Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

”அரசாங்கத்தை தனியாரிடம் விற்றுவிடுங்கள்!”- சீமான் ஆவேசம்

எல்லா துறைகளிலும் தனியார்தான் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றால் அரசாங்கம் எதற்கு? அதையும் தனியாருக்கு ஏலம் விட்டுவிட வேண்டியதுதானே? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கூறினார்.

 

சேலம் மாவட்டம் காமலாபுத்தில் 160 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக காமலாபுரம், சிக்கனம்பட்டி, சட்டூர், பொட்டியபுரம், தும்பிப்பாடி ஆகிய கிராமங்களில் 570 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.

 

இதற்கு அந்த கிராமங்கங்களைச் சேர்ந்த மக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தவிர, சென்னை – சேலம் எட்டு வழிச்சாலைக்காகவும் சேலம் மாவட்டத்தில் 18 கிராமங்களில் விளை நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டத்தை எதிர்த்தும் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த மே 12ம் தேதி சேலம் வந்திருந்தார். சட்டூர் கிராமத்தில் நடந்த கூட்டத்தில், விமான நிலையம் விரிவாக்கம் மற்றும் எட்டு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்துவதால் நிலம் பறிபோகும் விவசாயிகள், பொதுமக்களுக்கு ஆதரவாக பேசினார்.

 

அந்தக் கூட்டத்தில், அரசுக்கு எதிராக பேசியதாகவும், விவசாயிகளை போராட்டத்திற்கு தூண்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஓமலூர் காவல்துறையினர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

 

இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவருக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிமன்றம், ஓமலூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டது.

 

இதையடுத்து, இன்று (ஜூலை 12, 2018) காலை அவர் ஓமலூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ரமேஷ், ஓமலூர் காவல் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்துடுமாறு உத்தரவிட்டார்.

 

நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”எதிர்காலத்தில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் எட்டு வழிச்சாலை போடுவதாக முதல்வர் கூறுகிறார். அப்போது மக்கள்தொகையும்தானே அதிகரிக்கும். அதற்கேற்ப உணவு உற்பத்திக்கு என்ன மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது? இருக்கின்ற விளை நிலத்தையும் பிடுங்கி சாலை போட்டுவிட்டால் சோறு எப்படி திங்கறது?

 

கார் தேய்மானம் பற்றித்தான் அரசாங்கம் கவலைப்படுகிறது. கார் ஓட்டுகிறவனுக்குத்தான் இங்கே அரசாங்கம் நடக்கிறதே ஒழிய, விவசாயிகளுக்கான அரசாங்கம் இல்லை.

 

எல்லாவற்றிலும் தனியார்தான் சிறப்பாக செயல்படுகின்றனர் என்றால் அரசாங்கம் மட்டும் எதற்கு? அதையும் தனியாருக்கு ஏலம் விட்டுவிட வேண்டியதுதானே?.

 

சாலை விபத்துகளில் 11500 பேர் இறந்து விட்டதாக ஹெச்.ராஜா சொல்கிறார். அதனால் எட்டு வழிச்சாலை போடுகிறோம் என்கிறார். டாஸ்மாக் மது குடித்து இரண்டரை லட்சம் பேர் செத்துவிட்டனர். அதனால் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டியதுதானே? அவற்றை மூடிவிட்டால் நாமும் வரவேற்போம்.

 

உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளுக்குதான் இந்த அரசாங்கம் வேலை செய்கிறது. விவசாயிகளுக்காக அல்ல. நிலத்தைக் காப்பாற்றுவதற்காக விவசாயிகள் கால்களில் விழுந்து போராடுகின்றனர்.

 

அதைக்கூட பொருட்படுத்தாமல் அவர்களைக் கட்டாயப்படுத்தி கைது செய்கின்றனர். இந்த அரசாங்கம் ஒரு கையாலாகாத அரசாங்கம். எதற்கு இங்கே அரசாங்கம். அரசாங்கத்தையே விற்றுவிட்டுப் போய்விட வேண்டியதுதானே?,” என்றார் சீமான்.