Sunday, April 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

திடீர் மயக்கம், தலை பாரம், ஞாபக மறதி, கண் கட்டுதல் இருக்கிறதா? உடனடியாக டாக்டரை பாருங்க!

இன்றைக்கும் போதிய விழிப்புணர்வு இல்லாததால், வலிப்பு நோயால் துடிக்கும் ஒருவருக்கு, சாவிக்கொத்து அல்லது ஏதேனும் இரும்பைக் கையில் திணிக்கும் போக்கே நீடிக்கிறது. ஆனால், வலிப்புக்கும் இரும்புக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்கிறது மருத்துவ உலகம்.

அதேநேரம், ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் வலிப்பு நோயை முற்றிலும் கட்டுப்படுத்தி விடலாம் என மருத்துவர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர். எனினும், சரியான நேரத்தில் முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கின்றனர்.

வலிப்பு நோய் எதனால் வருகிறது? அறிகுறிகள், சிகிச்சை முறைகள் குறித்து சேலம் இரண்டாம் அக்ரஹாரத்தில் உள்ள திரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மூளை நரம்பியல் (நியூராலஜிஸ்ட்) துறை மருத்துவர் க.திருவருட்செல்வன் விரிவாக விளக்கம் அளித்தார். அவரிடம் பேசியதில் இருந்து…

க.திருவருட்செல்வன்

வலிப்புக்கான காரணங்கள்:

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தன்னம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர். அது தேவையற்றது. நாமெல்லாம் வரலாற்று நாயகர்களாக கொண்டாடும் ஜூலியஸ் சீசர், மாவீரன் அலெக்ஸாண்டர், நெப்போலியன், புவி ஈர்ப்பு விசையைக் கண்டறிந்த ஐசக் நியூட்டன், கணித மேதை பிதாகரஸ் ஆகியோருக்கும் வலிப்பு நோய் பாதிப்பு இருந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?.

நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை. அவ்வளவு ஏன், தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸூம் கூட வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்தான். அதனால் வலிப்பு நோய் உள்ளவர்கள் ஒருபோதும் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது. அது, சாதாரண வியாதிதான்.

மூளையில் நடந்து கொண்டிருக்கும் ‘மின்சார ஓட்டத்தில்’ ஏற்படும் திடீர் மாறுதல் காரணமாக வலிப்பு நோய் உண்டாகிறது. சிலருக்கு இது பரம்பரை வியாதியாகவும் இருக்கலாம். ஆனாலும், நிறைய பேருக்கு எவ்வித காரணங்களும் இல்லாமலேகூட வலிப்பு நோய் ஏற்படக்கூடும்.

மன வியாதி அல்ல:

வலிப்பு நோய் பற்றி இன்னும் நம் சமூகத்தில் முழுமையான புரிந்து கொள்ளுதல் இல்லை. இது ஒரு மன வியாதி அல்ல என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைக்கும் கிராமப்புறங்களில் வலிப்பு வந்தவர்களுக்கு சாமி வந்துவிட்டது அல்லது பேய் பிடித்து விட்டதாகக் கருதி, பேய் ஓட்டுகின்றனர். இல்லாவிட்டால், வேப்பிலை அடித்து மந்திரித்து விடுகின்றனர். அப்படி எல்லாம் ஒருபோதும் செய்யக்கூடாது.

தாம்பத்யம் தடை படாது:

ஒருமுறை இளம்பெண் ஒருவர், வலிப்பு பிரச்னைக்காக என்னிடம் சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு திருமணம் ஆன மூன்றாம் நாளே அவரது கணவர், அந்தப்பெண்ணுக்கு வலிப்பு நோய் இருப்பதை தெரிந்து கொண்டு பிரிந்து சென்று விட்டாராம். இதுபோல் நிறைய இளம்பெண்களின் மண வாழ்க்கை முறிவுக்கு வலிப்பு நோய், முக்கிய காரணமாக இருந்து வருவதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

வலிப்பு நோய், திருமணத்திற்கோ, தாம்பத்ய உறவு வைத்துக் கொள்வதற்கோ ஒருபோதும் தடை அல்ல. வலிப்பு நோய் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு, பாதுகாப்பான வலிப்பு மாத்திரைகள் உள்ளன. எனவே அவர்கள் ஆரோக்யமான, அழகான, அறிவான குழந்தையை பெற்றுக்கொள்ள முடியும்.

முன் அறிகுறிகள்:

தலை பாரம் அல்லது கணமாக இருப்பதுபோல் உணர்தல், திடீர் மயக்கம், தற்காலிகமாக சில நிமிடம் / நொடிகளில் பார்வை இழப்பு அல்லது கண் கட்டுதல், ஒரு விரல் / கை செயல் இழத்தல், கண நேரம் ஞாபக மறதி ஏற்படுதல், கண நேரத்தில் காட்சிகள் இரட்டை இரட்டையாக தெரிதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மூளை நரம்பியல் துறை மருத்துவர்களை அணுகி பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

சில நேரங்களில் பல நிறங்களில் ஏதோ ஒரு உருவம் வந்து வந்து மறைந்து போகும், சில நேரங்களில் அழுகிய முட்டையின் வாசனை அல்லது நறுமணத்தை உணர முடியும், கண நேரம் தானாகவே சிரித்தல் அல்லது கோபப்படுதல், அதிரடியாக செயல்பட்டு பொருட்களை உடைத்தல் போன்ற அறிகுறிகள் தெரிந்தாலும் உடனடியாக மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

