Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

”இயற்பியல் இல்லாமல் வாழ்க்கையே கிடையாது!”; சொல்கிறார் ஹரீஷ் பாண்ட்யா!!

”நம் வாழ்க்கையில் எந்த ஒரு செயல்பாட்டிலும் இயற்பியல் கோட்பாடுகள் பொதிந்திருக்கின்றன. உண்மையில், பலர் கருதுவதுபோல் இயற்பியல் ஒன்றும் அத்தனை கடினமான பாடமும் அல்ல,” என்கிறார் பேராசிரியர் ஹரீஷ் எம் பாண்ட்யா.

சேலம் இயற்பியல் ஆசிரியர்கள் சங்கம், அறிவியலை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்த ஆசிரியர்களிடம், குறிப்பாக இயற்பியல் ஆசிரியர்களிடையே இயற்பியல் துறையில் ஏற்பட்டுள்ள நவீன வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அவர்கள் மூலமாக மாணவர்களுக்கு இயற்பியல் மீதான ஆர்வத்தை வளர்ப்பதுதான் உள்ளார்ந்த நோக்கம்.

ஹரீஷ் எம் பாண்ட்யா

சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களான ஆசிரியர்கள் ராஜரத்னம், வெங்கடேசன், அருளானந்தம் ஆகியோர் முதல்கட்டமாக சேலம் மாவட்டத்தில் உள்ள இயற்பியல் ஆசிரியர்கள், அறிவியல் ஆர்வலர்களுக்காக மாதந்தோறும் பயிற்சி பட்டறையை நடத்தி வருகின்றனர். இயற்பியல் துறை பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் கலந்து கொண்டு அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

சேலத்தில் இன்று (டிசம்பர் 17, 2017) நடந்தது இரண்டாவது பயிற்சிப் பட்டறை. திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி இயற்பியல் துறைத்தலைவரும், இணை பேராசிரியருமான ஹரீஷ் எம் பாண்ட்யா, இன்றைய பயிற்சி பட்டறையின் சிறப்பு விருந்தினர். நோபல் பரிசு வென்ற இயற்பியலாளர்களின் கண்டுபிடிப்புகள், அவர்கள் சந்தித்த சவால்கள் மற்றும் அவர்களைப் பற்றிய சின்னச்சின்ன சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

ஓர் இடைவேளையில் அவரிடம் பேச நேர்ந்தது. அப்போது அவர் கையில் ஒரு காபி கோப்பை இருந்தது. அந்த காபிக்கும் இயற்பியலுக்குமான தொடர்பை விளக்கியது துறையில் அவருடைய அனுபவத்தை பறைசாற்றியது.

”நம் வாழ்க்கையில் எந்தெந்த இடங்களில் இயற்பியல் இருக்கிறது என்பதைவிட, எந்த இடத்தில்தான் இயற்பியலின் பயன்பாடு இல்லை என்று கேட்கலாம். அந்தளவுக்கு எல்லா செயல்பாடுகளிலும் இயற்பியல் தத்துவங்கள் பொதிந்திருக்கின்றன.

உதாரணமாக, நாம் இப்போது காபி குடிப்பதேகூட நியூட்டன் சொன்ன ஈர்ப்பு விசைக்கு எதிரான நடவடிக்கைதான். இது ஒரு சூடான காபி. அதன்மூலமாக காபி என்ற பருப்பொருள், அதன் ஊடாக வெப்ப ஆற்றல், காபியின் நிறம் அறிய ஒளி இப்படி மூன்று இயற்பியல் செய்திகளை இதன்மூலம் அறியலாம்.

பலர், இயற்பியல் பாடம் என்றாலே ரொம்ப கடினமானது என்று கருதுகின்றனர். ஆசிரியர்களிடம் இருந்துகூட அப்படி ஓர் எண்ணம் வந்திருக்கலாம். ஆனால், முன்புபோல் அல்லாமல் இன்றைக்கு இயற்பியல் ஆசிரியர்களிடம் துறை தொடர்பான அறிவு நன்றாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. அவர்களும் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்.

இணையத்தில் தேடினாலே தெரிந்து கொள்ள முடியும் அளவுக்கு தொழில்நுட்ப வளர்ச்சியும் உதவுகிறது.

ஒரு பாடத்திட்டத்தில் 10 விதமான பரிசோதனைகள் இருக்கின்றன என்றால் அதற்குத் தேவையான உபகரணங்கள், ஆய்வுக்கூட வசதிகளுக்கும் அரசு தாராளமாக நிதி ஒதுக்குகிறது. ஆனால், அரசுப் பள்ளிகள் அதை முழுமையாக பயன்படுத்துகின்றனவா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

ஓர் இயற்பியலாளரால் பலதுறை சார்ந்த அறிவையும் பெற்றிருக்க முடியும். எங்கள் கல்லூரியில் பொருளாதாரத்தையும் இயற்பியலையும் ஒருங்கிணைத்து எகோஃபிசிக்ஸ் என்ற புதிய துறையைக்கூட தொடங்கி இருக்கிறோம்,” என்றார் ஹரீஷ் எம் பாண்ட்யா.

இதைத் தொடர்ந்து, கருத்தரங்கின் இரண்டாவது அமர்வு தொடங்கியது. இயற்பியல் வேடிக்கையானதும்கூட என்றார். அதை அவர் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டின் மூலம் சொன்னது ரொம்பவே சுவாரஸ்யமாக இருந்தது.

