Sunday, May 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

எங்களுக்கு குடும்பத்தோடு சமாதி கட்டிவிடுங்கள்!; எட்டு வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் மீண்டும் குமுறல்!!

 

எட்டு வழிச்சாலைக்காக விவசாய நிலத்தை எடுத்துக்கொண்டு அரசு தருவதாகச் சொல்லும் வீட்டு மனைப்பட்டா நிலத்தில் விவசாயிகளுக்கு குடும்பத்துடன் சமாதி கட்டிவிடச் சொல்லுங்கள் என்று வருவாய்த்துறை அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின்போது விவசாயிகள் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினர்.

 

எட்டு வழிச்சாலைக்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் வீட்டுமனைப் பட்டா நிலத்தில், விவசாயிகளை குடும்பத்தோடு வைத்து சமாதி கட்டிவிடுங்கள் என்று அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின்போது விவசாயிகள் மீண்டும் குமுறலை வெளிப்படுத்தினர்.

சேலத்தை அடுத்த குள்ளம்பட்டி கிராமத்தில் நேற்று காலை இருபதுக்கும் மேற்பட்ட விவசாயிகள், சேலம் – சென்னை இடையில் அமையவுள்ள எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் உண்ணாநோன்பு இருக்கத் தொடங்கினர்.

 

வாழப்பாடி போலீஸ் டிஎஸ்பி சூரியமூர்த்தி தலைமையிலான காரிப்பட்டி போலீசார் உண்ணாநோன்பு இருக்க முயன்றதாக 6 பெண்கள் உள்பட 15 விவசாயிகளை கைது செய்தனர். கோயிலில் வழிபாடு என்று சொல்லிவிட்டு திடீரென்று உண்ணாவிரத போராட்டத்திற்கு விவசாயிகள் தயாராகிவிட்டதாக காவல்துறை, வருவாய்த்துறை வட்டாரத்தில் தகவல்கள் பறந்தன.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த வருவாய்த்துறை அதிகாரிகள் குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி விவசாயிகளிடம் இன்று (ஆகஸ்ட் 6, 2018) நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். மின்னாம்பள்ளி பஞ்சாயத்து அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. தாசில்தார்கள் அன்பரசி, பொன்னுசாமி, ஆர்.ஐ., சரஸ்வதி, வி.ஏ.ஓ., ஆனந்தவேலு ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சு நடத்தினர். நேற்று கைது செய்யப்பட்ட அனைத்து விவசாயிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

வருவாய்த்துறை அதிகாரிகள் பேசுகையில், ”கோயிலில் உண்ணாவிரதம் இருப்பதற்கு காவல்துறையில் முன்கூட்டியே பர்மிஷன் வாங்கியிருக்கலாமே…? எட்டு வழிச்சாலைத் திட்டத்தால் வீட்டை இழக்கும் விவசாயிகளுக்கு மாற்று இடத்தில் வீட்டுமனைப்பட்டா வழங்குகிறோம். வழக்கமான இழப்பீடு மட்டுமின்றி முதியோர் ஓய்வூதியத்தொகை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும். உங்களுக்கு வேறு என்னதான் வேண்டும்? ஏன் இப்படி செய்கிறீர்கள்?

அயோத்தியாப்பட்டணம் அலகில் அதிக விவசாயிகள் எட்டு வழிச்சாலைக்கு நிலம் தர விருப்பம் இல்லை என்றுதான் ஆட்சேபனை மனு கொடுத்துள்ளனர். இத்திட்டத்தை ஆதரிக்காத பல விவசாயிகள் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. ஆனால் நீங்கள்தான் திட்டத்தையும் எதிர்க்கிறீர்கள்; அதிகாரிகளையும் எதிர்க்கிறீர்கள்,” என்றனர்.

 

இதற்கு பதில் அளித்த விவசாயிகள் வீரமணி, பன்னீர்செல்வம், அமுதா, மற்றொரு மணிகண்டன், சேகர், முத்து, செல்வி ஆகியோர் கூறுகையில், ”எங்கள் ஊரில் 17 பேருக்குச் சொந்தமான தனியார் பட்டா நிலத்தில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் சாமி கும்பிடவும், நோன்பு இருக்கவும் காவல்துறையில் அனுமதி பெற வேண்டிய தேவையில்லை. எங்களை அவர்கள்தான் மிரட்டி கைது செய்துள்ளனர்.

 

இனி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அந்தக் கோயில் திடலில் எங்களது போராட்டம் தொடரும். யாருக்காகவும் பின்வாங்க மாட்டோம். நிலத்தைக் கொடுத்தால் மாற்று இடத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்குவதாகச் சொல்கிறீர்கள். அந்த இடத்தில் எங்களுக்கு குடும்பத்தோடு சமாதி கட்டி விடுங்கள். இப்போது இருக்கும் இடத்தில் இருந்து எங்களுடைய அங்காளி பங்காளிகளை எல்லாம் விட்டுவிட்டு நாடுகடத்தப் பார்க்கிறீர்கள்.

 

வற்றாத கிணறு, வளமான நிலத்தை விட்டுவிட்டு நாங்கள் எங்கே போவோம்? அரசாங்கம் கொடுக்கும் இழப்பீடு தொகையை வைத்துக்கொண்டு இதுபோன்ற ஒரு நிலத்தை இந்த ஊரில் வேறு எங்காவது வாங்க முடியுமா?. இந்த நிலத்தை நம்பித்தான் நாங்கள் எங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கிறோம். அவர்களுக்கு கல்யாணம் காட்சி என்று செய்ய வேண்டியிருக்கிறது.

 

பல இடங்களில் விளை நிலத்தின் நடுவில் சாலை வருகிறது. இதனால் எஞ்சியுள்ள நிலத்தில் எப்படி விவசாயம் செய்ய முடியும்?. இந்தத் திட்டத்தால் சாலையைச் சுற்றியுள்ள நிலத்திலும் விளைச்சல் பாதிக்கும் அபாயம் உள்ளது. எங்களுக்கு எட்டு வழிச்சாலை வேண்டாம். எங்களுக்கு எங்கள் நிலம்தான் வேண்டும்,” என ஒரே குரலில் கூறினர்.

 

அதற்கு அதிகாரிகள், ”இது அரசாங்க திட்டம். அதை செயல்படுத்துவதுதான் எங்களுடைய பணி. உங்களுக்கு வேறு ஏதாவது சலுகைகள் வேண்டுமானால் கேட்கலாம். உங்கள் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்,” என்று கூறிவிட்டு அதிகாரிகள் கூட்டத்தை முடித்து வைத்தனர்.

 

 

– நாடோடி.