எவ்வளவு நீடிக்கும்?:

பொதுவாக வலிப்பு, 5 முதல் 30 நிமிடம் வரை நீடிக்கும். பிறகு, தானாகவே சரியாகி விடும். வலிப்பின்போது கை, கால் வெட்டி வெட்டி இழுக்கும். நினைவு இழப்பு ஏற்படும். வாயில் நுரை தள்ளும். அதுபோன்ற நேரங்களில் வலிப்பு வந்தவர்கள் நாக்கை கடித்துக்கொள்ளும் அபாயமும் உண்டு.

வலிப்பு ஏற்பட்டு கீழே விழும்போது, அவர்களுக்கு காயம் ஏற்படவும் கூடும். சிலருக்கு அதிகப்படியான வியர்வையுடன், தானாகவே மலஜலம் வெளியேறுவதும் உண்டு. வலிப்பு வந்த பின் சுமார் 30 நிமிடங்கள் வரை தலைவலி, கை, கால் பலகீனமாகவும் இருக்கும்.

கட்டுப்படுத்தலாம்:

மூளையில் மின் அலைகள் ஓடிக்கொண்டே இருக்கும். அந்த மின்சார ஓட்டத்தில் திடீரென்று ஏற்படும் மாறுதல் காரணமாகவே வலிப்பு ஏற்படுகிறது என்பதை நாம் முன்பே பார்த்தோம். அதனால் வலிப்பு வந்த பலர், மூளையில் ஏதேனும் கட்டிகள் இருக்குமோ என அஞ்சுகின்றனர். அந்த அச்சம் தேவையில்லை. வலிப்பு உள்ளவர்களில் 90 சதவீதம் பேருக்கு மூளையில் கட்டிகள் இல்லை என்பதே ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

ஆரம்ப நிலையில் கண்டறிந்து, 3 முதல் 5 வருடங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் வலிப்பு நோய் முற்றிலும் கட்டுக்குள் வந்துவிடும். தொடர்ந்து 3 ஆண்டுக்கு மருத்துவர்கள் கூறும் மருந்து, மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். ஒருவேளைகூட மாத்திரைகளை நிறுத்தக்கூடாது.

இது ஒரு சின்ன வியாதிதான். எதையுமே கவனிக்காமல் விடும்போதுதான் மரணம் வரை செல்ல நேரிடுகிறது. அதற்கு வலிப்பும் விதிவிலக்கு அல்ல. எனினும் வலிப்பு வியாதி, வாழ்க்கைக்கு தடை அல்ல.

எச்சரிக்கை:

நடுரோட்டில் வலிப்பு வரலாம், கிணறு உள்ளிட்ட நீர்நிலைகள் அருகில் வலிப்பு ஏற்படுதல், வண்டி ஓட்டும்போது வலிப்பு ஏற்படுதல், அரிவாள்மனை, அடுப்பு, கூர்மையான ஆயுதம், கரடுமுரடான கல் ஆகியவற்றின் அருகில் வலிப்பு ஏற்படுதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவரின் உடலில் மேலும் காயங்கள் ஏற்படும். அதனால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து, மாத்திரைகளை சாப்பிடாமல் விட்டுவிடக்கூடாது.

செய்ய வேண்டியது…

வலிப்பு நோய் உள்ளவர்கள் குறைந்தபட்சம் 8 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும். எல்லா வகை உணவுப்பொருட்களையும் சாப்பிடலாம். திருமணம் செய்து கொள்ளலாம். குழந்தை பெற்றுக்கொள்ளலாம். வேலைக்கு போகலாம்.

செய்யக்கூடாதது…

கண்டிப்பாக டி.வி. பார்க்கக் கூடாது. இரவு நேர சினிமா காட்சிக்கு செல்லக்கூடாது. பட்டினி, விரதம் இருக்கக் கூடாது. ஒருபோதும் மது அருந்துதல் கூடாது. மது, மூளையைத் தூண்டிவிட்டு, வலிப்பின் வேகத்தை அதிகப்படுத்தி விடும்.

உலகம் முழுவதும்…

எபிலெப்ஸி ஃபவுண்டேஷன், வலிப்பு நோய் தாக்கம் குறித்து சில புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது…
உலகம் முழுவதும் 6.50 கோடி பேர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 30 லட்சம் பேருக்கு வலிப்பு நோய் உள்ளது.

1000ல் 4 பேருக்கு…

வலிப்பு நோய் உள்ள மூன்று பேரில் ஒருவருக்கு சிகிச்சை அளித்தும் கட்டுப்படுத்த முடியவில்லை. 10ல் 6 பேருக்கு வலிப்பு நோய்க்கான காரணங்களை கண்டறிய முடியவில்லை. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 8 – 17 சதவீதம் பேர், வலிப்பு நோயால் மரணம் அடைகின்றனர். இந்தியாவில், (2013 நிலவரம்) 1.20 லட்சம் பேருக்கு வலிப்பு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

மருத்துவரை தொடர்பு கொள்ள: 99523 86761, 0427-2266889.