Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

திமுகவை திணறடித்த ரூ.1000 டோக்கன்! சொதப்பிய ஊராட்சி சபைக்கூட்டங்கள்!!

 

மக்களவை தேர்தலையொட்டி, கடைக்கோடி மக்களையும் சந்திக்கும் வகையில் ஒவ்வொரு கிராமத்திலும் ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்த திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. ‘மக்களிடம் செல்வோம்; மக்களிடம் சொல்வோம்; மக்கள் மனதை வெல்வோம்’ என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் ஜனவரி 9ம் தேதி, ஊராட்சி சபைக் கூட்டங்களை தொடங்கியது திமுக.

பண்ணப்பட்டி

ஊராட்சி சபைக் கூட்டங்கள் என்பது கிட்டத்தட்ட, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே நடத்திய ‘நமக்கு நாமே’ பயணத்தின் இரண்டாம் பாகம்போலதான் இருக்கிறது. இதில், மு.க.ஸ்டாலினுக்கு பதிலாக அந்தந்த தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் மக்களை சந்தித்து குறைகளைக் கேட்கின்றனர்.

 

சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் எம்எல்ஏ ராஜேந்திரன் உடல்நலம் குன்றியதால், மக்களவை தேர்தல் பணிகள் வேகமெடுக்காமல் இருந்தன.

 

கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட உடன்பிறப்புகளும், தேர்தல் பணிகளை மறந்த நிலையில்தான் இருந்தனர். சேலம் மக்களவை தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களான வி.சி.சந்திரகுமார், கந்தசாமி ஆகியோரும் கருத்து கேட்பு கூட்டத்திற்குப் பிறகு சேலம் பக்கமே எட்டிப்பார்க்காமல்தான் இருந்தனர்.

 

இந்த நிலையில்தான், ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தேர்தல் பொறுப்பாளர் வி.சி.சந்திரகுமார் சேலம் வந்திருந்தார்.

சேட்டு

ஜன. 9ம் தேதியன்று, காடையாம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பண்ணப்பட்டி, கூ.குட்டப்பட்டி, பூசாரிப்பட்டி, தாராபுரம் ஆகிய நான்கு ஊர்களில் நடந்த ஊராட்சி சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.

 

ஜன. 8ம் தேதி தொடங்குவதாக திட்டமிட்டிருந்த நிலையில், 9ம் தேதிக்கு இந்தக் கூட்டங்கள் மாற்றப்பட்டன. குறுகிய காலத்திற்குள் துண்டு பிரசுரங்கள் அச்சிட்டும், பிளக்ஸ் பேனர்கள் அச்சிடுவது, தரை விரிப்புகள் என கூடுமான வரை நிறைவான ஏற்பாடுகளை செய்திருந்தார் காடையாம்பட்டி ஒன்றிய திமுக செயலாளர் ரவிச்சந்திரன்.

 

இந்த ஏற்பாடுகள் எல்லாம் நன்றாக இருந்தாலும், மக்கள் வர வேண்டுமே? அங்குதான் திமுகவினரே எதிர்பாராத சிக்கல் கிளம்பியது. பண்ணப்பட்டி கோயிலடியில் நடந்த கூட்டத்தில் 19 பெண்கள் உள்பட மொத்தமே 62 பேர்தான் கூடியிருந்தனர்.

கதிரவன்

அந்த ஊராட்சியில் உள்ள 12 வார்டு செயலாளர்களில் பாதி பேர் கூட்டத்திற்கு வரவில்லை. ஒவ்வொரு கிளை செயலாளரும் தலைக்கு 10 பேரை கலந்து கொள்ள செய்திருந்தால்கூட 100 பேருக்கு மேல் திரட்டி இருக்க முடியும் என்ற நிலையில், குறைவான கூட்டத்தைப் பார்த்து சந்திரகுமார் ரொம்பவே அப்செட் ஆனார்.

