Saturday, June 14மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

தக் லைப்: புதிய மொந்தையில் பழைய கள்!

நாயகன் படத்திற்குப் பிறகு, 37 ஆண்டுகள் கழித்து இயக்குநர் மணி ரத்னமும், கமலும் இணைகிறார்கள் என்றபோதே தக் லைப் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியது. இந்நிலையில், ஜூன் 5ம் தேதி வெளியாகி இருக்கிறது தக் லைப்.

சட்டத்திற்கும், காவல்துறைக்கும்
அஞ்சாமல் தான்தோன்றித்தனமான
செயல்களில் ஈடுபடுவோரே
தக் / பொறுக்கிகள் / தாதாக்கள்.
அப்படிப்பட்ட ஒரு தக்கின்
வாழ்க்கையில் நடக்கும்
சம்பவங்கள்தான்
இந்தப் படத்தின் கதை.

1994ல், பழைய தில்லியில்
கதை தொடங்குகிறது.
தூத்துக்குடி மாவட்டம்
காயல்பட்டினத்தை பூர்வீகமாக
கொண்ட ரங்கராய சக்திவேலும் (கமல்),
அவருடைய அண்ணன் மாணிக்கமும் (நாசர்)
பழைய தில்லியில் ரியல் எஸ்டேட்
மாபியாக்களாக வலம் வருகிறார்கள்.

இவர்களுக்கும், மற்றொரு
கேங்ஸ்டரான சதானந்த் (மகேஷ் மஞ்ச்ரேகர்)
தலைமையிலான கோஷ்டிக்கும்,
ஓர் அடுக்குமாடி குடியிருப்பில்
வைத்து பேச்சுவார்த்தை நடக்கிறது.
சக்திவேல் கோஷ்டியை சுற்றி
வளைக்கிறது போலீஸ்.
அப்போது நடந்த துப்பாக்கி
சண்டையில், செய்தித்தாள்
விநியோகிக்கும் அப்பாவி ஒருவர்
சுட்டுக் கொல்லப்படுகிறார்.

கண் முன்னாலேயே
தன் தந்தை இறந்ததைப் பார்த்து
துடிக்கும் அமரன் என்ற சிறுவனை
(சிலம்பரசன்) கேடயமாக்கி, போலீசிடம்
இருந்து தப்பிக்கிறார் கமல்.
இந்த களேபரத்தில் அந்தச் சிறுவன்,
தன் தங்கை சந்திராவை (ஐஸ்வர்யா லட்சுமி)
பிரிய நேரிடுகிறது.

கேடயமாக இருந்து உயிரைக்
காப்பாற்றிய சிறுவனை தன்
மகன்போல் வளர்க்கிறார் கமல்.
தன்னுடைய தாதா தொழிலுக்கு
அடுத்த வாரிசு அவர்தான் என்கிறார்.

ஒரு கட்டத்தில்,
தன் வளர்ப்புத் தந்தைதான்
தனது தந்தையை சுட்டுக் கொன்றார்
என்ற உண்மை சிலம்பரசனுக்குத்
தெரிய வருகிறது. மேலும்,
ரங்கராய சக்திவேலின் இடத்தை
அடைய நாசரும், உடன் இருப்பவர்களும்
சிலம்பரசன் மூலம் காய் நகர்த்துகிறார்கள்.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான
போரில் சிலம்பரசன் வென்றாரா?
தந்தையைக் கொன்ற கமலை
பழிவாங்கினாரா? பிரிந்து சென்ற
தன் தங்கையை தேடிக் கண்டுபிடித்தாரா?
என்பதை ஓயாமல் வெடிக்கும்
துப்பாக்கிகளுக்கு இடையில், ரத்தம்
தெறிக்க தெறிக்கச் சொல்கிறது தக் லைப்.

கமல், சிலம்பரசன் இருவருக்குமே சம அளவில் ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சொல்லப்போனால் ஒரு ‘தக்’குக்கான உடல்மொழி, ஆக்ஷன் என சிலம்பரசன் அனாயசமாக மிரட்டி இருக்கிறார். கிளைமாக்சில் கமலோடு நேருக்கு நேர் மோதும் சண்டைக் காட்சியிலும், அலி ஃபசல் கும்பலிடம் ஒற்றையாளாக சிக்கிக் கொண்டு, அவர்களைப் புரட்டி எடுக்கும் காட்சியிலும் மிரள வைக்கிறார் சிம்பு.

விண்வெளி நாயகனாக புரமோட் ஆகியிருக்கும் கமல்ஹாசன், அதிரடி ஆக்ஷன், சென்டிமென்ட், ரொமான்ஸ் என கலந்து கட்டி அடிக்கிறார்.

கமலின் மனைவியாக ஜீவா பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்திப் போகிறார் அபிராமி. ஊரே மிரளும் தாதாவாக இருந்தாலும் அபிராமியிடம் மட்டும் நெளிவதும், டேய் சக்திவேலுனு ஒருமுறை சொல்லு… என கெஞ்சுவதும், குழைவதுமாக நைந்து போகும் கமல் ரசிக்க வைக்கிறார்.