ஆற்றல் (Energy), நிறை (Mass), வெளி (Space), காலம் (Time) ஆகிய நான்கும்தான் இந்த உலகத்தின் மொத்த இய க்கத்திற்கும் முக்கியமான கூறுகள். இதுதான் நியூட்டனின் தத்துவம். ஆனால், அதை ஐன்ஸ்டீன் வேறு வகையில் முறியடிக்கிறார்.

நிறையை எரித்தால் ஆற்றல் கிடைக்கிறது என்பதால் ஆற்றலையும் நிறையையும் ஐன்ஸ்டீன் ஒரே கூறாக பார்க்கிறார். வெளியும் காலமும் வேறு வேறு அல்ல என்பதால் அவை இரண்டையும் ஒரே கூறாக கருதுகிறார்.

ஆக, அறிவியல் என்பது முடிவான ஓர் உண்மையை வெளிப்படுத்துவது என்று நாம் புரிந்து கொண்டிருப்பது உண்மையே அல்ல. இன்றைக்கு கிடைத்திருக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில் அறிவியல்பூர்வமான ஒரு முடிவுக்கு வருகிறோம். அந்த முடிவும், கருத்தியலும் நாளைக்கு வேறு விதமாகக்கூட மாறலாம் என்கிறார் ஹரீஷ் எம் பாண்ட்யா.

எரிந்து கொண்டிருக்கும் ஒரு ஸ்டவ் அடுப்பின் மீது நம் கையை ஒரு நிமிடம் வைத்திருந்தாலே, அது ஒரு மணி நேரம் வைத்திருந்ததுபோல் உணர்வோம். அதேநேரம், மனசுக்கு பிடித்த ஒரு பெண்ணுடன் ஒரு மணி நேரம் செலவிட்டால்கூட அதை ஒரு நிமிடமாக உணர்கிறோம்.

இப்படி உலகில் இருக்கும் எல்லா செயல்களும் ஒன்றையொன்று சார்ந்துதான் இருக்கிறது என்ற ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை வேடிக்கையாக குறிப்பிட்டார் அவர்.

சர்.சி.வி.ராமன், இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர் என்பதை நம்மில் பெரும்பான்மையினர் அறிவோம்.

ஆனால், அவர் ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை எனில் அந்த வார்த்தையை அடிக்கோடிடுவதை வழக்கமாக வைத்திருப்பாராம். அந்த சொல்லுக்கு அர்த்தம் தெரியும் வரை அவர் அடுத்த பக்கத்தைக்கூட புரட்ட மாட்டாராம்.

ஹரீஷ் எம் பாண்டியாவுடன் ஒருங்கிணைப்பாளர்கள் ராஜரத்தினம் (இடது), வெங்கடேசன் (வலது).

அவருக்குப் பிறகு இந்தியர்கள் இதுவரை நோபல் பரிசு பெறாதது குறித்து வருத்தம் தெரிவித்தார் சிறப்பு விருந்தினர். சி.வி.ராமன் போல படிப்பதாக இருந்தால் நாமெல்லாம் புத்தகமே படிக்க மாட்டோம் என்ற அவர், யுஎஸ்ஏவில் ஒருவர் ஆண்டுக்கு சராசரியாக 800 பக்கங்களை படிக்கிறார். ஆனால் இந்தியர்கள் சராசரியாக 36 பக்கங்களே வாசிப்பதாகவும் கூறினார்.

நோபல் பரிசு பெற்ற பல விஞ்ஞானிகள் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல்தான் ஆராய்ச்சியை மேற்கொண்டனர். பலர் தங்கள் வீடுகளிலேயே ஆராய்ச்சிப்பணிகளைச் செய்தனர் என்றார்.

நியூட்டன், ஐன்ஸ்டீன், சி.வி.ராமன் மட்டுமின்றி ஹெய்சன்பர்க், ஜேம்ஸ் கிளெர்க் மேக்ஸ்வெல், நீல்ஸ் போர், ஜே.ஜே.தாம்சன், ரூதர்ஃபோர்டு, சாட்விக், கெல்வின், மைக்கேல்சன் உள்ளிட்ட பல இயற்பியலாளர்கள் பற்றியும் அவர்களின் கண்டுபிடிப்புகள் குறித்தும் பேசினார்.

சிறப்பு விருந்தினர் பற்றி:

சிறப்பு விருந்தினரான ஹரீஷ் எம் பாண்ட்யா, 22 ஆண்டுகளாக கல்லூரிக்கல்வித்துறையில் பணியாற்றி வருகிறார். ஏற்கனவே 2 பிஹெச்டி முனைவர்களை உருவாக்கியுள்ள அவர், இப்போது 6 பிஹெச்.டி., ஆராய்ச்சியாளர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார்.

தவிர, 17 எம்.ஃபில்., ஆராய்ச்சியாளர்களை உருவாக்கி இருக்கிறார். மேலும், நடுவண் அரசின் டிஆர்டிஓ துறைக்கு தேவையான முக்கியமான ஒரு சென்சார் உபகரணத்திற்கான திட்டத்தில் இவருடைய துறை வெற்றிகரமாக செயல்பட்டு உள்ளதுடன், அதற்காக ரூ.25 லட்சம் திட்ட நிதியையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புக்கு: 98943 36750.

– இளையராஜா எஸ்.