 

எந்தெந்த பகுதியில் கட்சிக்கொடிக்கம்பம் இருக்கிறது? கொடி பறக்காத கம்பம் எத்தனை இருக்கிறது? எத்தனை வார்டு செயலாளர்கள் வரவில்லை? என விவரமாக தனியாக ஒரு பதிவேட்டில் தன் கைப்பட குறித்து வைத்துக்கொண்டார் சந்திரகுமார். கட்சி சாராதவர்கள் எத்தனை பேர் வந்திருக்கின்றனர்? நீண்ட காலமாக கட்சியில் பொறுப்புகளில் இல்லாதவர்கள் யார்? என்ற விவரங்களையும் கேட்டுக்கொண்டார்.

 

பண்ணப்பட்டி பகுதியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்னைகள் குறித்து கேட்டார். ‘100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை கொடுக்காதது, பொதுக்கழிப்பறை வசதி, மேட்டூர் குடிநீர், ரேஷன் கார்டு,’ ஆகிய கோரிக்கைகளை பெண்கள் முன்வைத்தனர். அவற்றையும் குறித்துக் கொண்ட சந்திரகுமார், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, 5 நிமிடங்கள் பேசினார்.

இப்படி ஸ்மூத்தாக போய்க்கொண்டிருந்த கூட்டத்தில் திடீரென்று பண்ணப்பட்டி ஊராட்சி 8வது வார்டு செயலாளர் ராஜேந்திரன், ”பொதுமக்கள்கிட்ட குறைகளை கேட்கறது இருக்கட்டும். முதல்ல கட்சிக்காரங்களோட பிரச்னைகளை தெரிஞ்சுக்குங்க. என்னுடைய வார்டில் ஊராட்சி சபை கூட்டம் நடத்துறீங்க. ஆனா எனக்கே அழைப்பு இல்லை.

 

ஊனமுற்ற ஒருவர் நோட்டீஸை தூக்கிப்போட்டுட்டு, படித்துப் பார்த்துட்டு உதவி செய்யுங்கனு கேட்கற மாதிரி, எங்க வீட்ல நோட்டீஸை தூக்கிப் போட்டுட்டா தகவல் சொல்லிட்டதாக அர்த்தம் ஆகிடுமா? கட்சிக்காரங்களே இன்னிக்கு பாதிபேர் வரலைனா அதுக்கு இதுதான் காரணம். முறையாக யாரிடமும் தகவல் சொல்லப்படல. இப்படி எல்லாம் நடந்த கட்சிய காப்பாத்துறது ரொம்ப கஷ்டம்,” என்றார்.

கூ.குட்டப்பட்டி

அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த 8வது வார்டைச் சேர்ந்த திமுக பிரமுகர் சேட்டு, ”எனக்கு இப்ப 48 வயசு ஆகுதுங்க. விவரம் தெரிஞ்ச நாள்லருந்து கட்சிக்காகத்தான் உழைச்சிட்டு இருக்கேன்.

 

இங்குள்ள யாரை வேணும்னாலும் கேட்டுத் தெரிஞ்சுக்குங்க. ஆனா எனக்கு இன்னும் கட்சியில ஒரு பதவிகூட தரல. அது பரவாயில்ல… உறுப்பினர் கார்டுகூட தர மாட்டேங்கறாங்க,” என்று குரலை உயர்த்தவே, கூட்டத்தில் அமர்ந்து இருந்த அதே ஊர்க்காரர், ”முதலில் உன்னுடைய உறுப்பினர் கார்டை காட்டு, அப்புறம் பேசு….” என்றார்.

 

இதைக்கேட்டு கொதிப்படைந்த சேட்டு, ”நான் அவரிடம் பேசும்போது நீ ஏன் குறுக்கே வர்ற…? உறுப்பினர் கார்டு இருக்கானு என்னை கேட்க நீ யாருய்யா…? நாங்கள்லாம் காலம் முழுக்க கட்சிக்காக உழைச்சிட்டு இருப்போம். எங்களையெல்லாம் கண்டுக்க கட்சியில ஒருத்தரும் இல்ல….,” என்று ஏக வசனத்தில் எகிற, மற்ற சிலரும் சேட்டுவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க, அந்த இடமே சிறிது நேரத்தில் ரசாபாசமாக ஆகிவிடுமோ என்ற பதற்றத்தை ஏற்படுத்தியது. நல்லவேளையாக அப்படி ஏதும் நடப்பதற்குள் சந்திரகுமார் அவர்களை சமாதானப்படுத்தினார்.

