Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஊழலில் திளைக்கும் ‘டாப் – 3’ துறைகள்! ஆய்வில் புதிய தகவல்கள்!!

இந்தியாவில் ஊழலில்
திளைக்கும் முதல் மூன்று
துறைகள் என்னென்ன?
எத்தனை பேர் அரசு
சேவைகளைப் பெற லஞ்சம்
கொடுக்கின்றனர் என்பது
உள்ளிட்ட பல்வேறு பரபரப்பு
தகவல்கள், டிரான்ஸ்பரன்ஸி
இண்டர்நேஷனல் இந்தியா
நிறுவனம் நடத்திய ஆய்வில்
தெரிய வந்துள்ளது.

உலகம் முழுவதும் லஞ்சம், ஊழலுக்கு எதிராக போராடி வரும் டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் இந்தியா (டிஐஐ) என்ற தன்னார்வ அமைப்பு, சர்வதேச அளவில் ஊழல் மலிந்த நாடுகளை ஆண்டுதோறும் பட்டியலிட்டு வருகிறது. அரசு மற்றும் சார்பு நிறுவன ஊழியர்கள் தங்களின் கடமையைச் செய்ய அல்லது கடமைகளைச் செய்யாமல் இருக்க கையூட்டு பெறுவதையே ஊழல் என வரையறுக்கிறது இந்திய தண்டனை சட்டம்.

 

ஊழல் தடுப்பு சட்டம்-2018ன் படி,
லஞ்சம் கொடுப்பதும் குற்றம்
என்கிறது. மேலும், அவ்வாறு
லஞ்சம் கொடுப்பவருக்கும்
அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை
தண்டனை அல்லது அபராதம்
அல்லது இரண்டும் சேர்த்து
தண்டனை விதிக்கவும்
இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
டிஐஐ அமைப்பு நடத்திய ஆய்வில்,
மேற்கண்ட சட்டத்தைப் பற்றி
விளக்கிய பிறகும்கூட,
24 சதவீத இந்தியர்கள் அரசின்
சேவைகளைப் பெறுவதற்காக
கடந்த 12 ஆண்டுகளில் பலமுறை
லஞ்சம் கொடுத்திருப்பதாகவும்,
27 சதவீதம் பேர் ஓரிரு முறை
கையூட்டு கொடுத்திருப்பதாகவும்
சொல்லி இருக்கிறார்கள்.

 

டிஐஐ அமைப்பு நாடு
முழுவதும், 20 மாநிலங்களில்
248 நகரங்களைச் சேர்ந்த
1.90 லட்சம் பேரிடம் ஆய்வு
நடத்தியது. இவர்களில்
1.20 லட்சம் பேரிடம்
இந்திய அளவிலும், 70 ஆயிரம்
பேரிடம் மாநில அளவிலான
வினாக்களும் கேட்டு தரவுகளை
சேகரித்து உள்ளது. இவர்களில்
64 சதவீதம் பேர் ஆண்கள்;
36 சதவீதம் பேர் பெண்கள்.
முதல்நிலை நகரங்களில்
இருந்து மட்டும் அதிகபட்சமாக
49 சதவீதம் பேரிடம் கருத்துகள்
கேட்டிருக்கிறது. இதில்தான் பல
சுவாரஸ்ய தகவல்கள்
கிடைத்திருக்கின்றன
என்கிறது, டிஐஐ.

 

நாடு முழுவதும் கடந்த 12 மாதங்களில் 51 சதவீத இந்தியர்கள், லஞ்சம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த விகிதம், கடந்த 2018ம் ஆண்டில் 56 சதவீதமாக இருந்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டில் லஞ்சம் கொடுத்தோரின் எண்ணிக்கை 5 சதவீதம் குறைந்துள்ளது என்றாலும், 2017ம் ஆண்டுடன் (45%) ஒப்பிடுகையில் இந்த அளவு 6 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.

 

லஞ்சம், ஊழலில் திளைக்கும் நாடுகளை கடைசியில் இருந்து பட்டியலிட்டு வருகிறது டிஐஐ. உலகம் முழுவதும் 180 நாடுகளில் நடத்தப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இந்தியா 78வது இடத்தில் உள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா 94 – 95வது இடத்தில் இருந்தது. அந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது ஊழல் ஒழிப்பில் சில அடிகளை நேர்மறையாக கடந்து வந்திருப்பதாகவே கருதலாம்.

 

மாதிரி கூறெடுப்பில்
பங்கேற்றவர்களில் 35 சதவீத
இந்தியர்கள் லஞ்சத்தை
பணமாகவே கொடுத்துள்ளதாகவும்,
44 சதவீதம் பேர் லஞ்சத்தை
அரசு ஊழியர்களின்
அலுவலகங்களில் வைத்தே
கொடுத்துள்ளதாகவும்
தெரிவித்துள்ளனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால்,
38 சதவீத இந்தியர்கள்,
பணம் கொடுத்தால் கண்டிப்பாக
தாங்கள் எதிர்பார்க்கும் வேலை
நல்லபடியாக முடிந்து விடும்
என்று ஆழமாக நம்புகிறார்களாம்.
அதேநேரம், ஊழலை ஒழிக்க
இந்தியாவில் ஆக்கப்பூர்வமான
நடவடிக்கைகள் ஏதும்
எடுக்கவில்லை என்று
48 சதவீதம் பேர் கவலை
தெரிவித்துள்ளனர்.

 

இந்தியாவில்
அதிகம் லஞ்சம், ஊழல்
தாண்டவமாடும் துறைகளில்
முதலிடத்தில் பத்திரப்பதிவுத்
துறையும், இரண்டாவது
மற்றும் மூன்றாவது இடங்களில்
காவல்துறை மற்றும்
உள்ளாட்சித்துறைகளும்
இருப்பதும் ஆய்வில்
தெரிய வந்துள்ளது.
சொத்துகளை பதிவு
செய்வதற்காக பத்திரப்பதிவு
அலுவலகம் சென்றால் அங்கு,
பணம் இல்லாமல்
எந்த கோப்பும் நகராது
என்று 49 சதவீதம் பேர்
சலிப்புடன் கூறியுள்ளனர்.
அதேநேரம், லஞ்சம் கொடுத்து
காரியங்களை சாதித்துக்
கொண்டதாகவும்
26 சதவீதம் பேர்
தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 8 சதவீதம்
முந்தைய நிலையைக்
காட்டிலும் பத்திரப்பதிவுத்
துறையில் ஊழல் பெருகி
இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

 

அடுத்து, உள்ளாட்சித்துறையில் பிறப்பு முதல் இறப்பு வரை, வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு பெறுவது முதல், வரி நிர்ணயம் செய்வது வரை அனைத்திற்கும் ஊழியர்கள் கையூட்டை எதிர்பார்ப்பதாக 44 சதவீதம் பேர் தெரிவித்து இருக்கிறார்கள். அதேபோல், காவல்துறையிலும் முன்பை விட 11 சதவீதம் வரை லஞ்சம் பெருகியிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

 

இந்தியா போன்ற வளரும் நாடுகளில், லஞ்சம் என்பது நம் தேசிய வியாதிகளில் ஒன்றாகிவிட்டது. எல்லா குற்றங்களிலும் சாமானிய மக்களுக்கும் பங்கு இருக்கிறது. இங்கே, தனி மனிதன் மாறாத வரையில் ஊழல் ஒழிப்பு என்பதும் கானல் நீர்தான்.

 

– பேனாக்காரன்