தாதாக்களின் வாழ்க்கையில் மனைவி இருக்கும்போது துணைவி இல்லாமலா போகும்? இந்திராணியாக வரும் திரிஷாவுக்கு என சொகுசாக ஒரு வீடு எடுத்துக் கொடுத்து ‘வைத்துக் கொள்கிறார்’ கமல். ‘என்ன வேணும் உனக்கு…’ எனக் கேட்கும் ‘சுகர் பேபி’ திரிஷா, ரசிகர்களையும் மையல் கொள்ள வைக்கிறார்.

அரியணையைக் கைப்பற்றும்
போட்டியில் தம்பி என்றும் பாராமல்
துரோகம் இழைக்கும் நாசர்,
சதியில் பங்குபெறும் ஜோஜு ஜார்ஜ்,
பக்ஷூ கவனம் ஈர்க்கிறார்கள்.
ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி, அலி ஃபசல்,
அர்ஜூன் சிதம்பரம், வடிவுக்கரசி,
இளங்கோ குமாரவேல், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி,
அசோக் செல்வன், தனிக்கல பரணி
ஆகியோருக்கு சொல்லிக் கொள்ளும்
அளவுக்கு ஸ்கிரீன் ஸ்பேஸ் இல்லை.

ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை,
படத்திற்கு பெரிய பலம். ஆக்ஷன்
காட்சிகளில் அதிர்வைக்
கூட்டுகிறது இசை.

பிளாஷ்பேக் காட்சியில்,
கருப்பு வெள்ளையில் பழைய
தில்லியின் அடுக்குமாடி குடியிருப்பு,
கேங்ஸ்டர்களுக்கும் போலீசாருக்கும்
இடையேயான துப்பாக்கிச்
சண்டைக் காட்சிகள் முதல்
ஜெய்சல்மார் பாலைவனம்,
காத்மாண்டு பனி மலை, திருச்செந்தூர் வரை
ரவி கே.சந்திரனின் கேமரா கோணங்களும்,
லைட்டிங்கும் ரசிகர்களுக்கு
புது அனுபவத்தை வழங்குகிறது.
பனி மரங்களின் ஏரியல் காட்சிகளை
அகன்ற திரையில் பார்க்கும்போதே
பரவசமூட்டுகிறது.

ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங்,
ஆக்ஷன் காட்சிகளில் விறுவிறுப்பைக்
கூட்டினாலும், படத்தின் நீளம்
165 நிமிடங்கள் என்பது அயர்வைக்
கூட்டுறது. இன்னும் கத்திரி
போட்டிருக்கலாம். அன்பறிவு சகோதரர்களின்
பரபரப்பான ஆக்ஷன் காட்சிகள்
தெறிக்க விடுகிறது.

படத்தின் ஆரம்பத்தில் வரும்
பிளாஷ்பேக் காட்சிகளில்
கமலை 30 வயது இளைஞராக
ஏஐ தொழில்நுட்பத்தில் காட்டி இருப்பது
ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்தப் படம், தொழில்நுட்ப ரீதியாக
உயர் தர நிலையில் இருக்கிறது.
ஆனாலும், இடைவேளைக்குப் பிறகான
திரைக்கதை மிகவும்
தொய்வாக நகர்கிறது.

மணிரத்னம் இயக்கிய
செக்கச்சிவந்த வானம் படத்தில்,
தாதாவாக கோலோச்சும் பிரகாஷ்ராஜிடம்
இருந்து அதிகாரத்தைக் கைப்பற்ற,
அவருடைய மகன்களான அரவிந்த்சாமி,
அருண்விஜய், சிலம்பரசன் ஆகியோருக்குள்
போட்டி நிலவும். இந்த மோதலில்
அவர்களே ஒருவருக்கொருவர்
சுட்டுக் கொன்று விடுவார்கள்.
இதே கதைதான், தக் லைப் படத்தின்
கதையும். படத்தின் முதல் பாதியைப்
பார்க்கும்போது செ.சி.வா. படத்தின்
சாயலே கண் முன் வந்து போகிறது.

நாயகன் படத்தில் கமலின் மகள்,
தன் மகனுக்கு தந்தையின் நினைவாக
சக்திவேல் என பெயர் சூட்டி இருப்பார்.
அதேபோன்றதொரு காட்சி,
தக் லைப் படத்திலும் உண்டு.
நாயகனில் மகனிடம் பொறுப்பை
ஒப்படைத்ததற்கு அடையாளமாக
பீடா மடித்துக் கொடுப்பார் சக்திவேல் நாயக்கர்.
தக் லைப் படத்தில், வளர்ப்பு மகனை
அடுத்த வாரிசு என அடையாளப்படுத்தும்
விதமாக அமரனின் கையில் வாட்சை
மாட்டி விடுவார் ரங்கராய சக்திவேல்.

