– சிறப்பு செய்தி –
சேலம் பெரியார் பல்கலையில் கடந்த இருபது ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட செலவினங்களில் 47 கோடி ரூபாய்க்கு மேல் கணக்கு ஆவணங்கள் ஒப்படைக்காதது தணிக்கையில் தெரியவந்துள்ளது. கல்வித்தகுதியே இல்லாதவர்களை எல்லாம் உதவி பேராசிரியராக நியமித்தது, கணக்குவழக்கில்லாமல் ஊதியங்களை வாரி இறைத்தது உள்ளிட்ட கேலிக்கூத்துகளை எல்லாம் தணிக்கை அதிகாரிகள் தோலுரித்துக் காட்டியுள்ளனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் கடந்த 1997ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி தொடங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்திற்கு செல்ல இருந்த பெரியார் பல்கலையை சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏழை மாணவர்களின் கல்வி நலனுக்காக அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் தனக்கே உரிய பாணியில் உரிமையுடன் கேட்டுப் பெற்றார் அந்நாள் வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.
ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் நிகழும்போதெல்லாம் உயர்கல்வித்துறை அல்லது உள்ளூர் அமைச்சர்களின் சாதியைச் சார்ந்தவர்களே உதவி பேராசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் பணியிடங்களில் அதிகளவில் நியமிக்கப்பட்டு வந்தனர். சாதிக்கு எதிராக களமாடிய பெரியாரின் பெயரில் அமைந்த இப்பல்கலையில் சாதிதான் முக்கிய பொருளாக இருந்து வருகிறது.
கடந்த 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, துணைவேந்தர், பதிவாளர், தேர்வாணையர், நிதி அலுவலர் என முக்கிய பொறுப்புகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்ந்த கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக நியமிக்கப்பட்டனர்.
பெரியார் பல்கலையில் முன்பு துணை வேந்தராக இருந்த சுவாமிநாதன், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 136 பணியிடங்களை யுஜிசி விதிகளை மீறி முறைகேடாக நியமித்ததோடு, ஒவ்வொரு பணி நியமனத்திற்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை வசூல் வேட்டை நடத்தியதாக பல தரப்பிலிருந்தும் பகிரங்கமாக குற்றச்சாட்டுகள் கிளம்பின.
தற்கொலை செய்து கொண்ட பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளர் அங்கமுத்து, சுவாமிநாதனுக்கு தான் ஒரு பணம் வசூலித்துக்கொடுக்கும் ஏஜன்டாக செயல்பட்டேன் என்றும், முறைகேடான நியமனங்கள் மூலம் தான் மட்டுமே 10 கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தேன் என்றும் தற்கொலைக்கு முன்னதாக எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, பெரியார் பல்கலையின் அத்தனை வரவு, செலவுகளையும் உள்ளாட்சித் தணிக்கைக்குழுவினர் முழுமையாக தணிக்கை செய்துள்ளதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அண்மையில் பெரியார் பல்கலையின் 2015&2016ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ஆண்டுக்கான கணக்கு வழக்குகளை உள்ளாட்சி நிதி தணிக்கை ஆய்வாளர் ரவி தலைமையிலான குழுவினர் தணிக்கை செய்துள்ளனர்.
பெரியார் பல்கலை தொடங்கப்பட்ட ஆண்டு முதல் கடைசியாக தணிக்கை நடத்தி முடிக்கப்பட்ட 2015-2016ம் ஆண்டு வரையில் 47 கோடியே 44 லட்சத்து 16267 ரூபாய்க்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக 691 தணிக்கை தடைகள் சொல்லப்பட்டு உள்ளன. இறுதியாக தணிக்கை நடந்த காலக்கட்டத்தில் மட்டும் 1.74 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை.
அதிகபட்சமாக கடந்த 2014-2015ம் நிதியாண்டில் மட்டும் ரூ.13.18 கோடியை செலவழித்ததற்கான பில்கள், வவுச்சர்கள், இதர ரசீதுகள் உள்ளிட்ட ஆவணங்கள் கேட்டும், தணிக்கையின்போது சமர்ப்பிக்கப்படவில்லை என்கிறது அந்த அறிக்கை.
