Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம் சிறுமி கூட்டு வன்புணர்வு செய்து கொலை!; பாமக பிரமுகர் உள்ளிட்ட ஐவர் மீதான வழக்கில் மார்ச் 19ல் தீர்ப்பு!

சேலம் அருகே, பத்து வயது
சிறுமியை துடிதுடிக்க கூட்டு
வன்புணர்வு செய்து படுகொலை
செய்த வழக்கில், வரும் 19ம் தேதி
தீர்ப்பு வழங்கப்படும் என்று
சேலம் மாவட்ட மகளிர்
நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சென்றாயம்பாளையத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். தறித்தொழிலாளி. இவருக்கு பத்து வயதில் பூங்கொடி என்ற மகள் உள்பட மொத்தம் மூன்று குழந்தைகள். கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி இரவு, சிறுமி பூங்கொடி சகோதரிகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளது பெற்றோர் அருகில் உள்ள தறிக்கூடத்தில் நெசவு நெய்து கொண்டிருந்தனர்.

அதே பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல், சிறுமியை பலவந்தமாக அருகில் உள்ள பெருமாள் கோயில் மலைக்குத் தூக்கிச்சென்று, துடிதுடிக்க கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர். இதில் அவள், ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து போனாள். பின்னர் அவர்கள், சிறுமியை அங்கிருந்த ஒரு மரத்தில் தூக்கில் தொங்கவிட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த
வாழப்பாடி காவல்துறையினர்,
சென்றாயம்பாளையத்தைச் சேர்ந்த
பா.ம.க. பிரமுகர் பூபதி என்பவரை
கைது செய்தனர். அவர் அப்போது
வார்டு உறுப்பினராக இருந்தார்.
மேலும், அவருடைய கூட்டாளிகளான
லாரி ஓட்டுநர் ஸ்னேக் பாபு என்கிற
ஆனந்த் பாபு, மற்றொரு லாரி ஓட்டுநர் ஆனந்த்,
முன்னாள் ராணுவ வீரர் துரைசாமி
என்பவரின் மகன்கள் பிரபாகரன்,
பாலகிருஷ்ணன் ஆகியோரையும்
கைது செய்தனர்.

 

இந்த நிகழ்வுக்குப் பிறகு,
மனம் நொந்து போன சிறுமியின்
பெற்றோர் அந்த ஊரையே காலிசெய்துவிட்டு
குடும்பத்துடன் வேறு ஊருக்குச்
சென்றுவிட்டனர். கைதான
ஐவர் மீதும் கூட்டு வன்புணர்வு,
கொலை மற்றும் போக்சோ
சட்டப்பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு
செய்யப்பட்டது. அப்போது வாழப்பாடி
டிஎஸ்பி ஆக இருந்த மாதவன்,
இந்த வழக்கில் தீவிரமாக புலனாய்வு
செய்து வந்த நிலையில்
அவர் ஓய்வு பெற்றார்.

 

இந்த வழக்கின் விசாரணை, சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆரம்பத்தில் அரசுத்தரப்பில் வழக்கறிஞர் கலைச்செல்வி ஆஜராகி வாதாடி வந்தார். அவருடைய விசாரணையில் அதிருப்தி எழுந்ததால் பின்னர் காந்திமதி என்ற வழக்கறிஞர் அரசுத்தரப்புக்கு ஆஜராகினார். அவர் மீதும் அதிருப்தி கிளம்பியதால், அப்போது மாவட்ட எஸ்பியாக இருந்த ராஜன், சிறுமி பூங்கொடி வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞராக தனசேகரனை நியமிக்கக்கோரி மாவட்ட நிர்வாகத்திற்குக் கடிதம் எழுதினார். அதையடுத்து தனசேகரன், அரசுத்தரப்பில் ஆஜராகி வாதாடினார்.

 

இது ஒருபுறமிருக்க எதிரிகள் தரப்பில், தனசேகரனை அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞராக நியமித்தது செல்லாது எனக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இருதரப்பு விசாரணைகளும் முடிவடைந்துள்ள நிலையில், மார்ச் 12, 2019ம் தேதியன்று தீர்ப்பு வழங்குவதாக தகவல்கள் வெளியாயின. அதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள் பூபதி உள்பட ஐந்து பேரும் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வாழப்பாடி காவல்துறையினரும் வந்திருந்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க, ஆயுதப்படை காவல்துறையினரும் தயார் நிலையில் இருந்தனர்.

 

ஆனால், மகளிர் நீதிமன்ற நீதிபதி, எதிரிகள் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு வராதது குறித்து கேள்வி எழுப்பினார். பின்னர் அவர், இந்த வழக்கில் வரும் 19.3.2019ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

 

இதையடுத்து நீதிமன்ற அரங்கத்தைவிட்டு வெளியே வந்த குற்றம்சாட்டப்பட்டவர்களை ஊடகத்தினர் படம் பிடித்தனர். அதற்கு அவர்கள், எங்களை எதற்காக படம் எடுக்கிறீர்கள்? நாங்கள் என்ன குற்றவாளிகளா? இப்போது என்ன தீர்ப்பா கொடுத்துவிட்டார்கள்? என்று கூச்சல் போட்டனர். அவர்களுடன் வந்த உறவினர்களும் வாக்குவாதம் செய்தனர். இதனால், நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.

 

– பேனாக்காரன்