Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

இந்த உசுரே உனக்காகத்தான்… படைச்சானே சாமிதான்…! காதலுடன் தமிழர் வாழ்வியல் பேசும் சிட்டான் குருவி!!

இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் தென்றலோடும் தெம்மாங்கு பாடல்களோடும் மண்மணம் கமழ வெளியான படம்தான், ‘புது நெல்லு புது நாத்து’. 1991ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி இந்தப் படம் வெளியானது.

சுகன்யா, ராகுல், நெப்போலியன், பொன்வண்ணன், ராம் அர்ஜூன், ருத்ரா உள்ளிட்ட முதன்மைப் பாத்திரத்தில் நடித்தவர்கள் அனைவரும் இந்தப் படத்திற்கு புதிய நாற்றுகள்தான்.

பாரதிராஜவின் ஆஸ்தான இசையமைப்பாளரான இளையராஜாதான் இந்தப் படத்திற்கும் இசை. கங்கை அமரன், முத்துலிங்கம் ஆகியோருடன் இணைந்து இளையராஜாவும் இந்தப் படத்திற்காக சில பாடல்களை எழுதி இருக்கிறார்.

படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் ஹிட் அடித்தன. அதிலும், கங்கைஅமரன் எழுதிய, ‘சிட்டான் சிட்டான் குருவி உனக்குத்தானே…’ என்ற பாடல், அந்தக் காலக்கட்டத்தில் திருவிழாக்கள், கல்யாண வீடுகள், விருந்து விழாக்கள் என ஒலிக்காத இடமே இல்லை. பேருந்து பயணத்தின் ‘பிளே லிஸ்டில்’ இந்தப் பாடல் இல்லாமல் இருக்காது.

தமிழர்களின் வாழ்வியல்,
கலாச்சாரம், பண்பாட்டை
அறிந்து கொள்ள வேண்டுமானால்
பாரதிராஜா, இளையராஜா, கவிஞர் வைரமுத்து
ஆகியோரின் திரைப் படைப்புகளை
ஆதார ஆவணமாகவே கொள்ளலாம்.
தமிழ்நாட்டு கிராமங்களின்
குறுக்குவெட்டுத் தோற்றத்தையும்,
அங்குள்ள மக்களின் நட்பு, வீரம், காதல், பகை
எல்லாவற்றையும் இவர்களின்
படைப்புகள் பேசின.

இந்தப் படத்தில் எஸ்.ஜானகி, மனோவின் குரல்களில் ஒலிக்கும் ‘சிட்டான் சிட்டான் குருவி உனக்குத்தானே…’ என்ற பாடல் இளையராஜவின் இன்னொரு மாஸ்டர் பீஸ். இயக்குநர், இசைக்கலைஞர்கள், ஒளிப்பதிவாளர் ஆகியோரின் கூட்டணிக்கு முழுமையான வெற்றி கிடைத்த சில பாடல்களில் ‘சிட்டான் சிட்டான் குருவியும்…’ ஒன்று. இந்தப் பாடலின் ஊடாக ஒரு கிராமத்தின் அழகியல், கலாச்சாரம், தொழில், காதல் என மொத்த தமிழர்களின் தற்சார்பு வாழ்வியலும் காட்சிப் படுத்தப்பட்டு இருக்கும்.

கட்டினால் முறை மாமனைத்தான் கட்டிக்குவேன் என பிடிவாதமாக இருக்கும் நாயகி கிருஷ்ணவேணி (சுகன்யா), தன் காதலையும், அவனுக்காகவே ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் ஏக்கத்தையும் சொல்வதுதான் பாடலின் சூழல். நாயகனோ (ராகுல்), தன் தாயின் லட்சியத்தை நிறைவேற்றிவிட்டுதான் திருமணம் செய்து கொள்வது என்ற முடிவில் இருக்கிறான். நாயகியின் ஆசைக்கு அவன் பதில் கூறும் விதமாகவும் பாடல் புனையப்பட்டு இருக்கும்.

‘சிட்டான் சிட்டான் குருவி
உனக்குத்தானே…
சிறு பட்டாம் பட்டாம் பூச்சி
பழகத்தானே…’

என்று பாடியபடியே, களத்துமேட்டில் நெற்கதிரடித்துக் கொண்டிருக்கும் முறை மாமனைக் காண நாயகி துள்ளளுடன் ஓடி வருகிறாள். இந்தப் பாடலில் சுகன்யாவின் நடிப்பும், உணர்வு வெளிப்பாடுகளும் புதுமுக நாயகி என்று சொல்லிவிட முடியாதபடி அத்தனை இயல்பானதாக இருக்கும்.

பாடலின் துவக்கத்தில் வரும் ‘பிரிலூட்’ இசையில் முதன்மையாக இழையோடும் புல்லாங்குழல், தபேலா, கீபோர்டு ஆகிய வாத்தியங்களின் தாளக்கட்டும், கோரஸூம் பாடலுக்குள் திரை ரசிகனை அதன் போக்கில் இயல்பாக இழுத்துச் சென்று விடுகின்றன.

