Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

”எங்களை உசுரோட கொளுத்திட்டு நிலத்தை எடுத்துட்டுப் போங்கடா…!”: எட்டு வழிச்சாலை நில அளவீட்டின் கடைசி நாள் பதிவுகள்!!#எட்டு வழிச்சாலை

‘எடப்பாடி பழனிசாமி மீது சாபம்’, ‘விஷம் கொடுத்து கொன்று விடுங்கள்’, ‘உயிரோடு கொளுத்திவிட்டு நிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள்…’ என சேலம் – சென்னை எட்டு வழிச்சாலைக்கான நிலம் அளவீட்டுப் பணிகளின் கடைசி நாளான இன்று, பல்வேறு உணர்ச்சிகரமான போராட்டங்களுடன் முடிந்தது.

 

சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை 10 ஆயிரம் கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

 

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் ஊடாக பசுமைவழி விரைவுச்சாலை அமைகிறது. 277.3 கி.மீ. தொலைவுக்கு இந்த சாலை போடப்படுகிறது.

 

இதற்காக மேற்சொன்ன ஐந்து மாவட்டங்களிலும் 159 கிராமங்களில் 2343 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 85 சதவீத பரப்பளவு விளைச்சல் நிலங்கள். 100 ஹெக்டேர் நிலம், வனப்பகுதியில் இருந்து எடுக்கப்பட உள்ளது.

சேலம் மாவட்டத்தில் மட்டும் 18 கிராமங்களில் மொத்தம் 248 ஹெக்டேர் பரப்பளவு நிலம் பசுமைவழி விரைவுச்சாலைக்காக ஆர்ஜிதம் செய்யப்படுகிறது. இதில், 186 ஹெக்டேர் நிலம், தனியார் பட்டாவில் உள்ளது. அரசு புறம்போக்கு நிலம் 46 ஹெக்டேர். வனப்பகுதிக்குச் சொந்தமானது 16 ஹெக்டேர் நிலம்.

 

சேலம் மாவட்டத்தில் கடந்த 18ம் தேதி நிலம் அளவீட்டுப் பணிகள் தொடங்கியது. வருவாய்த்துறை ஊழியர்கள், சேட்டிலைட் தொழில்நுட்ப உதவியுடன் நிலத்தை அளந்து முட்டுக்கல் பதித்தனர். ஒவ்வொரு 25 மீட்டர் தொலைவிலும் 70 மீட்டர் இடைவெளியில் முட்டுக்கல் நடப்பட்டது. பசுமைவழி விரைவுச்சாலையின் அகலமும் 70 மீட்டர்தான்.

”கஞ்சமலையில் இருந்து ஜிண்டால் நிறுவனம் பாக்சைட், இரும்புத் தாதுக்களை வெட்டி எடுத்து சென்னை துறைமுகத்திற்கு எளிதில் கொண்டு செல்வதற்காகவே இந்த சாலை அமைக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டம் கவுத்திமலை, வேடியப்பன் மலைகளில் இருந்தும் கனிம வளங்கள் சுரண்டப்படும் அபாயம் உள்ளது.

 

இந்த சாலையால் மக்களுக்கு பயனேதும் இல்லை. வனப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளதால், உயிர்ப்பன்மை பாதிக்கப்படும்,” என்று சமூக செயற்பாட்டாளர்கள் ஆரம்பத்தில் இருந்தே எட்டுவழி பசுமை விரைவுச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களிடமும் பரப்புரைகளை மேற்கொண்டனர்.

 

தொடர்ந்து இதுபோன்ற பரப்புரைகளை முன்னெடுத்த சூழலியல் ஆர்வலர் பியூஷ் மானுஷ், நடிகர் மன்சூர் அலிகான், இயற்கை பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் வளர்மதி ஆகியோரை அடுத்தடுத்து காவல்துறையினர் கைது செய்தனர். மக்கள் மத்தியில் பிரபலமானவர்களே கைது செய்யப்பட்டு ஜாமின் பெற முடியாமல் தவித்துப் போனதால், சாமான்ய மக்களும் அச்சத்தில் ஆழ்ந்து போனார்கள்.

 

இதனால் பரவலாக மக்கள் வெகுண்டு எழாமல் போனாலும், உள்ளுக்குள் எடப்பாடி பழனிசாமி அரசின் மீதும், காவல்துறையினர் மீதும் குமைந்து கொண்டே இருந்தனர். ஏதுமற்ற விவசாயிகள் மட்டும் ஆங்காங்கே தரையில் படுத்து புரண்டு ஆர்ப்பாட்டமும், மண்ணெண்ணெய் கேன்களுடன் தற்கொலை மிரட்டல்கள் மூலமாகவும் எதிர்ப்பு காட்டினர்.

