Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கிரிக்கெட்: கடைசி ஒருநாள் போட்டியிலும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா; விராட் கோலி அபார சதம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆறாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் விராட் கோலி, ஒரு நாள் அரங்கில் 35 சதம் அடித்து அசத்தினார்.

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்த நாட்டுடன் 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இந்திய அணி ஏற்கனவே 4-1 கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ள நிலையில், 6வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் இன்று (பிப்ரவரி 16, 2018) நடந்தது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் புவனேஷ்வர்குமாருக்கு ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர் ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார். தென்னாப்பிரிக்கா தரப்பில் கிறிஸ் மோரீஸ், ஸோண்டோ, இம்ரான் தாகீர் ஆகியோர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டனர்.

தென்னாப்பிரிக்கா தொடக்க வீரர்கள் கேப்டன் மார்க்ராம், ஹஷிம் ஆம்லா ஆகியோர் களமிறங்கினர். நிதானமான ஆட்டத்தை தொடர்ந்த இந்த இணை, ஷர்துல் தாகூர் வீசிய 7வது ஓவரில் பிரிந்தது. அப்போது அந்த அணி 23 ரன்கள் எடுத்திருந்தது. ஷர்துல் தாகூர் லெக் சைடில் வீசிய பந்தை ஹஷிம் ஆம்லா அடித்தபோது அது விக்கெட் கீப்பர் தோனி கையில் பிடிபட்டு, ஆட்டமிழந்தார். அவர் 19 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

அடுத்து, மார்க்ராமுடன் ஏபி டி வில்லியர்ஸ் இணைந்தார். ஷர்துல் தாகூர் வீசிய 10வது ஓவரின் 4வது பந்தில் மார்க்ராமும் வீழ்ந்தார். அவர் 30 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்கா அணியின் இரண்டு தொடக்க வீரர்களையும் ஷர்துல் தாகூர் சொற்ப ரன்களில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் நிலையான பார்ட்னர்ஷிப் அமையாததால் அதிகளவில் ரன்கள் திரட்ட முடியாமல் தடுமாறினர். அந்தளவுக்கு தொடக்கம் முதலே இந்திய வீரர்களின் பந்துவீச்சு அபாரமாக இரு ந்தது.

தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக ஸோண்டோ 54 ரன்களும் (74 பந்துகள்), பெலுக்வாயோ 34 ரன்களும் (42 பந்துகள்) எடுத்தனர். ஏபி டி வில்லியர்ஸ் 30 ரன்கள் எடுத்தார். 46.5 ஓவர்களில் அந்த அணி, 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லுங்கிசனி நிகிடி மட்டும் ரன் கணக்கை துவங்காமல், ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 205 ரன்கள் இலக்குடன் இந்திய அணி ஆட்டத்தை தொடர்ந்தது. கடந்த போட்டியில் சதம் அடித்த ரோஹித் ஷர்மா3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்த திருப்தியில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவானும் 18 ரன்களில் வெளியேறினார். இவ்விருவரையும் தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் லுங்கிசனி நிகிடி ஆட்டமிழக்கச் செய்தார்.

அசத்தல் சதம்:

அதன்பின் மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் விராட் கோலியும், அஜின்க்யா ரஹானேவும் பொறுப்புடன் விளையாடி ரன் குவித்தனர். ஆபாரமாக விளையாடிய கேப்டன் விராட் கோலி 82 பந்துகளில் சதம் அடித்தார். ஒரு நாள் போட்டிகளில் அவருடைய 35 சதம் இதுவாகும்.

பந்து வீச்சாளர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தியும் தென்னாப்பிரிக்கா அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 32.1 ஓவர்களில் இந்தியா 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 206 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. வெற்றி இலக்குக்கான ரன்னை விராட் கோலி பவுண்டரி அடித்து முடித்து வைத்தார்.

