Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நொறுங்கும் ஏழைகள்; அம்பானியின் சொத்து மட்டும் உயர்வது எப்படி?

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ரஜினி நடிப்பில் வெளியான ‘சிவாஜி’ படத்தில், ரஜினி அறிமுகம் ஆகும் காட்சி அது. விமான நிலையத்தில் இருந்து வெளியேறி, காரில் ஏறும்போது பக்கவாட்டு கண்ணாடியை தட்டியபடி ஒரு பெண் கையில் தட்டேந்தி நிற்பார். அப்போது ரஜினி சொல்வார், ”பணக்காரர் மேலும் பணக்காரர் ஆகிறார். ஏழைகள் மேலும் ஏழைகளாகிட்டே இருக்கிறார்கள் (Rich get Richer and Poor get Poorer)” என ஆங்கிலத்தில் ஆதங்கத்துடன் கூறுவார்.

சமீபத்திய ஃபோர்ப்ஸ் இந்தியா (FORBES INDIA) பத்திரிகையின் அறிக்கையும் அந்த வசனத்தைதான் நினைவூட்டுகிறது. உலகளவில் பிரபலமான வணிக பத்திரிகையான ஃபோர்ப்ஸ், இந்திய பணக்காரர்களின் பட்டியலை இரு நாள்களுக்கு முன்பு வெளியிட்டு இருக்கிறது.

அதில், இந்தியாவின் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. அவருடைய தற்போதைய சொத்து மதிப்பு 38 பில்லியன் டாலர்கள் (2.47 லட்சம் கோடிகள்). கடந்த பத்தாண்டுகளாக அவர்தான் முதலிடத்தை தக்க வைத்திருக்கிறார்.

முகேஷ் அம்பானி

பெட்ரோலியம், எரிவாயு துறைகளில் முகேஷ் அம்பானியின் சாம்ராஜ்யம் தொடர்ந்து வருவதும் அவருடைய சொத்து மதிப்பு உயர்வுக்கு இன்னொரு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. அதனால்தான் அவருடைய சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் 15.3 பில்லியன் டாலர்கள் (சுமார் ஒரு லட்சம் கோடி) அதிகரித்துள்ளதாம். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகளின் மதிப்பு பெரிய அளவில் வளர்ச்சி கண்டிருக்கிறது. ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் இந்திய பதிப்பு உரிமை, முகேஷ் அம்பானியின் வசம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

விப்ரோ மென்பொருள் நிறுவன அதிபரான அசிம் பிரேம்ஜி, இரண்டாம் இடம் பிடித்துள்ளார். முகேஷின் சொத்து மதிப்புடன் ஒப்பிடுகையில் அசிம் பிரேம்ஜியின் சொத்து மதிப்பு, முகேஷை விட பாதிதான். அவரிடம் 19 லட்சம் பில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 1.2 லட்சம் கோடி சொத்துகள் உள்ளதாக கூறுகிறது ஃபோர்ப்ஸ்.

அசிம் பிரேம்ஜி

பிரதமர் நரேந்திர மோடியின் மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையாலும், சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி விதிப்பாலும்தான் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 5.7 சதவீதம் அளவுக்கு சரிந்ததாகவும் கூறுகிறது ஃபோர்ப்ஸ் இதழ்.

இந்தியா, பொருளாதார மந்த நிலையில் சிக்கித் தவித்து வரும் இந்த நிலையிலும், இந்தியாவில் உள்ள 100 பெரும் செல்வந்தர்களின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் நான்கில் ஒரு பங்கு (25 சதவீதம்) அதிகரித்துள்ளதாக ஆச்சர்யம் தெரிவிக்கிறது அந்த இதழ். அதற்குக் காரணம், பங்குச் சந்தையில் ஏற்பட்ட உயர்வுதான் என்றும் தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்பாம் என்ற அமைப்பு, நாட்டின் 99 சதவீத மக்களிடம் செல்வத்தை வங்கிளும், பங்குச்சந்தைகளும் பிடுங்கி ஒரு சதவீதமே உள்ள கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பதால்தான் இத்தகைய பொருளாதார இடைவெளி ஏற்பட்டுள்ளதாக பகிரங்கமாக கூறுகிறது.

பிர்லா குழுமத்தைச் சேர்ந்த குமார் மங்களம் பிர்லா, இந்தியாவின் முதல் பத்து பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 8ம் இடத்தில் இருக்கிறார். நரேந்திர மோடிக்கு நெருக்கமானவராகச் சொல்லப்படும் அதானி குழும அதிபர் கவுதம் அதானி, 10ம் இடம் வகிக்கிறார்.

குமார் மங்களம் பிர்லா

இந்திய அளவில் முதல் 20 இடங்களில் உள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலில் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவன அதிபர் ஆச்சார்யா பாலகிருஷ்ணன், 19ம் இடத்தில் உள்ளார். 45 வயதான அவர்தான் இந்தப் பட்டியலில் உள்ள இளம் கோடீஸ்வரர்.

கவுதம் அதானி

பொருளாதார சமச்சீரற்ற தன்மை நிலவுவது ஆரோக்கியமான வளர்ச்சியாக கருத முடியாது என்கிறார்கள் பொருளியல் வல்லுநர்கள். ஆக்ஸ்பாம் அமைப்பு, இந்தியாவில் உள்ள 7 பெரும் கோடீஸ்வரர்களிடம் நாட்டின் 70 சதவீத மக்கள் வைத்திருக்கும் சொத்துக்கு இணையான சொத்துகளை வைத்திருப்பதாகக் கூறுகிறது.

பாபா ராமதேவுடன் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் (வலது)

தற்போதைய பண வீக்கத்திற்கு இணையாக இந்திய ஏழைகளின் வருமானம் உயரவில்லை என்பதோடு, கடந்த 20 ஆண்டுகளில் தனி நபர் வருமான உயர்வு 15 சதவீதம் வரை சரிவடைந்து இருப்பதாகவும் ஆக்ஸ்பாம் கூறுகிறது.

இதேபோன்ற பொருளாதார இடைவெளி அதிகரிக்கும்பட்சத்தில், ஆண்டான் அடிமை மனோபாவம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ஆபத்தும் இருக்கிறது.

– நாடோடி.