பூசாரிப்பட்டி

இந்த சலசலப்புகளை முடித்துவைத்து சந்திரகுமார் கிளம்புகையில், முன்னாள் கவுன்சிலர் மூக்கனூர் கதிரவன் இன்னொரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

 

”திமுக ஆட்சியில் இருந்தபோது

அந்தந்த மாவட்ட நிர்வாகமே ஆள்களை

நியமித்துக் கொள்ளக்கூடிய

அங்கன்வாடி பணியாளர் போன்ற

பதவிகளைக்கூட காசை வாங்கிக் கொண்டு, மாற்றுக்கட்சிக்காரர்களுக்குதான்

வழங்கினர்.

இதுபோன்ற பதவிகளில்

80 சதவீத பணியிடங்களை

அதிமுக, பாமக உள்ளிட்ட

வேறு கட்சியினருக்குதான்

வழங்கியுள்ளனர்.

 

நானும் இந்தக் கட்சிக்காக

30 வருஷத்துக்கு மேலாக உழைத்துக்

கொண்டுதான் இருக்கேன்.

ஓட்டுப்போடவும், கட்சி வேலைகளைச்

செய்ய மட்டும்தான் எங்களை

பயன்படுத்துறாங்களே தவிர,

எங்களுக்குனு எந்த வேலையையும்

பொறுப்பில் உள்ளவர்கள்

செய்து தருவதில்லை.

குறிப்பிட்ட சில பேர் மட்டும்

எல்லாத்தையும்

அனுபவிக்கிறாங்க.

 

ஆனால் அதிமுகவில் அப்படி இல்லை.

கூட்டுறவு சங்கங்களில்கூட

பதவி கேட்டு நம்பிப் போனவர்களுக்கு

ஏதாவது ஒரு பதவி கொடுத்து,

ஆள்களை கூடவே

வைத்துக்கொள்கின்றனர்.

அந்தப் பண்பாடு

திமுககாரன்கிட்ட

வர மாட்டேங்குது.

 

தளபதி (மு.க.ஸ்டாலின்) ஆட்சிக்கு வந்ததும்

முதல்ல கூட்டுறவு சங்க அமைப்புகளை

கலைச்சிட்டு தேர்தல் வைக்கணும்ங்க.

கட்சியில யாரு தப்புப் பண்ணினாலும்

உடனடியாக அவங்கள பதவியில

இருந்து தூக்கிறணும்,”

என்றார்.

 

அதற்கு சந்திரகுமார், ”பர்சனனால சொல்லணும்னா… இந்த ஆட்சியில் என்ன பண்ணினார்களோ அதைத்தான் நாமளும் பண்ணப்போறோம். முற்பகலில் செய்ததை நாமும் திருப்பி செய்வோம். கட்சியில் தப்பு செய்தவர்கள் மீது கண்டிப்பாக தளபதி நடவடிக்கை எடுப்பார். யார் மீதெல்லாம் புகார் வருகிறதோ அவர்களிடம் நேரில் விசாரணை நடத்தும் பொறுப்பு அண்ணன் டி.ஆர்.பாலுவுக்கு வழங்கப்பட்டிருக்கு,” என்றார்.

 

ஒருவழியாக அங்கிருந்து கிளம்பிய சந்திரகுமார் அடுத்து, கூ.குட்டப்பட்டி கிராமத்திற்குச் சென்றார். அங்கு முழுக்க முழுக்க ஆண்களே கலந்து கொண்டனர். ஒரு பெண்கூட கூட்டத்திற்கு அழைத்து வரப்படவில்லை. மொத்தம் 56 பேர் கலந்து கொண்டனர். தின்னப்பட்டி பஞ்சாயத்தில் உள்ள 9 வார்டுகளில் 3 வார்டு செயலாளர்களும் கூட்டத்திற்கு வரவில்லை.

