Monday, May 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

எட்டு வழிச்சாலையை எதிர்த்து அம்மன் கோயிலில் நோன்பு இருக்கவும் போலீசார் தடை! 15 விவசாயிகள் திடீர் கைது!!

 

சேலம் அருகே, எட்டு வழிச்சாலையை எதிர்த்து அம்மன் கோயிலில் உண்ணாநோன்பு இருக்க முயன்ற 15 விவசாயிகளை போலீசார் இன்று (ஆகஸ்ட் 5, 2018) கைது செய்தனர்.

 

சேலம் – சென்னை இடையே அமையவுள்ள எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைக்கு எதிராக சேலம் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, ராமலிங்கபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கறவை மாடுகளுக்கு கருப்புக்கொடி கட்டியும், அம்மனுக்கு பொங்கலிட்டு கோரிக்கை மனு கொடுத்தும் பண்பாட்டுத் தளத்தில் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குள்ளம்பட்டியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயில் வளாகத்தில் இன்று காலை 10.15 மணியளவில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றுகூடினர். எட்டு வழிச்சாலையை வரவிடாமல் தடுக்க வேண்டும் என்றும், விவசாயிகளையும், விவசாயத்தையும் காக்க வேண்டும் என்றும் அம்மனிடம் வேண்டுதல் வைத்து, ஒருநாள் உண்ணாநோன்பு இருப்பதற்காகக்கூறி கோயில் வளாகத்தில் அமர்ந்தனர்.

 

இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீஸ் டிஎஸ்பி சூரியமூர்த்தி மற்றும் காரிப்பட்டி போலீசார் நிகழ்விடத்திற்கு வந்தனர். அவர்கள் வந்த வேகத்திலேயே, விவசாயிகளை உடனடியாக கோயில் திடலை விட்டு கலைந்து போகும்படி மிரட்டினர்.

 

”நீங்கள் மறுபடியும் மறுபடியும் எங்களை ‘இரிடேட்’ செய்யறீங்க. பொது இடத்தில் நாலு பேருக்கு மேல் கூடினாலே போலீசில் பர்மிஷன் வாங்கணும்னு உங்களுக்கு தெரியாதா? சாமிக்கு உண்ணாவிரதம்னு சொல்றீங்க… அப்புறம் எதுக்கு எட்டு வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து பேனர் கட்டியிருக்கீங்க?. இதையும் மீறி நீங்க விரதம் அது இதுன்னு சொன்னீங்கனா கைது பண்றத தவிர வேறு வழியில்லை,” என போலீசார் மிரட்டினர்.

அதற்கு பன்னீர்செல்வம் தலைமையிலான விவசாயிகள், ”இந்த கோயில் தனியார் பட்டா நிலத்தில் உள்ளது. இது பொது இடம் இல்லை. நாங்கள் எங்கள குலதெய்வ கோயிலில் ஊர் நன்மைக்காக வேண்டுதல் வைத்து நோன்பு இருக்கோம். இதற்கு ஏன் பர்மிஷன் வாங்கணும்? போலீசாருக்கும் எங்களுக்கும் எந்த வித தனிப்பட்ட பகையும் இல்லை. நாங்கள் ஏன் உங்களை தொந்தரவு செய்ய வேண்டும்?. நீங்கள் இந்த இடத்தில் இருந்து கிளம்புங்கள்,” என்றனர்.

 

இப்படியே இருதரப்புக்கும் இடையே 20 நிமிடங்கள் வாக்குவாதம் நடந்தது. ஒருகட்டத்தில் தரையில் அமர்ந்து உண்ணாநோன்பு இருக்க முயன்ற விவசாயிகளை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். பாண்டுரங்கன் என்ற 70 வயது முதியவரைக்கூட கட்டாயமாக இழுத்துச்சென்று வாகனத்தில் ஏற்றினர். கோயில் திடலில் கட்டப்பட்டு இருந்த எட்டு வழிச்சாலைக்கு எதிரான ஃபிளக்ஸ் பேனரையும் அவிழ்த்து எடுத்துச் சென்றனர்.

 

குள்ளம்பட்டி, ராமலிங்கபுரம் கிராமங்களைச் சேர்ந்த வீரமணி, தமிழ்ச்செல்வன், பன்னீர்செல்வம், மணிகண்டன், பாண்டுரங்கன், வெற்றிவேல், பொன்னுகுமார், சேகர், முத்து, அன்பு ராதா, செல்வி, அமுதா, கனகா, வள்ளி, சவுமியா ஆகிய 15 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 6 பேர் பெண்கள். கைதானவர்களை மின்னாம்பள்ளியில் உள்ள சத்தியநாராயணா கல்யாண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவருக்கும் மதியம் சாப்பிடுவதற்காக போலீசார் ஹோட்டலில் இருந்து குஸ்கா வரவழைத்துக் கொடுத்தனர். ஆனால் விவசாயிகள், ‘நாங்கள் பெரியாண்டிச்சி அம்மனிடம் வேண்டுதல் வைத்து உண்ணாநோன்பு இருக்கிறோம். அதனால் நாங்கள் சாப்பிட மாட்டோம்,’ என்று கூறி, உணவுப் பொட்டலங்களை வாங்க மறுத்துவிட்டனர்.

 

இன்று மாலை 6.15 மணியளவில் அவர்கள் அனைவரையும் போலீசார் விடுதலை செய்தனர். ஊர் திரும்பிய விவசாயிகள், பெரியாண்டிச்சி அம்மனை வழிபட்டனர். இதையடுத்து அவர்கள் உண்ணாநோன்பை முடித்துக்கொண்டனர். காவல்துறை அனுமதியுடன் மீண்டும் அதிகாரப்பூர்வ உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளதால், எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்டம் மீண்டும் பெரிய அளவில் வெடிக்கும் எனத்தெரிகிறது.

 

 

– நாடோடி