இந்த நிதி முறைகேடு மட்டுமின்றி உபரி பணி நியமனங்கள், விதிகளை மீறி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியது குறித்தும் பல்வேறு கேள்விகள் தணிக்கை அறிக்கையில் எழுப்பப்பட்டு உள்ளன. அரசின் அனுமதியின்றி, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் சகட்டுமேனிக்கு சம்பளத்தை லட்சக்கணக்கில் வாரி இறைத்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
மைக்ரோ பயாலஜி துறைத்தலைவராக இருக்கும் பேராசிரியர் பாலகுருநாதன், கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி பெரியார் பல்கலையில் பணியில் சேர்ந்தார். தன்னுடைய எம்.எஸ்சி., எம்ஃபில்., பிஎச்.டி., ஆகிய படிப்புகளை மரைன் பயாலஜி துறையில் நிறைவு செய்துள்ளார். அப்போதைய பதிவாளரின் செயல்முறைகள் ஆணையின்படி பாலகுருநாதன் மைக்ரோபயாலஜி துறை பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
ஆனால் மைக்ரோபயலாஜி துறையும், மரைன் பயாலஜி துறையும் ஒன்றுதான் என்பதற்கோ, சமமானது என்பதற்கோ எந்த ஒரு சான்றுகளும் இதுவரை அவருடைய பணிப்பதிவேட்டில் குறிப்பிடப்படவில்லை.
எனில், மரைன் பயாலஜி படித்த ஒருவரை எந்த விதிகளின் கீழ் மைக்ரோபயாலஜி துறையில் நியமிக்கப்பட்டார் என்று கேள்வி எழுப்பியுள்ள தணிக்கை குழுவினர், அவர் பணியில் நியமிக்கப்பட்டதுமுதல் தணிக்கை நடந்த காலம் வரை வழங்கப்பட்ட 51 லட்சத்து 22382 ரூபாயை பிடித்தம் செய்ய வேண்டும் என்றும், இதுகுறித்து அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதுபற்றி 2014-15 ஆண்டின் தணிக்கையின்போதே சுட்டிக்காட்டியும் ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கேட்கப்பட்டுள்ளது.
பொதுவாக பல்கலையில் உதவி பேராசிரியர் / இணை பேராசிரியர் / பேராசிரியர் பணியிடங்களில் நியமிக்கப்படக்கூடியவர் அதற்கான விளம்பர அறிவிக்கை வெளிவந்த தேதியில் உரிய கல்வித்தகுதியை முடித்திருக்க வேண்டும். ஆனால் பெரியார் பல்கலையில் இந்த அடிப்படை விதியையும் மீறி, அதாவது உரிய கல்வித்தகுதியை நிறைவு செய்வதற்கு முன்பே பணியில் சேர்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
பொருளாதாரத்துறையில் பெண் உதவி பேராசிரியராக பணியாற்றும் ஜனகம், 20.6.2005ம் தேதியில் பணியில் சேர்ந்தார். இதற்கான விளம்பர அறிவிக்கை வெளியிடப்பட்ட 11.4.2005ம் தேதி நிலவரப்படி, அவர் எம்ஃபில்., படிப்பையோ பிஎச்.டி., அல்லது செட் / ஸ்லெட் / நெட் தகுதியையோ பெற்றிருக்கவில்லை. அவருடைய பணி நியமனமும் தவறானது என்கிறது தணிக்கை அறிக்கை.
மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றும் எம்.சூரியகுமார், கடந்த 20.8.2015ம் தேதி பணியில் சேர்ந்தார். இந்தப் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிக்கை 18.5.2015ம் தேதி வெளியிடப்பட்டது. அன்றைய தேதியில் சூரியகுமார், உதவி பேராசிரியர் பணிக்கான எந்த ஒரு கல்வித்தகுதியையும் நிறைவு செய்யவில்லை.
மேலும், எம்ஃபில் முடித்த இரண்டு ஆண்டு காலத்திற்குள் பிஎச்.டி., முடித்ததாகவும் சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளார். இந்தியாவில் அத்தனை குறுகிய காலத்திற்குள் பிஎச்.டி., படிப்பை நிறைவு செய்ய முடியாது எனத்தெரிவித்துள்ள தணிக்கைக் குழுவினர், அவருடைய பணி நியமனமே முற்றிலும் பல்கலை மானியக்குழு விதிகளுக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளனர்.
பல்கலை மானியக்குழுவின் 30.6.2010ம் தேதியிட்ட கடித எண் 3, 1/2009ன் படி, ஒரு கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்படக்கூடிய ஒருவர், இணை பேராசிரியர் அல்லது பேராசிரியராக 15 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பிஎச்.டி., முடித்திருக்க வேண்டும்.