 

இதையெல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யாத காவல்துறையினர் 75 வயதான உண்ணாமலை என்ற மூதாட்டியைக் கூட குண்டுகட்டாக தூக்கிச்சென்று சிறைக்குள் தள்ளினர்.

 

இந்த களேபரங்களுக்கு மத்தியில், கடந்த 22ம் தேதியன்று சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி, நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு கிடைக்கும் இழப்பீடுகளை அறிவித்தார்.

 

ஒரு ஹெக்டேர் நிலத்திற்குக் குறைந்தபட்சம் 21 லட்சமும், அதிகபட்சம் 9.04 கோடி ரூபாயும் இழப்பீடு கிடைக்கும் என்றார். நிலத்திற்கு மட்டுமின்றி, பறிபோகும் மர வகைகளுக்கும், வீ டுகளுக்கும்கூட இழப்பீடு வழங்கப்படும் என சலுகை மழை பொழிந்தார். இந்த அறிவிப்பால், நில எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாமா வேண்டாமா என்ற ஊசலாட்டத்தில் இருந்த விவசாயிகள் மட்டும் கொஞ்சம் அடங்கிப் போனார்கள்.

சேலம் மாவட்டத்தில் 36.3 கி.மீ. தொலைவுக்கு பசுமைவழி விரைவுச்சாலை அமைகிறது. கடந்த 23ம் தேதி வரை 30 கி.மீ. தொலைவுக்கு நிலம் அளவீட்டுப் பணிகள் முடிக்கப்பட்டு இருந்தது.

 

இந்த நிலையில், நில அளவீட்டுப் பணிகளின் கடைசி நாளான இன்று (ஜூன் 25, 2018) உத்தமசோழபுரம், அரியானூர், பூலாவரி, புஞ்சைக்காடு, அக்ரஹாரம், சித்தனேரி ஆகிய கிராமங்களில் நிலம் அளக்கும் பணிகள் நடந்தது.

 

முன்னாள் அமைச்சர் மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா, அவருடைய உறவினர் சேகர், டிடிவி தினகரன் அணியில் உள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே. செல்வம் உள்ளிட்ட பிரபலங்கள் நிறைந்த பகுதி என்பதால், ஏதேனும் விவகாரங்கள் எழலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் உதவி கமிஷனர்கள் ஈஸ்வரன், ராஜகாளீஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

 

பூலாவரி புஞ்சைக்காடு கிராமத்தில் மட்டும் கொஞ்சம் சலசலப்புகள் ஏற்பட்டன.

 

இந்த கிராமத்தைச் சேர்ந்த தனம் என்ற மூதாட்டி குடியிருந்து வரும் ஒற்றை வீடும் பசுமைவழி விரைவுச்சாலைக்கு இரையாகிறது. அதனால் மனம் நொந்து போன அந்த மூதாட்டி, ”இந்த ஒரு வீடுதான் இருக்கு. கடன் வாங்கி கட்டினோமே….இத நம்பித்தானே இருக்கேன்…இதையும் எடுத்துக்கிட்ட நான் எங்க போவேன்…,” என்று அதிகாரிகளைப் கையெடுத்துக் கும்பிட்டபடி கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

 

அதே பகுதியைச் சேர்ந்த பெருமாயி, அவருடைய கணவர் பெருமாள் ஆகியோரும் நிலம் எடுப்பு க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

”வீடு இல்ல… காடு இல்ல… நாங்க எங்கதான் போறது. எல்லாரும் நிலம் கொடுக்க ஒத்துக்கிட்டாங்கனு முதல்வர் பொய் பேசுறாப்ல…. கலெக்டரும் பொய் பேசுறாப்ல… நாங்க 40 வருஷமாக இங்கதான் இருக்கோம்.

 

வாழ்வாதாரம் எதுவுமே கிடையாது. வூடும் காடும் அனாமத்தா போவுது. திடீர்னு வந்து காலி பண்ணச் சொன்னா எங்க போவோம்… எங்களுக்கு மருந்து வெச்சி கொன்னுப்புட்டு எடுத்துப் போங்க… எம்ஜிஆர்கூடதான் ஆண்டாரு. இந்த மாதிரியெல்லாம் அவர் அராஜகம் பண்ணல. எம்ஜிஆர் இருந்திருந்தா இப்படி செய்வாரா… மக்களுக்கு வேணுங்கிறதுதான் செய்வாரு…

அய்யோ சாமி…. இந்த மாதிரி பண்றாங்களே…இந்த எடப்பாடி…..அம்மா…வவுத்துக்கே கஞ்சி குடிக்க முடியல…. நாங்க எங்க போயி வீடு வாங்கறது… ஏழைகள விலை கொடுத்து வாங்கிட்ட மாதிரி அடிமையா நடத்துறாங்க. அம்மா ஆட்சி அருமையான ஆட்சிதான்… வந்து உக்காந்தவங்க சரியில்ல…

 

இப்ப இருக்கற ஆட்சியாளர்கள் அவங்க பொண்டாட்டி புள்ளைங்க மட்டும்தான் நல்லாருக்கணும்னு நினைக்கிறாங்க… சும்மா எப்படி வேணும்னாலும் ஆட்சி நடத்துனும் நினைக்கக்கூடாது… ரொம்ப அட்டகாசம் பண்றாங்க….,” என்றனர்.