நாயகனில் வளர்ப்பு மகன் போல்
பாவித்து வளர்த்து வந்த மகன்தான்,
கிளைமாக்சில் கமலை சுட்டுக் கொல்வார்.
அந்த மகனின் பாத்திர வார்ப்புதான்
சிலம்பரசனுக்கானதும்.

பார்த்துப் பார்த்துப்
புளித்துப் போன கதையும்,
படத்தில் ட்விஸ்ட்டுகள் இல்லாத
திரைக்கதையும், யூகிக்கக்கூடிய
காட்சியமைப்பும், எந்த இடத்திலும்
ரசிகர்களுடன் உணர்வுப் பூர்வமாக
ஒன்றாததும் தக் லைப்
படத்தின் பெருங்குறை.

விக்ரம் படத்தில், ‘மாஸ்க் மேன்’ யார்? என்று தெரிய வரும் காட்சியில், ரசிகர்கள் தன்னை அறியாமலேயே கரவொலி எழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அத்தகைய மாயாஜாலம் இந்தப் படத்தில் மிஸ்ஸிங்.

வேண்டுமானால் ஒரே ஒரு டிவிஸ்டை (!?) சொல்லலாம். கமல் மெயிண்டெய்ன் செய்து வரும் திரிஷாவை, அவருக்குப் பிறகு வளர்ப்பு மகனான சிலம்பரசன் ‘வைத்துக் கொள்வார்’. அதற்கு திரிஷாவும் சம்மதித்து விடுவது படு அபத்தம். இது என்ன லாஜிக் என்றே தெரியவில்லை.

நல்லவேளை, திரிஷாவை அணுகியதுபோல் அபிராமியையும் சிலம்பரசன் அணுகாமல் விட்டாரே என்று ஆறுதல் பட்டுக் கொள்ளலாம். இயக்குநர் மணிரத்னத்திற்கு என்னதான் ஆச்சு?

சிறைக்குள்ளேயே திரிஷாவை அழைத்து வந்து குடும்பம் நடத்தும் அளவுக்கு சக்தி படைத்த ரங்கராய சக்திவேலுக்கு, தன்னைச் சூழ்ந்திருக்கும் ஆபத்தை அறியாமல் தன்னந்தனியாக காத்மாண்டுவில் போய் சிக்கிக் கொள்வது புதிராக உள்ளது.

படம் முழுக்க கேங்க்ஸ்டர்கள்
பலமுறை கமலை துப்பாக்கியால்
சல்லடையாக துளைத்திருப்பார்கள்.
ஆனாலும் அவர் உயிர்
பிழைத்துக் கொள்கிறார்.
பனி மலையில் ஆயிரம் அடி
உயரத்தில் இருந்து விழுந்தும்,
பனிச்சரிவில் 1000 கிமீ தூரம்
உருண்டு சென்ற பிறகும்கூட
உயிருக்கு பழுதில்லாமல்
மீண்டு விடுகிறார் கமல்.
லாஜிக் என்றால் கிலோ என்ன விலை
என்று கேட்கும் தெலுங்கு படங்களையே
பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு
தர்க்கப் பிழைகள் மலிந்த
படமாக இருக்கிறது தக் லைப்.

பாடகி தீ குரலில் வரும்
முத்த மழை பாடல்,
படத்திலேயே இல்லை.
இப்படி நூதனமாக ரசிகர்களிடம்
சுரண்டுவது குற்றம்
இல்லையா கமல் சார்?
ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை
தூக்கி விடுவோம் என
பொய் சொல்லி, ஆட்சியைக்
கைப்பற்றிய கட்சியின்
மோசடியைப் போல் இருக்கிறது,
படத்திற்கான புரமோஷன் உத்திகள்.

புரமோஷன் நிகழ்வுகளின்போது,
படத்தில் என்னவெல்லாம் இருக்கிறது
என்று சொன்னீர்களோ அந்தக்
காட்சிகளெல்லாம் இருக்க வேண்டும்.
அதற்கெல்லாம் சேர்த்துதான்
டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நல்ல பாடல்களை எதிர்பார்த்து
வரும் ரசிகர்களுக்கு,
திரையில் பாடல் வராதபோது
ஏமாற்றம் அளிக்கிறது.
அதுவும் ஒரு வகை சுரண்டலே.
அஞ்சு வண்ணப்பூவே, ஜிங்குச்சா,
விண்வெளி நாயகா பாடல்கள்
கூட படத்தில் முழுமையாக
இடம்பெறவில்லை.

எந்தப் படத்திற்கும் வலுவான கதைதான் அடித்தளம். கதையே இல்லாமல் வெறும் நகாசு வேலைகளை நம்பி பயணித்திருக்கிறார்கள் கமலும் மணியும். படத்தில் மட்டுமின்றி, ரசிகர்களையும் நம்ப வைத்து சம்பவம் செய்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் 300 குண்டுகள் பாய்ந்தாலும் கமல் பிழைத்துக் கொள்கிறார். செத்துப்போனது பாவம் ரசிகர்கள்தான்.

  • பேனாக்காரன்

Leave a Reply