Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ரஜினி அரசியல்; பின்னணியில் பாஜக?

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்குவது குறித்த முடிவின் பின்னணியில் பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடியும் இருப்பதாக பரபரப்பு யூகங்கள் கிளம்பியுள்ளன. ஆன்மிக அரசியல் என்றதுகூட பாஜகவைத்தான் மறைமுகமாக ரஜினிகாந்த் முன்னிலைப்படுத்துகிறார் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 24, 2017) ஆர்.கே. நகர் தேர்தல் முடிவு மூலம் டிடிவி தினகரன்தான் அன்றைய நாளை பரபரப்பில் வைத்திருந்தார். இன்றைய ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 31, 2017) நடிகர் ரஜினிகாந்துக்கானதாக ஆகியிருக்கிறது.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என கடந்த 21 ஆண்டாக நிலவி வந்த எதிர்பார்ப்புக்கு ஒருவழியாக இன்று முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. ”நான் அரசியலுக்கு வருவது உறுதி. ஆன்மிக அரசியல்தான் எனது பாதை. உண்மை, உழைப்பு, உயர்வு அதுதான் என் கொள்கை. கடந்த ஓராண்டாக அரசியல் கெட்டுவிட்டது. இந்த சிஸ்டத்தை மாற்ற வேண்டும்,” என்று அவர் பேசியிருக்கிறார்.

நாடு முழுவதும் அனைத்து காட்சி ஊடகங்களிலும் இன்று ரஜினி அரசியல்தான் மைய விவாதமாகி இருக்கிறது. ட்விட்டரில் ரஜினியின் அரசியல் பற்றி தனி ஹேஷ்டேக் வலம் வருகிறது.

ஆறே மணி நேரத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் அதை ட்வீட் செய்துள்ளனர். சீனாவில் உள்ள ஓர் ஊடகம்கூட ரஜினி அரசியல் பற்றி எழுதும் அளவுக்கு அவருடைய திரை ஆளுமை கடல் கடந்து விரிந்து கிடக்கிறது.

ரஜினியின் பேச்சைக் கேட்டு, ரசிகர்கள் தலைகால் புரியாத மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அதேநேரம், அவருடைய பேச்சு, பல விவாதங்களையும், தெளிவின்மையையும் ஏற்படுத்தி இருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

ரஜினிகாந்த் ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் உடையவர். அதனால் சித்தாந்த ரீதியாக அவர் பாஜக பக்கம் தாவக்கூடும் என்ற பேச்சு இருந்து வருகிறது. அதற்கேற்ப, நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று சொன்னதற்கு முதல் ஆளாக வாழ்த்துச் சொன்னார் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

மேலும், பாஜகவுக்கு அவர் ஆதரவு தருவார் என்று தன் உள்ளக்கிடக்கையையும் வெளியிட்டுள்ளார்.

திராவிட கட்சிகளுக்கு முடிவு கட்ட ரஜினியால்தான் முடியும் என்று துக்ளக் பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர்குருமூர்த்தி கூறியுள்ளார். குருமூர்த்தி பாஜவில் எந்த பொறுப்பிலும் இல்லை என்றாலும், அவருடைய சித்தாந்தம் எதன் பின்னணியிலானது என்பதை யாவரும் அறிவர்.

பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணியன்சுவாமி, ரஜினியை அரசியல் ரீதியாக எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளார். எனினும், ரஜினியுடன் அரசியல் ரீதியாக பாஜக கூட்டணி வைத்தால் நான் வேறு மாநிலத்தில் அரசியல் செய்ய சென்று விடுவேன் என்றும் ட்விட்டரில் கொந்தளித்துள்ளார்.

அதிமுக அரசை பாஜகதான் பின்னின்று இயக்குவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், அதிமுக தலைவர்கள் அனைவருமே ரஜினியின் அரசியல் நுழைவு குறித்து வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவருமே கமல்ஹாசன் அரசியல் நுழைவை கடுமையாக எதிர்த்தவர்கள்.

ரஜினிக்கு பாஜக தரப்பில் இருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் பலமுறை நூல்விட்டுப் பார்த்தனர். ஆனால், தொடர்ந்து அவர் அதற்கு மசியாததால் வேறு திட்டத்தையும் பாஜக தரப்பில் இருந்தே வகுத்துக் கொடுத்ததாகவும் சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது.

அதாவது, ரஜினியை தனியாக கட்சி தொடங்க வைத்து, அவருடைய கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, தேர்தலைச் சந்திப்பதுதான் அந்த திட்டம்.

அது உறுதிப்படுத்தப்படாத தகவல்தான் என்றாலும், ரஜினியின் இன்றைய பேச்சு அதை நோக்கி நகர்வது போலதான் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்குவேன் எனக்கூறும் ரஜினி, ஏன் 2019ல் நடக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேசவில்லை என கேள்வி எழுப்புகின்றனர்.

மக்களவை தேர்தலில் மறைமுகமாக பாஜகவுக்கு ரஜினி ஆதரவு தருவார் என்றும் அதனால்தான் நேரடியாக சட்டப்பேரவை தேர்தலைப் பற்றி பேசியிருப்பதாகவும் கூறுகின்றனர்.

பாஜக பின்னணியில் இருப்பதை சித்தரிக்கும் விதமாக கார்ட்டூனிஸ்ட் பாலா ஒரு கார்ட்டூன் வெளியிட்டுள்ளார். அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சிவப்புக் கம்பளம் விரித்துக்கொண்டு செல்கின்றனர்.