பல்லவிக்குப் பிறகு முதல் சரணம் தொடங்குவதற்கு முன்பாக வரும் முதல் இடை இசையில் (இன்டர்லூட்) வயலினும், குழலும் தீவிரத்தன்மையுடன் ஒலிக்கின்றன. அத்துடன் தொடர்ந்து பயணிக்கும் தபேலாவும், சரணத்திற்கு முன்பாக சில நொடிகள் வரும் பேஸ் கிடார் இசையும் ரசிகனை கைப்பிடித்து அழைத்துச் செல்கின்றன.

இசைஞானியின் நுணுக்கம் இப்படி என்றால்,
மற்றொருபுறம் இயக்குநரும், ஒளிப்பதிவாளரும்
வயலில் நெல் அறுப்பதில் தொடங்கி
நெற்கட்டுகளை களத்துமேட்டிற்குக்
கொண்டு வந்து கதிரடித்து,
மாட்டு வண்டிகளில் நெல் மூட்டைகளை
ஏற்றிக்கொண்டு செல்வது வரை
காட்சிப் படுத்தி இருப்பார்கள்.
யானைகட்டிப் போரடித்தக் காலம் மாறி,
மாடு கட்டிப் போர் அடித்தக் காட்சியும்
இந்தப் பாடலில் இடம் பெற்றிருக்கும்.
விளை நிலங்கள் ரியல் எஸ்டேட் மனைகளாக
திரிந்து போகாத காலம் அது.

இந்தக் காட்சியின் ஊடாக, நெல் அறுக்க வந்த பெண் தொழிலாளிகள் ஆடிப்பாடியபடி மூங்கில் கூடைகளைச் சுமந்து செல்லும் காட்சியும் இடம் பெற்றிருக்கும். அந்த கூடைகளை, நடனக் கலைஞர்கள் ஏதோ காட்சிக்கான பிராப்பர்ட்டி ஆக பயன்படுத்தி இருக்கலாம் என்று பலரும் கருதக்கூடும். அந்தக் கூடையின் பின்னால், உழைக்கும் வர்க்கத்தின் கூலி, உழைப்பு, வியர்வை என பொருளாதார தத்துவமே அடங்கி இருக்கிறது.

இந்தியாவில் 1991-1996 பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் மன்மோகன் சிங், நிதி அமைச்சராக இருந்தார். அந்தக் காலக்கட்டத்தில்தான் இந்தியா, புதிய பொருளாதாரக் கொள்கையை நோக்கி நகரத் தொடங்கியது. தாராளமயக் கொள்கை அமலுக்கு வருவதற்கு முன்பே ‘புது நெல்லு புது நாத்து’ படம் வந்துவிட்டது.

அப்போதெல்லாம் நெல் அறுக்கச் சென்றால், நில உடைமையாளர்கள் கூலியாக பணம் தர மாட்டார்கள். தலைக்கு ஒரு வல்லமோ இரண்டு வல்லமோ நெல்தான் கூலியாக வழங்குவார்கள். அப்படி கூலியாகப் பெற்று வந்த நெல்மணிகளை, கொதிநீரில் வேக வைத்து, அதை நிழலில் உலர்த்தி, பின்னர் ஆலையில் அரைத்து அரிசியாக்கி உணவுத் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

திருவிழா, குலதெய்வ வழிபாடு, விருந்தினர் வருகையின்போது இந்த அரிசியைத்தான் பயன்படுத்திக் கொள்வார்கள், விவசாயக் கூலிகள். இப்படி கூலியாகக் கிடைத்த நெல்லைதான், இந்தப் பாடலின்போது கூடைகளில் கொண்டு செல்கின்றனர். தாராளவாதம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியபிறகு, விவசாய உற்பத்திப் பொருட்கள் கூலியாக வழங்கப்படுவதும், பண்டமாற்ற கலாச்சாரமும் வழக்கொழிந்து, எல்லாவற்றுக்கும் ஈடாக பணம்தான் ஒரே மாற்று என்று உருவானது.

முதல் இடையிசைக்குப் பிறகான தொடங்கும் முதல் சரணம், நாயகன் தன் முறைப்பெண்ணுக்கு பதில் சொல்லும் விதமாக எழுதியிருப்பார் கங்கை அமரன்.

‘வசியம் போட்டுப் புடிச்சிப் பாரு
அடிச்சா லக்கி பிரைஸூதான்…
மசிஞ்சா நானும் ஆம்பள இல்ல
புடிச்சா புளியங் கொம்புதான்…’

என்கிறான் நாயகன். ஆனாலும் தன் முடிவில் தீர்மானமாக இருக்கும் நாயகி,

‘முத்தாலம்மா சத்தியமா
முந்தானைக்கு நீதானய்யா…
வித்தாரமா பத்தியமா
எம்மனசு தாங்காதய்யா…’

என பதிலடி கொடுப்பாள்.

