வெறுமனே பரபரப்புக்காக செய்திகளை வெளியிடும் ஊடகங்களின் பின்னணியில் அபரிமிதமான லாப வேட்கையும், மனித உணர்வுகளை அலட்சியப்படுத்துவதில் அசட்டுத்தனமான துணிச்சலுமே மலிந்திருக்கிறது என்பதைத்தான் ஊடகங்களின் அண்மைக்கால போக்குகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
ஊடகம் (மீடியா) என்ற சொல்லே பொதுப்பெயர்தான். இதனுள் அச்சு, காட்சி ஊடகங்கள்¢ இரண்டும் அடங்கும். பொதுவெளியை விடுவோம்; ஊடகத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னும் ‘மீடியா’ என்றால் காட்சி ஊடகம் என்றே புரிந்து வைத்திருக்கிறார்கள். கோச்சிங் அளிப்பவரை ‘கோச்சர்’ என்பதுபோல. இப்படிச் சொன்ன பிறகு, இந்தக் கட்டுரை எழுதியதற்காக என் சமகால நண்பர்கள் என்னையும் பகடி செய்யக்கூடும். விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை என்ற புரிதலோடுதான் எழுதுகிறேன்.
அச்சு ஊடகங்கள் மட்டுமே கோலோச்சிய காலங்களில் அவற்றினூடாக வதந்திகள் பரவியதில்லையா எனக் கேட்கலாம். அப்படி எல்லாம் இல்லை என்று பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது. அச்சு ஊடகத்தில் வரும் வதந்தியின் தாக்கம் விரிவடைவதற்குள் உண்மை நிலவரங்கள் வந்துவிடும் என்பதால், மக்களும் கொஞ்சம் தற்காத்துக்கொள்ள முடிந்தது. ஆனால், காட்சி ஊடகங்கள் அப்படி அல்லவே. வெளியான மாத்திரத்தில் தீயாய் பரவி விடுமே.
தெஹல்காவில் பணியாற்றிய ராணா அயூப், ஆதாரம் இல்லாமல் செய்திகளை வெளியிட மாட்டார். அவரின் செய்திகளின் அடிப்படையில் பாஜகவின் நம்பர்&1 தலையான அமித் ஷா கைதான நிகழ்வும் உண்டு. குஜராத் கலவரம் பற்றி அவர் நேரடியாக கள ஆய்வு நடத்தி, ‘குஜராத் ஃபைல்ஸ்: அனாடமி ஆப் எ கவர் அப்’ என்ற நூலாக தொகுத்தார். ஆனால், அச்சிட ஒருவரும் முன்வராத நிலையில் அவரே அச்சிட்டு வெளியிட்டார். நேர்மையான ஊடகவியலாளர் முகமாக, ராணா அயூப் பார்க்கப்படுகிறார்.
அதே வடநாட்டு சேனல்களில் இன்று பிரபலமாக இருக்கும் அர்னாப் கோஸ்வாமி போன்றோர், பச்சைப்பொய் மூட்டைகளை பொதுவெளியில் அவிழ்த்து விடவும் தயங்குவதில்லை. பின்புலம் அப்படி.
வட இந்திய சேனல்கள் இப்படி என்றால், தமிழ்நாட்டு மின்னணு ஊடகங்களைப் பற்றி என்ன சொல்வது?. ‘ஊழல் வழக்கில் ஜெயலலிதா விடுதலை’ என்று அவசரகதியில் தமிழக செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டன. தொண்டர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் அந்த காட்சிகள் அப்படியே மாறின. ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி, சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா இறந்து விட்டதாக அரசுத் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாகவே, தந்தி டிவி மாலை 5 மணிக்கே செய்தி வெளியிட்டது. செய்திகளை முந்தித் தருவது தந்தி என்று ‘வெர்பல் ஹேஷ்டேக்’ வேறு செய்து கொண்டது அந்த சேனல். அதற்காக சமூகவலைத்தளங்களில் இன்று வரை தந்தி டிவி வறுபடுவது வேறு விடயம். அதற்கு இன்று வரை அந்த சேனல் நிர்வாகம் சிறு வருத்தம்கூட தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், நேற்று (செப். 26) திமுக தலைவர் கருணாநிதி இறந்து விட்டதாக காட்சி ஊடகங்களில் தகவல்கள் பரவ, தமிழ்நாடு முழுவதும் பரபரப்பு பற்றிக்கொண்டது. இது மட்டுமல்ல; தமிழக அரசு கலைக்கப்படுவதாகக்கூட தகவல்கள் பரவின. சிறப்புக்காவல் படையினர் தலைமையிடங்களுக்கு திரும்புவதையும், திமுக தலைவர் உடல்நிலை, தமிழக அரசின் திரிசங்கு நிலை ஆகியவற்றையும் ஒரே நேர்க்கோட்டில் இணைத்துப் பார்த்ததால் ஏற்பட்ட விளைவு.
