Monday, May 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

விளை நிலங்களை பிடுங்குவதற்காக அரசு வேலையில் முன்னுரிமை… முதியோர் உதவித்தொகை… சுயதொழில் கடன்… தினுசு தினுசாக சரடு விடும் வருவாய்த்துறை!

எட்டு வழிச்சாலைக்காக விளை நிலங்களை கையகப்படுத்துவதில் சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதில் முனைப்பு காட்டும் சேலம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், விவசாயிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை, முதியோர் உதவித்தொகை, பசுமை வீடு, சுயதொழில் கடனுதவி என தினுசு தினுசாக சரடு விட்டு வருகின்றனர்.

சென்னை – சேலம் எட்டுவழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைக்காக சேலம் மாவட்டத்தில் அரியானூரில் தொடங்கி மஞ்சவாடி கணவாய் காப்புக்காடு வரை 248 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

 

அரியானூர், உத்தமசோழபுரம், பூலாவரி, நாழிக்கல்பட்டி, நிலவாரப்பட்டி, மின்னாம்பள்ளி, சின்னக்கவுண்டபுராம், அயோத்தியாப்பட்டணம், மாசிநாயக்கன்பட்டி, குள்ளம்பட்டி, பருத்திக்காடு, குப்பனூர், ஆச்சாங்குட்டப்பட்டி உள்ளிட்ட 18 கிராமங்களின் வழியாக பசுமைவழி விரைவுச்சாலை அமைக்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்காக விளை நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது என்று விவசாயிகள், பொதுமக்கள் தொடக்கம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கெல்லாம் கொஞ்சமும் செவி சாய்க்காத சேலம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் கையகப்படுத்த வேண்டிய நிலங்களை அளவீடு செய்து முட்டுக்கல் நட்டனர். தற்போது துல்லிய அளவீடு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதற்கிடையே, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் 1956 பிரிவு 3 (சி) (1)-ன் படி, நிலம் கையகப்படுத்தப்பட உள்ள அதன் உரிமையாளர்களிடம் ஏற்கனவே பெறப்பட்ட ஆட்சேபனை மனுக்கள் மீதான சட்டப்பூர்வ விசாரணையை தொடங்கியுள்ளனர். முதல்கட்டமாக கடந்த 6ம் தேதி இந்த விசாரணை நடந்தது.

இரண்டாம் கட்ட விசாரணைக்கு ஆஜராகும்படி, ஆச்சாங்குட்டப்பட்டி (56 பட்டாதாரர்கள்), ஆச்சாங்குட்டப்பட்டி புதூர் (4 பட்டாதாரர்கள்), அரமனூர் (3), குப்பனூர் (66), மாசிநாயக்கன்பட்டி (74) என மொத்தம் 203 பட்டாதாரர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டு இருந்தது.

 

குப்பனூரைச் சேர்ந்த 30 விவசாயிகள் கருப்பு பட்டை அணிந்து கொண்டு வந்து விசாரணை நடந்த மண்டபத்தின் முகப்பில் நின்றபடியே, எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘காப்போம் காப்போம் விவசாயத்தைக் காப்போம்’, ‘வேண்டாம் வேண்டாம் எட்டு வழிச்சாலை வேண்டாம்’ என்று முழக்கமிட்டனர். பின்னர் அவர்கள், இந்த சட்டப்பூர்வ விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றும், விசாரணையை புறக்கணிக்கிறோம் என்றும் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினர்.

இதுகுறித்து குப்பனூரைச் சேர்ந்த விவசாயி நாராயணன் கூறுகையில், ”சட்டப்பூர்வ விசாரணைக்காக ஒரு மண்டபத்திற்கு வரவழைத்துவிட்டு, அங்கேயும் அதிகாரிகள் ஏன் விவசாயிகளை தனித்தனியாக அறைக்கு அழைத்துப் பேச வேண்டும்? விசாரணை என்றால் பகிரங்கமாக எங்கள் அனைவரிடமும் கருத்துகளைக் கேட்க வேண்டும். பசுமைவழி விரைவுச்சாலை பற்றி எல்லோர் முன்னிலையிலும் தெளிவாக விளக்க வேண்டும். விவசாயிகளை தனியாக அழைத்து ‘பிரைன் வாஷ்’ செய்கின்றனர். இந்த விசாரணையில் நம்பிக்கை இல்லாததால் இதை நாங்கள் புறக்கணிக்கிறோம்,” என்றார்.

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசாரணை மண்டபத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மண்டபத்திற்குள் வரும் விவசாயிகள் மண்ணெண்ணெய் கேன்கள், தீப்பெட்டி மற்றும் தடை செய்யப்பட்ட பொருள்களை கொண்டு வருகிறார்களா என்பதையும் முன்னெச்சரிக்கையாக சோதனை செய்த பிறகே அனுமதித்தனர்.