அத்துடன் நில்லாமல்,

‘உசுரே உனக்காகத்தான்
படைச்சானே சாமிதான்…
இந்த உசுரே உனக்காகத்தான்
படைச்சானே சாமிதான்…’

என்று மாமன் மீது காதலால் உருகுகிறாள் நாயகி. உண்மையில், நாயகிக்கு பின்னணி பாடிய எஸ்.ஜானகி அவர்கள், இந்த இடத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஒரு நொடியில் வசியம் செய்து விடுகிறார். ‘எஸ்.ஜானகியின் குரலே நமக்காகத்தான் படைச்சானே சாமிதான்…’ எனலாம்.

களத்துமேட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட புது நெல், புத்தரிசியாகி முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் புதுப்பானையில் பாலுடன் பொங்கலாக பொங்கி வழிகிறது. அத்துடன், முறை மாமன் மீது நாயகி கொண்ட காதலும் பொங்கி வழிகிறது என்பதை இயக்குநர் காட்சி மொழியாக ரசிகனுக்குக் கடத்தி விடுகிறார்.

ஆனாலும் விடாப்பிடியாக இருக்கும் நாயகி, திருவிழாவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மரக்குதிரை வாகனத்தின் மீது ஏறி, நாயகனை விரட்டிச் செல்கிறாள். தன் முறை மாமன் மேலும் காலம் கடத்தி விடக்கூடாது என்பதற்காக, மாமனை எப்படியாவது ஒத்துக் கொள்ள வைக்க வேண்டும் என்ற அதீத ஆசையால் காதல் கயிறுடன் விரட்டிச் செல்கிறாள்.

‘எட்டு ஊரு பஞ்சாயத்தில்
நானும் நியாயம் கேட்கவா…
கிட்ட வந்து உன் கையால
நானும் தாலி ஏற்கவா…
உசுரே உனக்காகதான்
படைச்சானே சாமிதான்…’

என மீண்டும் மீண்டும் அழுத்தமாக தன் காதலை பதிவு செய்கிறாள் நாயகி. ஒருவழியாக இறுதியில் நாயகன், நாயகின் காதலை ஏற்றுக் கொள்கிறான்.

இந்த இடத்தில் பாடலின் இரண்டாவது இடைஇசை (இன்டர்லூட்) தொடங்குகிறது. குதிரை சவாரிக்கு ஏற்ற தனித்துவமான தாளக்கட்டை ஒலிக்கச் செய்யும் இசைஞானி, இடை இடையே கடம் சிங்காரி (கஞ்சிராவாகவும் இருக்கலாம்), குழல், பேஸ் கிட்டார் மூலம் ஓர் இசை ராஜாங்கத்தையே நடத்தி இருப்பார்.

சுகன்யா ஏறிச்செல்லும் அந்த மரக்குதிரை
வயல்வெளி, பாறை, காடு, மலைகளை எல்லாம்
கடந்து ஆற்றங்கரை மணலிலும் பயணிக்கும்.
சி.ஜி. தொழில்நுட்பம் வளர்ச்சி அடையாத
காலக்கட்டத்தில் பாரதிராஜா,
மரக்குதிரையை வைத்து இப்படியான
ஒரு மேஜிக்கை நிகழ்த்திக்
காட்டியிருப்பார்.

வெள்ளை உடை அணிந்த தேவதைகளும்,
ஆற்று நீரில் நீந்தி வரும் வண்ணமயமான
ஒலிபெருக்கிகளும், கடற்கரை மணலில்
வானத்தையே எட்டிப்பிடிக்க முயலும்
இசைக்கலைஞனின் கற்பனையும்
பாரதிராஜாவுக்கே உரிய டெம்ப்ளேட் ரகம்தான்.
என்றாலும், இந்த சிட்டான் குருவியின்
மரக்குதிரை சவாரி ஒருபடி கூடுதலாகவே ரசிக்கும்படியாக இருக்கிறது.

தாமிரபரணி ஆற்றில் ஆண்களும்,
பெண்களும் திறந்தவெளியில் நீராடுகின்றனர்.
பெண்களிடம் தவறான சேட்டைகளில்
ஈடுபடாத கிராமத்து ஆண்களின் நாகரீகத்தையும்
இந்தப் பாடலின் ஊடாக பதிவு
செய்திருப்பார் இயக்குநர்.

கால வெளிகளைக் கடந்தும் ரசிக்கும்படியான பாடல்களின் பட்டியலில் இந்த சிட்டான் சிட்டான் குருவிக்கும் தனித்த இடம் உண்டு. இந்தப் பாடல், ஒரு வெள்ளந்திப் பெண்ணின் காதலையும் ஏக்கத்தையும் மட்டும் சொல்லிச் செல்லவில்லை. அதன் வழியாக, தமிழர்களின் வாழ்வியலையும் பாடுகிறது இந்த சிட்டான் குருவி.

 

– பேனாக்காரன்

Leave a Reply