இந்த போட்டியில் விராட் கோலி 96 பந்துகளில் 19 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 129 ரன்களை குவித்தார். அஜின்க்யா ரஹானே 50 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 5-1 கணக்கில் வென்று இந்தியா வாகை சூடியது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய இரு விருதுகளையும் விராட் கோலியே வென்றார்.

விராட் கோலி 100 கேட்ச்:

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 46வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் 4வது பந்தை அவர் ஆஃப் சைடில் வீச, தென்னாப்பிரிக்கா வீரர் இம்ரான் தாகீர் ஷார்ட் கவர் திசையில் அடித்தார். அங்கு நின்றிருந்த கேப்டன் விராட் கோலி சற்று முன்னோக்கி பாய்ந்து வந்து லாவகமாக கேட்ச் செய்தார். இதன்மூலம் அவர் 208 ஒரு நாள் போட்டிகளில் 100 கேட்சுகளை செய்த வீரர்கள் இந்திய வீரர்கள் பட்டியலில் 5வது வீரராக இடம் பெற்றார்.

இந்த பட்டியலில், 156 கேட்ச் (231 போட்டி) செய்து முகமது அஸாருதீன் முதலிடத்தில் இருக்கிறார். டெண்டுல்கர் 140 கேட்ச் (333 போட்டி), ராகுல் டிராவிட் 125 கேட்ச் (283 போட்டி), சுரேஷ் ரெய்னா 100 கேட்ச் (223 போட்டி) ஆகியோர் முறையே இரண்டு முதல் நான்காவது இடம் பிடித்துள்ளனர்.

47 நாள்களில் 500 ரன்கள்:

நடப்பு காலண்டர் ஆண்டில் 47 நாள்களில் விராட் கோலி 3 சதம் மற்றும் ஒரு அரை சதம் உள்பட மொத்தம் 500 ரன்களை எடுத்துள்ளார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் 2003ம் காலண்டர் ஆண்டில் 69 நாள்களில் 500 ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது.

சுழல் ஆதிக்கம்:

இரு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய சுழல் பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் கூட்டணி நடப்பு தொடரில் 7 போட்டிகளில் மொத்தம் 33 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். குறிப்பிட்ட ஒரு தொடரில், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழல் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்த கூட்டணி நான்காவது இடம் பிடித்துள்ளது.

முன்னதாக, ஸ்ரீலங்கா – இங்கிலாந்து தொடரில் 38 விக்கெட்டுகளும் (7 போட்டிகள், ஸ்ரீலங்கா, 2014), வங்கதேசம் – ஸிம்பாப்வே தொடரில் 37 விக்கெட்டுகளும் (5 போட்டிகள், வங்கதேசம், 2009), வங்கதேசம் – மேற்கு இந்திய தீவுகள் தொடரில் 33 விக்கெட்டுகளும் (5 போட்டிகள், 2012, வங்கதேசம்) எடுக்கப்பட்டுள்ளன.

குல்தீப் யாதவ் 17 விக்கெட்:

ஒரு குறிப்பிட்ட ஒரு நாள் தொடரில் அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்திய சுழல் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய ‘சைனாமேன்’ பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் நடப்பு தொடரில் 17 விக்கெட்டுகளை கைப்பற்றி இரண்டாம் இடத்தில் உள்ளார். 2013ல் ஸிம்பாப்வேக்கு எதிரான தொடரில் இந்திய சுழல் பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா 18 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

ஆப்கானிஸ்தான் சுழல் பந்து வீச்சாளர் ரஷித் கான், 2017ல் நடந்த அயர்லாந்துக்கு எதிரான தொடரில் 16 விக்கெட்டுகளை கைப்பற்றி மூன்றாம் இடத்தில் உள்ளார். அவருடன், தென்னாப்பிரிக்காவுடனான நடப்பு தொடரில் 16 விக்கெட்டுகளை கைப்பற்றிய மற்றொரு இந்திய சுழல் பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மூன்றாம் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.