Saturday, November 9மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கடைசி ஒருநாள்: இந்தியாவுக்கு 205 ரன்கள் இலக்கு; ஷர்துல் தாகூர் 4 விக்கெட்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆறாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சு காரணமாக அந்த அணி 46.5 ஓவர்களில் 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி, 205 ரன்கள் இலக்குடன் விளையாடி வருகிறது.

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்த நாட்டுடன் 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி ஏற்கனவே 4 -1 கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், 6வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் இன்று (பிப்ரவரி 16, 2018) மாலை தொடங்கி, நடந்து வருகிறது.

ஹஷிம் ஆம்லா விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியை தோனியுடன் பகிர்ந்து கொள்கிறார் சர்துல் தாகூர்.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் புவனேஷ்வர்குமாருக்கு ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர் ஷர்துல் தாகூர் சேர் க்கப்பட்டார். தென்னாப்பிரிக்கா தரப்பில் கிறிஸ் மோரீஸ், ஸோண்டோ, இம்ரான் தாகீர் ஆகியோர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டனர்.

தென்னாப்பிரிக்கா தொடக்க வீரர்கள் கேப்டன் மார்க்ராம், ஹஷிம் ஆம்லா ஆகியோர் களமிறங்கினர். நிதானமான ஆட்டத்தை தொடர்ந்த இந்த இணை, ஷர்துல் தாகூர் வீசிய 7வது ஓவரில் பிரிந்தது. அப்போது அந்த அணி 23 ரன்கள் எடுத்திருந்தது.

ஷர்துல் தாகூர் லெக் சைடில் வீசிய பந்தை ஹஷிம் ஆம்லா அடித்தபோது அது விக்கெட் கீப்பர் தோனி கையில் பிடிபட்டு, ஆட்டமிழந்தார். அவர் 19 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

அடுத்து, மார்க்ராமுடன் ஏபி டி வில்லியர்ஸ் இணைந்தார். ஷர்துல் தாகூர் வீசிய 10வது ஓவரின் 4வது பந்தில் மார்க்ராமும் வீழ்ந்தார். அவர் 30 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்கா அணியின் இரண்டு தொடக்க வீரர்களையும் ஷர்துல் தாகூர் சொற்ப ரன்களில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் நிலையான பார்ட்னர்ஷிப் அமையாததால் அதிகளவில் ரன்கள் திரட்ட முடியாமல் தடுமாறினர். அந்தளவுக்கு தொடக்கம் முதலே இந்திய வீரர்களின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது.

தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக ஸோண்டோ 54 ரன்களும் (74 பந்துகள்), பெலுக்வாயோ 34 ரன்களும் (42 பந்துகள்) எடுத்தனர். ஏபி டி வில்லியர்ஸ் 30 ரன்கள் எடுத்தார். 46.5 ஓவர்களில் அந்த அணி, 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லுங்கிசனி நிகிடி மட்டும் ரன் கணக்கை துவங்காமல், ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 205 ரன்கள் இலக்குடன் இந்திய அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.