 

ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் 1000 ரூபாய் வழங்கப்படுவதால், அதை வாங்க மக்களும், திமுக செயலாளர் ஒருவரும் சென்று விட்டதாகவும், அதனால்தான் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வரவில்லை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

 

கூ.குட்டப்பட்டியில் அரை மணி நேரத்தில் கூட்டத்தை முடித்துக்கொண்டு அடுத்து, பூசாரிப்பட்டிக்குச் சென்றனர். அங்கு நிலைமை இன்னும் மோசம். கூட்டம் நடத்துவதற்கான இடம்கூட தேர்வு செய்யப்படாததால், கோயில் வாசலிலேயே கூட்டத்தை நடத்தினர்.

 

இந்தக் கூட்டத்தில் 3 பெண்கள் உள்பட 43 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். 9 வார்டு செயலாளர்கள் இருந்தும் 5 பேர் வரவில்லை. ரேஷன் கடையில் ஆயிரம் ரூபாய் வாங்க டோக்கன் தருவதாகச் சொன்னதால் மக்கள் சென்றுவிட்டதால், கூட்டத்தில் போதிய ஆள்கள் வரவில்லை என்ற அதே பல்லவியை இங்கும் பாடினர்.

 

வார்டு செயலாளர்களே

பலர் வராததால்,

விரக்தி அடைந்த சந்திரகுமார்,

”பதவியில் இருப்பவர்கள்

இங்கே ஏன் வரவில்லை என்று தெரியவில்லை.

எந்த பொறுப்பிலும்

இல்லாதவர்கள்கூட

இங்கே ஆர்வமாக வந்திருக்கிறார்கள்.

பேசாமல் அவர்களிடம்

கட்சிப் பதவிகளை கொடுத்து விடலாம்,”

என்று வருத்தத்தை

பதிவு செய்தார்.

 

இதையடுத்து தாராபுரம் பஞ்சாயத்தில் ஊராட்சி சபைக் கூட்டம் நடந்தது. அருந்ததியர் சமூகத்தினர் அதிகமாக வசிக்கும் என்பதால், அந்த சமூகத்து ஆள்கள் அதிகளவில் திரட்டப்பட்டு இருந்தனர். 27 பெண்கள் உள்பட 89 பேர் கலந்து கொண்டனர். வார்டு செயலாளர் குருநாதன், விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். இந்த கூட்டத்தைப் பார்த்த பிறகுதான் சந்திரகுமார் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள் தெரிந்தன.

தாராபுரம்

மத்திய அரசு கொண்டு வந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு, நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின் ஊழல்கள் குறித்து பேசினார் சந்திரகுமார்.

 

”நீங்கள்தான் கலைஞர்; நீங்கள்தான் தளபதி. நீங்கள் சொன்னால்தான் ஓட்டுகள் நம் கட்சிக்கு விழும். நாடாளுமன்ற தேர்தலுடன் 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் வரும். அவற்றில் வெற்றி பெற்று தளபதிதான் முதல்வராவார்,” என்று ‘டச்’சிங்காக பேசும்போது கூட்டத்தினர் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்ததும் தாராபுரத்தில் காண முடிந்தது.

 

வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டும்தான் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஜன. 8ம் தேதி உத்தரவிட்டு இருந்தது. ஆனாலும், அன்று இரவோடு இரவாக அனைத்து கார்டுதாரர்களுக்குமே பல இடங்களில் ரேஷனில் ஆயிரம் ரூபாய் விநியோகம் செய்யப்பட்டது.

 

நாளை நடக்கப்போகும் மக்களவை தேர்தலா? இன்று கிடைக்கும் ஆயிரம் ரூபாயா? எதற்கு முதலில் முக்கியத்துவம் என்று மக்கள் யோசித்ததில் சற்றே சலசலத்தது திமுகவின் ஊராட்சி சபைக் கூட்டங்கள்.

 

 

– பேனாக்காரன்.