கடந்த 6ம் தேதி நடந்த விசாரணையின்போது இல்லாத வகையில் இன்று, விசாரணை மண்டபத்திற்குள் விவசாயிகள் யாராவது ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கிறார்களா?, ஊடகத்தினர் யார் யார் என்ன செய்கின்றனர்? என்பது குறித்து கண்காணிக்கும் விதமாக தனி வீடியோ கேமரா மூலம் அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டது. தவிர, வழக்கம்போல் விசாரணை அதிகாரியிடம் பேசும் விவசாயிகளின் கருத்துகளும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

 

விசாரணை அதிகாரியான மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், நிலம் கொடுக்கும் விவசாயிகள், பொதுமக்களிடம் அவர்களின் வீடுகளில் படித்த பிள்ளைகள் இருக்கிறார்களா?, வயதான நபர்கள் எத்தனை பேர்?, அரசு வேலையில் யாராவது இருக்கிறார்களா? என்பது உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிந்தார்.

 

விவசாயிகளிடம் நேரில் பேசாதது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் கூறுகையில், ”எட்டு வழிச்சாலைக்காக தங்கள் நிலத்தில் 50 சதவீதம் பரப்பளவுக்கு மேல் பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் மட்டுமே அரசு வேலைக்கான முன்னுரிமை சான்றிதழ் வழங்கப்படும் என்றார். மேலும், 35 லட்சம் பேர் உள்ள இந்த மாவட்டத்திற்கு ஒரே ஒரு வருவாய் அலுவலர்தான். நானே நேரில் சென்று எல்லோரிடமும் விசாரணை நடத்துவது என்பது சாத்தியம் இல்லை. அதற்காகத்தான் சட்டப்படி, விவசாயிகளை இங்கு அழைத்துப் பேசுகிறோம்,” என்றார்.

 

சட்டப்பூர்வ விசாரணையின்போது பல விவசாயிகளுக்கு அவர் தன் கைப்பட, கோப்புகளின் முன் பக்கத்தில் முன்னுரிமை சான்றிதழுக்கு பரிந்துரை செய்யும்படி குறிப்பு எழுதி வழங்கினார்.

முதியவர் ஒருவர் வந்து தனக்கு 16 சென்ட் நிலம் மட்டுமே இருக்கு. அது மொத்தமாக இந்த சாலையால் பறிபோகிறது என்று சோகமாக கூறினார். அவருக்கு மாதம் 1000 ரூபாய் முதியோர் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்வதாகக்கூறிய விசாரணை அதிகாரி, அதுபற்றி கோப்புகளிலும் குறிப்பு எழுதினார்.

 

மற்றொரு நபர், தனக்கு குடும்பமோ குழந்தைகளோ இல்லை என்றார். சென்டரிங் வேலைக்குச் சென்று வருவதாகக் கூறினார். அதனால் அவருக்கு தாட்கோ திட்டத்தில் 50 சதவீதம் மானியத்தில் கடனுதவி வழங்க உதவுவதாக வருவாய் அலுவலர் சுகுமார் உறுதி அளித்தார்.

 

இப்படி விசாரணை அதிகாரி பலருக்கு முன்னுரிமை சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, வங்கிக்கடனுதவி வழங்குவதாக போலியான வாக்குறுதிகளை அளிப்பதாகவும், இதெல்லாமே விவசாயிகளிடம் இருந்து நிலத்தைப் பிடுங்கும் வரைக்கும்தான் என்றும் விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

 

குப்பனூரைச் சேர்ந்த விவசாயி அண்ணாமலை விசாரணைக்கு ஆஜராகி, ”எனக்குச் சொந்தமான 4.50 ஏக்கர் நிலமும் எட்டு வழிச்சாலையால் பறிபோகிறது. எங்கள் நிலத்திற்கு அருகில் அரசு புறம்போக்கு நிலம் இருக்கும்போது அதை விட்டுவிட்டு, எங்கள் விளை நிலம் வழியாக சாலை செல்வதை மாற்றி அமைக்க வேண்டும்,” என்றார்.

 

அதற்கு விசாரணை அதிகாரி சுகுமார், ”அதெல்லாம் மாற்ற முடியாது,” என்று சொல்ல, அண்ணாமலை கடும் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து அவர் எட்டு வழிச்சாலைக்காக நிலம் கொடுக்க சம்மதம் இல்லை என்றார். அதை எழுதிக்கொடுத்துவிட்டுப் போகும்படி அதிகாரிகள் சொல்லி அனுப்பினர்.

 

இன்று மொத்தம் 203 பட்டாதாரர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. இவர்களில் 30 பேர் விசாரணையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பலர் விசாரணை அரங்கத்திற்கே வரவில்லை. இந்நிலையில் இன்று மொத்தம் 105 பட்டாதாரர்களிடம் சட்டப்பூர்வ விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. விசாரணைக்கு ஆஜராகாத நபர்கள், நிலம் கொடுக்க சம்மதம் தெரிவித்ததாக பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

 

– பேனாக்காரன்.