Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அதிமுக: ‘பாபநாசம்’ பாணியில் காதில் பூ சுற்றும் அமைச்சர்கள்!

”ஜெயலலிதா, சிகிச்சையில் இருந்தபோது இட்லியும் சாப்பிடவில்லை; சட்னியும் சாப்பிடவில்லை. பொய் சொன்னதற்காக நாங்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்,” என்று ரைமிங் ஆக வசனம் பேசி அதிமுகவில் திடீரென்று குழப்ப வெடிகளை கொளுத்திப் போட்டார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். திண்டுக்கல் சீனிவாசனின் இத்தகைய பேச்சை அப்போது கட்சிக்குள் யாருமே ரசிக்கவில்லை. குறிப்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இது தொடர்பாக முதல்வர் இபிஎஸ், திண்டுக்கல் சீனிவாசனிடமே தனது அதிருப்தியை நேரிடையாகச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது, ஓ.பன்னீர்செல்வம்தான் முதல்வராக இருந்தார்.

அதன் பிறகு, உட்கட்சி பூசலால் ஏற்பட்ட சலசலப்புகளால் பிரிந்திருந்த ஓ.பன்னீர்செல்வம் இப்போது துணை முதல்வராக எடப்பாடி பழனிசாமி அணியில் அங்கம் வகிக்கிறார். தீர்க்கமான விசாரணை என்று வரும்போது, திண்டுக்கல் சீனிவாசனின் இட்லி, சட்னி பேச்சால், ஓ.பன்னீர்செல்வத்துக்குதான் தேவையற்ற சிக்கல் விளையக்கூடும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சொல்லப்பட்டு உள்ளது.

ஆனால் அவருடைய கருத்தை திண்டுக்கல் சீனிவாசன் கொஞ்சம்கூட சட்டை செய்யவில்லையாம். அவரை சமாதானப்படுத்துவதற்குள் அமைச்சர் கே.சி.வீரமணி, ”சசிகலாவுக்கு பயந்துதான் அம்மாவை பார்த்ததாக பொய் சொன்னோம். உண்மையில் நாங்கள் யாரும் அம்மாவை பார்க்கவில்லை,” என்று கூறியிருக்கிறார்.

இவர்களின் அதிரடி பேச்சுகள் இப்படி இருக்க, ‘தெர்மாகோல் புகழ்’ அமைச்சர் செல்லூர் ராஜூ, ”நான் உள்பட அமைச்சர்கள் எல்லோரும் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது பார்த்தோம்,” என்று இன்று (செப். 26) தெரிவித்துள்ளார். மற்றொரு அமைச்சரான ஆர்.பி.உதயகுமார், ”ஜெயலலிதா மரணம் தொடர்பாக என்னிடம் விசாரணை நடத்தினால் அப்போது பதிலளிப்பேன்,” என்று லேசாக பொடி வைத்துப் பேசியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆட்சியிலும், கட்சியிலும் முக்கிய அதிகாரங்களை கையில் வைத்து இருந்தாலும், அவர்களை ஜெயலலிதாவைப் போல் கமாண்டர் அந்தஸ்தில் வைத்துப் பார்க்க சக அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் தயங்குகின்றனர்.

அவர்களுக்குள்ள அனைத்து உரிமைகளும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவருக்கும் இருப்பதாகவே திண்டுக்கல் சீனிவாசன் போன்றோர் கருதுகின்றனர். அதனால்தான் அமைச்சர்களை கட்டுக்குள் வைக்கும் லகான் இப்போது யாரிடம் இருக்கிறது என்று தெரியாத நிலையில் மற்ற அமைச்சர்களும், நிர்வாகிகளும் குழம்பிப்போய் உள்ளனர்.

விசாரணை ஆணையம் வைத்து மக்களிடம் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை அப்படியே அடுத்த தேர்தல் வரை ஆறப்போட்டு விடலாம் என்று நினைத்திருந்த எடப்பாடியின் எண்ணத்தில் திண்டுக்கல் சீனிவாசன், வீரமணி போன்றோர் கிட்டத்தட்ட மண் அள்ளிப்போட்டு விட்டதாகவே தெரிகிறது.