நான் உங்களை முதல்வர் ஆக்குகிறேன் என்று சொல்லியபடியே பிரதமர் நரேந்திரமோடி ரஜினியை கையைப் பிடித்து அழைத்து வருவது போல சித்தரித்துள்ளார்.

இன்னொருவர், ‘2.0’ படத்தில் வருவதுபோல் இயந்திர ரஜினியை நட்டு, போல்ட் எல்லாம் பூட்டி நரேந்திர மோடி ரஜினியை தேர்தலுக்கு (போருக்கு) தயார் படுத்துவதுபோலவும் சித்தரித்துள்ளனர்.

ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் ரஜினியின் அரசியல் நுழைவு குறித்து 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வரவேற்று கருத்து தெரிவித்து இருந்தாலும், அதன் பின்னணி தன்மை குறித்த சந்தேகத்தையும் பலர் எழுப்பியிருக்கின்றனர்.

ஒருவர், ”திமுக கடைசியாக தனிப்பெரும்பான்மையுடன் 1996ம் ஆண்டில்தான் ஆட்சி அமைத்தது. அப்போதுகூட ரஜினியை வைத்து அறிக்கைவிட வைத்ததால்தான் அக்கட்சியால் வெற்றி பெற முடிந்தது. இனி திராவிட கட்சிகளின் எதிர்காலம் அவ்வளவுதான்,” என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவர், ரஜினியின் அரசியல் வருகையால் மு.க.ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு பணால் ஆகிவிடுவது போலவும், அதனால் அவர் தனிமையில் அமர்ந்து புலம்புவது போலவும் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

சிலர், ”ஆண்டின் கடைசி நாளில் சாதாரண மக்கள் பார்ட்டி கொண்டாட சென்று விடுவார்கள். ஆனால், உயர்ந்தவர்கள் பார்ட்டி (கட்சி) தொடங்குவார்கள்,” என்றும், ”ரஜினிகாந்த் அரசியலுக்குள் நுழையவில்லை. அரசியல்தான் ரஜினிக்குள் நுழைந்திருக்கிறது,” என்றும் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

குசும்பான ஒரு பதிவர், ”மீசை வைத்தால் இந்திரன், வைக்காட்டி சந்திரன். வெறும் கண்ணால் பார்த்தால் ரஜினி. ஈரோட்டுக் கண்ணாடி அணிந்து பார்த்தால் மோடி,” என்று குறியீடுகள் மூலமும் ரஜினியை சிலர் கிண்டல் செய்து ‘மீம்’ பதிவிட்டுள்ளார்.

ஒருவேளை ரஜினி தீவிர அரசியலில் ஈடுபடும்பட்சத்தில், அவருடைய குடும்பத்தினரும் அரசியலில் ஈடுபடக்கூடும் என்பதை ஒருவர், இன்றைய செயல் தலைவர் என்று மு.க.ஸ்டாலின் படத்தையும், நாளைய செயல் தலைவர் என்று நடிகர் தனுஷின் படத்தையும் ‘மீம்’ ஆக பதிவிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ”மன்னராட்சி காலத்தில் மராட்டியர் படையெடுத்து வந்தனர். இப்போது படமெடுத்து வருகின்றனர்,” என்று ரஜினியை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

அதற்கு ஒரு ரஜினி ரசிகர், ”எனக்கு இந்த லாஜிக்கே புரியல. ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்றால் திமுக, அதிமுக கவலைப்படலாம். நோட்டாவைக்கூட ஜெயிக்க முடியாத இவனெல்லாம் எதுக்கு பயப்படணும்,” என்று கேட் டுள்ளார்.

”தமிழ் தேசியவாதிகளும் ரஜினியை ஒரு பிடி பிடித்துள்ளனர். தமிழ் நடிகன் சத்யராஜ் மன்னிப்பு கேட்டால்தான் படத்தை வெளியிடுவோம் என்கிறார்கள் கன்னடர்கள். கன்னட நடிகன் ரஜினிகாந்த் தமிழகத்தை ஆள வேண்டும் என்கிறான் தமிழ் ரசிகன். தன்மானத்தை இழந்த தமிழர்கள்,” என்றும் சாடியிருக்கின்றனர்.

சமூக ஊடகங்களின் அபார வளர்ச்சியால் அதன் கண்காணிப்பில் இருந்து யாருமே தப்பிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதை மையப்படுத்தி ஒருவர், ”நீ பார்ப்பன ஆன்மிக அரசியலோ எதுவோ. நீ என்ன செய்கிறாய் என நாங்களும் பார்க்கிறோம்,” என்று வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவை சொல்வதுபோல் ஒருவர் ‘மீம்’ வெளியிட்டுள்ளார்.

இன்றைய நிலையில் இந்தியாவுக்குத் தேவை வேளாண்மை மற்றும் தொழில் புரட்சிதான். ஆனால் ரஜினிகாந்தோ ஆன்மிக அரசியல் பற்றி பேசுகிறார். நடிகரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? என்று கவலையுடன் கேட்டுள்ளார்.

ரஜினியின் அரசியல் நுழைவு குறித்து சமூக ஊடகங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கும் நிலையில், அவர் பாஜகவை நோக்கி நகர்வார் என்ற யூகங்களையே பலரும் பலாமாக முன்வைத்துள்ளனர்.

– பேனாக்காரன்.