 

வீடும், சொற்ப நிலமும் பறிபோவதை எண்ணி தாளாமல் பெருமாயி நெஞ்சு நெஞ்சாகவும், தலையிலும் அடித்துக்கொண்டு கதறி அழுதார். எங்களை கொன்றுவிட்டு நிலத்தையும், வீட்டையும் எடுத்துச் செல்லுங்கள் என்று புலம்பியதையும் அதிகாரிகள் காதில் வாங்கிக் கொள்ளாமல் அவர்கள் பணியில் மும்முரம் காட்டினர்.

 

புஞ்சைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மனைவி சிவகாமி, நிலம் அளக்க வந்த அதிகாரிகளின் கால்களில் விழுந்து, தன்னுடைய நிலத்தில் இருந்து வெளியேறும்படி கெஞ்சினார். தரையில் படுத்து அழுது புரண்டது எல்லோர் மனதையும் லேசாக உலுக்கி எடுத்தது.

 

”கொளுத்துங்கடா… என்னை உசுரோடு கொளுத்திட்டு நிலத்தை எடுத்துட்டுப் போங்கடா…இந்த வீடும், காடும் போகும்போது என்னை மட்டும் ஏன் உசுரோட வெச்சிட்டு போறீங்க… பணத்தை வெச்சிட்டு என்னடா பண்றது… நாங்க கல்லு போட விட மாட்டோம்…. கொளுத்திட்டு எடுத்துட்டு போங்கடா… உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா…,” என்று தரையில் படுத்து அழுது புரண்டார்.

 

இதையடுத்து, சித்தனேரி கிராமத்திற்கு நிலம் அளவீடுக்காக அதிகாரிகள் சென்றனர். இந்த ஊரைச் சேர்ந்த ரவி என்பவருக்குச் சொந்தமான 400 தென்னை மரங்கள், கிணறுகள் உள்பட 2.50 ஏக்கர் விவசாய நிலம் பசுமைவழி விரைவுச்சாலையால் பறிபோகிறது.

 

ஏற்கனவே இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு காட்டியதால் சித்தனேரியில் ஏதேனும் பிரச்னைகள் எழக்கூடும் என காவல்துறையினர் கருதினர்.

முன்பே சில இடங்களில், சிலர் மண்ணெண்ணெய் கேன்களுடன் தீக்குளிக்க முயன்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் ஒரு பை நிறைய காலி பிளாஸ்டிக் பாட்டில்களுடன் வந்த பெண்ணை மடக்கி, அந்த பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

 

பிறகு, நிலத்துக்குச் சம்பந்தமில்லாதவர்களை அளவீட்டுப் பணிகளின்போது அருகில் இருக்கக்கூடாது என மிரட்டி, எல்லோரையும் விரட்டியடித்தனர்.

 

ரவி திமுக பிரமுகர் என்பதாலும், அங்குள்ள பால் சொஸைட்டி செயலாளர் என்பதாலும், உள்ளூர் பிரபலமாக உள்ளார். அதனால் அவருடைய நிலத்தை மட்டும் இன்று அளக்காமல் அதிகாரிகள் விட்டுச் சென்றனர்.

 

ஆனால், நிலத்தின் நுழைவுப் பகுதியில் தென்னை மரத்தின் மீதும், பாறாங்கல் மீதும் பெயிண்ட் அடித்து ‘மார்க்கிங்’ செய்து விட்டுச் சென்றனர். இதையடுத்து உத்தமசோழபுரம் பகுதியில் நிலம் அளவீட்டுப் பணிகளை நிறைவு செய்தனர்.

 

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 36.3 கி.மீ தூரத்திற்கு பசுமைவழி விரைவுச்சாலை அமைகிறது. நிறைவு நாளான இன்றுடன் 32.7 கி.மீ. தூரத்திற்கு நிலம் அளந்து முட்டுக்கல் நடப்பட்டு உள்ளது. இன்னும் 3.60 கி.மீ. தொலைவுக்கு வனப்பகுதியில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இப்பணிகள் பின்னர் மேற்கொள்ளப்படும் என வருவாய்த்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

நிலம் கையகப்படுத்துவது குறித்து ஆட்சேபணை தெரிவிக்கலாம் என சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

 

அவர்கள் தங்களுடைய ஆட்சேபணையை வரும் ஜூலை 6, 10, 13ம் தேதிகளில் நடைபெறும் கூட்டத்தில் தெரிவிக்கலாம் என்று வருவாய்த்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.