கியின் மிரட்டலில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று அகல்விளக்கும் முயற்சிக்கிறார். கணவன், மனைவி இருவரையுமே தனது ஆட்டத்தில் மிகத்தந்திரமாக பயன்படுத்திக் கொண்டு, தன் காரியத்தை சாதித்துக்கொள்ள நினைக்கிறார் பால்கி.
ஒரு கட்டத்தில் நாயகன், வில்லன் இருவரின் பாத்திரங்களும் பூனைக்கும் எலிக்குமான துரத்தலாக பயணிக்கிறது. பிரசன்னா, பாபி சிம்ஹா, அமலா பால் ஆகிய மூன்று பாத்திரங்களை சுற்றியே திரைக்கதை நகர்கிறது. மூவருமே நிறைவான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். பிரசன்னாவுக்கு இது, 25வது படம்.
அவர் இந்தப் படத்தில் வில்லனா? கதாநாயகனா? என கேட்கும் அளவுக்கு அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவருடைய திரையுலக பயணத்தில் ‘அஞ்சாதே’ படத்திற்குப் பிறகு, திருட்டுப்பயலே-2 முக்கிய பங்கு வகிக்கும். பிரசன்னாவுக்கு மாற்றாக வேறெந்த நடிகருக்கும் பால்கி பாத்திரம் அத்தனை கச்சிதமாக பொருந்தி இருக்குமா என்பது சந்தேகமே.
அடுத்து, அமலா பால். அகல் விளக்கு என்ற வித்தியாசமான பாத்திரப் பெயரில் ரொம்பவே வசீகரிக்கிறார். கணவருக்கும், வில்லனுக்கும் இடையே சிக்கிக்கொண்டு அவர் தவியாய் தவிக்கும் காட்சியிலும், பாபி சிம்ஹா உடனான ரொமான்ஸ் காட்சிகளிலும் அமர்க்களப்படுத்துகிறார்.
பாபி சிம்ஹா, தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். காவல்துறை ஆய்வாளர் பாத்திரத்தில் அத்தனை கச்சிதம். ஊர் பேச்சையெல்லாம் ஒட்டுக்கேட்கும்போது சகஜமாக எடுத்துக்கொள்ளும் அவர், மனைவியின் பேச்சை ஒட்டுக்கேட்கும்போது ஏற்படும் அதிர்ச்சியை அழகாக பார்வையாளர்களுக்கு கடத்துகிறார்.
ஒரு காட்சியில் பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா ஆகிய மூன்று பேரும் ஒரே இடத்தில் சந்தித்து, ஒருவருக்கொருவர் ஏமாற்றிக் கொள்வதாக நினைத்து நடிக்கும் காட்சியில் திரையரங்கில் விசில் பறக்கிறது. இயக்குநரின் ரகளையான ரசனை பளிச்சிடுகிறது.
சில இடங்களில் வசனங்களும் ரொம்பவே கவர்கின்றன. ”நீ பேசறத நீயே ரெக்கார்டு பண்ணி கேட்டுப்பாரு. உன் மனசு ஒண்ணு நினைக்கும். உதடு ஒண்ணு பேசும்,” என்ற வசனமும், ”ரகசியம் மாட்டிக்கிச்சுன்னா பொய் வீராப்பு பேசும். மனசு அய்யோ அம்மான்னு அடிச்சுக்கும்,” என்ற வசனமும் ஈர்க்கின்றன.
தமிழில் நீண்ட நாளைக்குப் பிறகு தலை காட்டியிருக்கும் வித்யாசாகர் இசையில், ஒரே ஒரு டூயட் பாடல் மட்டும் தேறுகிறது. பின்னணி இசையில் சில இடங்களில் ரொம்பவே ஈர்க்கிறார். ஆனாலும் அவருடைய இயல்பான திறமை இந்தப்படத்தில் வெளிப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
சமகாலத்திற்கேற்ற கதைக்களமும், நேர்த்தியான திரைக்கதையும் இந்தப் படத்தின் பலம். அடுத்தது என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இடைவேளை விடுவது இந்தப்படத்தின் முக்கிய அம்சம். இப்படி ஒரு திருப்பத்துடன் தமிழில் இடைவேளை விட்டு பல ஆண்டுகள் ஆச்சு. ஒளிப்பதிவு கச்சிதம்.
ஆனால், படத்தின் முன் பாதியிலும், இரண்டாம் பாதியிலும் இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். அதை செய்திருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும்.
ஃபேஸ்புக் லைக்குகளுக்காக ஏங்கும் ஒவ்வொருவரும் தவறாமல் பார்க்க வேண்டிய படம்.
– வெண்திரையான்.