‘பாபாநாசம்’ படத்தில், கமல்ஹாசன் சுயம்புலிங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்தப்படத்தில் போலீசார் சுயம்புலிங்கம் குடும்பத்தினரிடம் மாயமான ஒரு நபரைப் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தும் காட்சி இடம்பெறும். அப்போது சுயம்புலிங்கம் தன் பிள்ளைகளிடம், ”எல்லாத்தையும் சரியாத்தான் சொல்லணும். ஆனா எல்லாரும் ஒண்ணு போலவே ஒரே விஷயத்த சொல்லக்கூடாது. விளங்குதா…? டைம்….நீங்க ரெண்டு பேரும் சின்னப் புள்ளைகள். அதனால டைம தோராயமாச் சொல்லுங்க….தோராயமாத்தான் சொல்லணும். புரட்டி புரட்டி மாத்தி மாத்தி கேள்வி கேப்பானுவ…அதனால கேள்வி என்னனு கவனமாக கேட்டுக்கிட்டு யோசிச்சுதான் பதில் சொல்லணும்,” என்று காவல்துறை விசாரணையின்போது என்ன பேச வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிப்பார்.

ஜெயலலிதா மரணம் குறித்து ஆளுங்கட்சி அமைச்சர்கள் கிட்டத்தட்ட ‘பாபநாசம்’ சுயம்புலிங்கம் போலதான் பேசி வருகின்றனர். ஆனால், ஒவ்வொரு அமைச்சர்களும் மக்களையும் ஊடகத்தையும் சுற்றி விடுவதற்காக இப்படி குழப்படி வேலைகளை செய்கின்றனரா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

இங்கு சுயம்புலிங்கத்தின் வேலையைச் செய்வது டெல்லி பிக்பாஸ்களாக இருக்கலாம் அல்லது எடப்பாடியாகவும் இருக்கலாம். ஆனால், இப்போது நிகழ்பவற்றில் நாடகத்தனம் இல்லாமல் இல்லை.

அமைச்சர் வீரமணி போன்றோர் வேண்டுமானால் சசிகலா குடும்பத்தினருக்கு பயந்து அப்படி பேசியிருக்கலாம். அமைச்சர்களின் கூற்றுப்படி, மன்னார்குடி கும்பலின் கதை வசனப்படிதான் எல்லாம் நடந்ததாக வைத்துக்கொண்டாலும், ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், வெங்கையா நாயுடு உள்ளிட்ட முக்கிய பாஜக புள்ளிகளும் ஜெயலலிதா உடல்நலம் குறித்து ஊடகங்களிடம் பாசிட்டிவ் ஆக பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அவர்கள் மன்னார்குடி வகையறாக்களுக்கு அச்சப்பட தேவை இல்லையே?

மக்களின் அபிமானம் பெற்ற தலைவர், மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியின் தலைவர், அதுவும் முதல்வர் பதவியில் இருக்கும்போதே சுகவீனம் அடைந்து 74 நாள்களாக சிகிச்சையில் இருக்கும் ஒருவரை மத்திய அரசு கண்டும்காணாமல் விட்டுவிட முடியுமா? அல்லது அப்போலோ மருத்துவமனையில் நடந்த அத்தனை காட்சிகளையும் அழகான திரைக்கதையாக்கி இயக்கியதில் மன்னார்குடி கும்பலுடன், பாஜகவும் கைகோத்து செயல்பட்டதா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசின் நிர்வாகத் தீர்ப்பாயத்தின் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டார்.

மத்தியில் உள்ள பாஜக தயவு இருந்தால் மட்டுமே நிர்வாகத் தீர்ப்பாயத்தின் தலைவர் பதவியில் நியனம் பெற முடியும். நிலைமை இவ்வாறு இருக்க, ஆறுமுகசாமி நடுநிலையுடன் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்துவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

விசாரணை ஆணையம் என்ற அசட்டுத் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியினர் தயாராகி விட்டார்கள் என்றால், ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் இருக்காது எனக்கருதலாம். அல்லது, மர்மங்கள் மறைக்கப்பட்டு விட்டதாகவும் கருதிக்கொள்ளலாம்.

இன்னொரு முக்கியமான சங்கதி. ஜெயலலிதா மரணம் குறித்த அமைச்சர்களின் திசைக்கொரு பேச்சு; விசாரணை ஆணையம் போன்றவற்றில் மக்களின் கவனத்தை திசை திருப்பிவிட்டு, ஆளுங்கட்சியும், மத்திய அரசும் தமிழகத்தில் ஏதேனும் மக்கள் விரோத திட்டங்களைச் செயல்படுத்தவும் முனையலாம். சந்தேகம் நல்லது.

படக்காட்சி இணைப்பு.

– இளையராஜா சுப்ரமணியம்.
பேச: 9840961947.