போதாக்குறைக்கு தந்தி டிவியின் முதன்மை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே, ”உனக்கு யார் சொன்னது என திருப்பிக் கேட்காமல், அப்படியாமே என அடுத்தவரிடம் கேட்பதே வதந்திகளின் துவக்கப்புள்ளி. சமூக வலைத்தளம் அடுத்த புள்ளி,” என்று நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.
நெட்டிஸன்களுக்கு அவர் மீது ரொம்ப நாள் பகை போல. அவ்வளவுதான். டுவிட்டரில் கிழி கிழினு கிழித்து தோரணம் கட்டி தொங்க விட்டிருக்கிறார்கள். பலர் அநாகரீகமான சொற்களால் அமிலத்தை வார்த்து இருந்தார்கள். அவற்றில் பல, நாராசமானது. எழுத முடியாதவை. அவை, தனிப்பட்ட நபர் மீதானது என்று ஏனைய ஊடகத்தினர் கருதிவிடல் ஆகாது. ரங்கராஜ் பாண்டேக்கள் போன்ற அனைத்து ஊடகத்தினருக்கும் அவை பொருந்தும்.
”ஆயிரம் எலிய தின்னுட்டு பூனை காசிக்கு போகுதா…?” என்றும், ”வசந்திபுருஷனே உங்க செய்தி தொலைக்காட்சி தானேய்யா” என்றும் ரங்கராஜ் பாண்டே மீது எதிர்த்தாக்குதல் நடத்தியிருந்தனர். இன்னும் சிலர், ”வீல்னு ஒரு சத்தம். உள்ளே போயி பார்த்தா அந்த வ’தந்தி’யே நீங்கதான்,” என்றும், ”சாத்தான் வேதம் ஓதுதா?” என்றும், ”வதந்தியை பரப்பும் உங்களுக்கு வதந்தியைப் பற்றி கூற முழுத்தகுதி இருக்கிறது. பாம்பின் கால் பாம்பு அறிவதுபோல. உண்மை. வதந்தி டிவி நாயகன் அவர்களே வாழ்க,” என்றும் பகடி செய்துள்ளனர்.
ஒரு பதிவர், ”தமிழகமே ஜெயலலிதாவுக்காக கண்ணீரோடு பிரார்த்தித்துக் கொண்டு நிற்க, அவர் இதயம் துடித்துக்கொண்டிருந்தபோதே இறந்து விட்டதாய் அறிவித்த நீங்களா வதந்தி பற்றிப் பேசுகிறீர்கள்? வெட்கமாக இல்லையா சார்?” என்று காட்டமாக கேட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மாலை, ஜெயலலிதா இறந்து விட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவலை டிவியில் பார்த்த அதிர்ச்சியில் 5 பேர் இறந்தனர். அதுபற்றியும் ரங்கராஜ் பாண்டேயிடம் கேள்வி எழுப்பியுள்ளனர் நெட்டிஸன்கள். அவர்கள் தந்தி டிவியை மட்டுமல்ல; அனைத்து டிவி சேனல்களையுமே கடுமையாக விமர்சிக்கின்றனர்.
”சிவப்பு விளக்கு வீடுகளின் தரகர்களாக இன்றைய பெரும்பான்மை தொலைக்காட்சிகள், அச்சு ஊடகங்கள் மாறிவிட்டன. விவாத அரங்கில் பங்கு பெறும் செய்தி தொடர்பாளர்கள் முதல்நிலை தரகர்கள்; ஊடகம், இரண்டாம் நிலை தரகர்கள்,” என்கிறார் விரும்பாத ஒரு மூத்த பத்திரிகையாளர்.