இந்த மூன்று விதிகளுக்கும் புறம்பாக மேட்டூரில் இயங்கும் பெரியார் பல்கலை உறுப்புக்கல்லூரிக்கு மருதமுத்து என்பவர் முதல்வராக நியமிக்கப்பட்டு உள்ளார். ஒரு சாதாரண உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த மருதமுத்துவை எப்படி கல்லூரி முதல்வராக நியமிக்கலாம் என்றும் தணிக்கை அதிகாரிகள் காட்டமாக ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமின்றி, அரசின் அனுமதியின்றி பெரியார் பல்கலையில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட உபரியாக 70 உதவி பேராசிரியர், 17 பேராசிரியர் உள்பட 104 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது. இந்த உபரி பணியிடங்கள் வாயிலாக மட்டுமே பல்கலைக்கு 8.89 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உதவியாளர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட ஆசிரியர் அல்லாத பணியிடங்களிலும் 30 பேர் உபரியாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அரசுத்துறைகளில் உள்ளாட்சித் தணிக்கை நடப்பதும், தணிக்கை தடைகளை கூட்டமர்வின் மூலம் விளக்கம் கொடுத்து, கூடுமான வரை நிவர்த்தி செய்வதும் நடைமுறையில் இருப்பதுதான். ஆனால், பெரியார் பல்கலையைப் பொறுத்தவரை, 1997&98ம் ஆண்டில் இருந்தே தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டாலும், அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ள தணிக்கை தடைகளை நிவர்த்தி செய்ய எந்த ஒரு துணைவேந்தரும் முயற்சிக்கவில்லை.
தணிக்கை தடைகள் உடைக்கப்படாததற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று, செலவினங்களுக்கான ரசீதுகள் தொலைந்து போயிருக்கலாம். அல்லது, பல்கலை நிதியை பலரும் கூட்டு சேர்ந்து சுருட்டியிருக்கலாம்.
தணிக்கை தடைகள் மூலம் கணக்கில் கொண்டு வரப்படாத தொகையை ஊழல் என்ற பதத்தில் சொல்ல முடியாவிட்டாலும், 20 ஆண்டுகளாக அந்த தடைகளுக்கு விளக்கம் சொல்லப்படாமல் இருப்பதே குற்றம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். மேலும், அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு விதிகளை மீறி உபரியாக ஆள்களை நியமிப்பது அப்பட்டமான ஊழல் என்றும் சொல்கின்றனர் தணிக்கை அதிகாரிகள்.
இதுகுறித்து பெரியார் பல்கலை பதிவாளர் மணிவண்ணனிடம் நேரில் சந்தித்து விளக்கம் பெற்றோம்.
”பல்கலைக்கழகம் என்பது தன்னாட்சி அந்தஸ்து பெற்ற அமைப்பு. முழுமையான அரசு அமைப்பு கிடையாது. ஆனாலும் எங்களுக்கும் உள்ளாட்சி தணிக்கை நடைபெறும். எந்த ஒரு பணியிடம் நிரப்பப்படுவதாக இருந்தாலும் பல்கலை விதிகளின்படியும், சிண்டிகேட் குழு ஒப்புதலுடனும்தான் நிரப்பப்படும். முந்தைய காலங்களில் யாரும் தணிக்கை தடைகளை நிவர்த்தி செய்யவில்லை. நாங்கள் வந்த பிறகுதான், கடந்த இரண்டு ஆண்டுகளாக தணிக்கை தடைகளை நிவர்த்தி செய்து வருகிறோம்.
பேராசிரியர் பாலகுருநாதன் மரைன்பயாலஜி முடித்துவிட்டு, மைக்ரோபயாலஜி துறையில் நியமிக்கப்பட்டு உள்ளதற்கு தணிக்கை அறிக்கையில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அவரை நியமனம் செய்யும்போதே, ஆளுநர் அலுவலகத்தில் பாடப்பிரிவு சமானம் குறித்து விளக்கம் பெற்ற பிறகுதான் நியமிக்கப்பட்டு உள்ளார். இருந்தாலும், பாலகுருநாதன் நியமனம் குறித்து சரியான தகவல்களை விசாரித்துவிட்டு பேசுகிறேன்.
2015-2016 தணிக்கை அறிக்கையில் 47.44 கோடி ரூபாய்க்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல தணிக்கை தடைகளுக்கு நாங்கள் உரிய ஆதாரங்களுடன் தணிக்கை அலுவலர்கள் உடனான கூட்டமர்வின்போது விளக்கம் கொடுத்திருக்கிறோம். இன்னும் பல தணிக்கை தடைகளுக்கு விளக்கம் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்,” என்றார் பதிவாளர் மணிவண்ணன்.
– பேனாக்காரன்.