Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பிரபல இயற்பியல் விஞ்ஞானிக்கு கூகுள் ‘டூடுல்’ கவுரவம்!

குவாண்டம் இயக்கவியல் துறையில் அளப்பரிய சாதனை படைத்த இயற்பியலாளர் மேக்ஸ் பார்ன்-ன் 135வது பிறந்த நாளையொட்டி, அவருக்கு கூகுள் நிறுவனம் இன்று (டிசம்பர் 11, 2017) டூடுல் வெளியிட்டு கவுரவம் சேர்த்துள்ளது.

ஜெர்மனி நாட்டில் உள்ள பிரெஸ்லூ நகரில், 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி பிறந்தவர் மேக்ஸ் பார்ன். இப்போது, இந்த பிரெஸ்லூ நகரம் போலந்து நாட்டில் உள்ளது. பிரெஸ்லூவில் உள்ள கோட்டிங்கென் பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி ஆய்வை நிறைவு செய்தார்.

இயற்பியல், கணிதம் ஆகிய துறைகளில் ஆர்வமிக்க மேக்ஸ் பார்ன் இல்லாவிட்டால், இன்றைக்கு மருத்துவத்துறையில் நமக்கெல்லாம் எம்ஆர்ஐ ஸ்கேன், லேசர் சாதனங்கள் கிடைத்திருக்காது. அல்லது, இன்னும் வெகுகாலம் ஆகியிருக்கலாம்.

கருத்தியல் இயற்பியல், குவாண்டம் இயக்கவியலில் மட்டுமின்றி, கணித சமன்பாடுகளை உருவாக்குவதிலும் கெட்டிக்காரர். தனிநபர் கணினி பயன்பாட்டிற்கும் இவருடைய பல சமன்பாடுகள் அடிப்படை காரணமாக அமைந்திருக்கின்றன.

அறிவியல் உலகத்தில் ‘பார்ன் விதி’ ரொம்பவே பிரபலம். மேக்ஸ் பார்ன் உருவாக்கிய பார்ன் விதி மூலமாக குவாண்டம் கோட்பாடு பயன்பாட்டிற்கு கணித நிகழ்தகவு வாயிலாக, அலைகளில் துகள்களின் இருப்பிடத்தை அறிய உதவினார். இதற்காகத்தான் அவருக்கு 1954ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தன் வாழ்நாள் முழுவதும் இயற்பியலுக்கு அர்ப்பணித்துக்கொண்ட மேக்ஸ் பார்ன், 1970ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி, தனது 88வது வயதில் இறந்தார்.

அவரை கவுரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் கணித சமன்பாடுகள், பென்சில், கணக்கீடுகள் செய்யப்பட்ட காகிதங்கள் அவற்றினூடாக மேக்ஸ் பார்ன் சிந்தித்துக் கொண்டிருப்பது போன்ற சித்திரத்தை வெளியிட்டுள்ளது.