தகவல் தொழில்நுட்ப புரட்சி யுகத்தில், இன்றைக்கு மக்கள்தான் முழுநேர செய்தியாளர்கள்; தகவல் சொல்லிகள். அவர்களை மிகச்சரியாக பயன்படுத்தி வருவதில் ‘தி இந்து தமிழ்’ நாளேடு முன்வரிசையில் நிற்கிறது. எனினும், அவற்றை தீர சரிபார்த்து வெளியிடுவதுதானே ஊடக தர்மமாக இருக்க முடியும். அத்தகைய தர்மத்தை, அறத்தை எத்தனை செய்தி சேனல்கள் பின்பற்றுகின்றன என்பது கேள்விக்குறிதான்.
நான் முன்பு தினமணியில் செய்தியாளராக பணியாற்றியபோது என்னுடைய செய்தி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ”அவசரப்பட்டு, தவறாக எந்த ஒரு செய்தியையும் தந்துவிட வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து செய்தி தரவும்,” என்றார். எங்கள் முதல் சந்திப்பில் அவர் சொன்னது.
”உழைப்பு என்பது அந்நியப்படுத்தப்படுகின்ற வளர்ச்சிப் போக்குகளில் உழைப்பாளிக்கு பங்கில்லாமல் போகின்ற விற்பனைச் சரக்காக ஊடகம் மாற்றப்பட்டு இருக்கிறது,” என்றார் கார்ல் மார்க்ஸ். ஊடகம் என்பதை, முதலாளிகள் ஒரு பண்டமாகத்தான் பார்க்கிறார்கள். முடிந்தவரை முலாம் பூசி விற்றுக் காசாக்கி விட வேண்டும் என்ற முனைப்பின் வெளிப்பாடுதான் பொய் புரட்டான செய்திகள் வரக்காரணம்.
இத்தகைய போக்கிற்கு பல நேரங்களில் முதலாளிகளும், சில நேரங்களில் செய்தியாளர்களுமேகூட காரணிகளாகி விடுகின்றனர். ஆனால், முட்டாளாக்கப்படுவது யாரெனில் ஊடகம் நெறி தவறாது என்பதை நம்பிக்கொண்டிருக்கும் அப்பாவி பார்வையாளர்கள்தான்.
நெறி என்றதும் எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் நீதியரசர் சி.கே.பிரசாத், ”ஊடகவியலாளர்களுக்கென தனிப்பட்ட நெறிகளும், விதிகளும் உள்ளன. அவ்வாறு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லையென்றால் மனம் போன போக்கில் அவர்கள் செய்திகள் வெளியிடக்கூடும். எது சரி, எது தவறு என ஆராய்ந்து செய்தி வெளியிடுவதற்கே ஊடக தர்மங்கள் வகுக்கப்பட்டு உள்ளன.
பொதுவாக ஊடகவியலாளர்கள் என்பவர்கள் நியாயத்தைக் காக்கப் பாடுபடும் அறப்போராளியாக இருக்க வேண்டியவர்கள். ஆட்சியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஊடகங்களுக்கு எப்போதும் முரண்பாடுகளும், மோதல்களும் இருக்க வேண்டும். ஒருவேளை, அரசுடன் எந்தவிதமான மோதலும் இல்லையென்றால் அந்த நாளை ஜனநாயகத்தின் துயர் நிறைந்த நாளாக கருத வேண்டும்,” என்றார்.
அவரின் கூற்று எத்தகைய சத்தியம் நிறைந்தது என்பதை ஊடகவியலாளர்கள் உணர வேண்டும். ஆனால், மந்தைத்தனமான சிந்தனைகள் இருக்கும்வரை அதை புரிந்து கொள்வதும் கடினம்தான்.
தகவலை வழங்குவது மட்டும் ஊடகத்தின் பணியல்ல. மக்களுக்கு அறிவைப் புகட்டுதல், சமூகத்தில் நேர் நிலையான மாற்றத்தினை ஏற்படுத்துதல் ஆகியவற்றையும் மேற்கொள்ள வேண்டும்.
மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றங்களும், ஊடகங்களும்தான். ஓர் ஊடகவியலாளர் அறம் பிறழும்பொழுது, அவர் வேண்டுமானால் ஆதாயம் அடையலாமே ஒழிய, அங்கே ஜனநாயகம் கழுவில் ஏற்றப்படுகிறது என்பதை மறந்து விடக்கூடாது.
– பேனாக்காரன்.