Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

”பிரபாகரன் உடலைப் பார்த்து வேதனை அடைந்தேன்” – சொல்கிறார் ராகுல்காந்தி

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உடலைப் பார்த்து நானும், பிரியங்காவும் மிகவும் வேதனை அடைந்தோம் என்று காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இதையொட்டி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் மூத்த தலைவர்கள் குஜராத்தில் இப்போதே பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று (9/10/17) அந்த மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, வதோதராவில் தொழில் அதிபர்களைச் சந்தித்து உரையாடினார். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். அவரும் சகஜமாக அவற்றுக்கு பதில் அளித்தார்.

அப்போது ராகுல் காந்தி கூறுகையில், ”இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் பாஜக அரசு மிகப்பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. நம் நாட்டில் தினமும் 30 ஆயிரம் இளைஞர்கள் படித்து முடித்து வெளியே வருகின்றனர். அவர்களில் 450 பேருக்கு மட்டுமே இப்போதுள்ள அரசு, வேலைவாய்ப்பை வழங்குகிறது,” என்றார்.

சீனாவில் தினமும் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அந்நாட்டு அரசு வேலைவாய்ப்பை வழங்குகிறது என்றும் கூறினார்.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மரணம் குறித்த கேள்விக்கு, ”பிரபாகரன் உடலைப் பார்த்து நான் மிகவும் மன வேதனை அடைந்தேன். இதுபற்றி என் சகோதரி பிரியங்காவிடம் கூறும்போது, அவரும் அதே மனநிலையில் இருந்தார். மற்றவர்களின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்வதுதான் காந்தி குடும்பத்தின் பாரம்பரியம்,” என்று பதில் அளித்தார்.

ஒருமுறை எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் அளித்த ஒரு பேட்டியின்போது, ராஜிவ்காந்தி கொலை குறித்து கேள்வி கேட்டதற்கு, ”அது ஒரு துன்பியல் நிகழ்வு” என்று பிரபாகரன் பதில் அளித்திருந்தார்.

கடந்த 2009ம் ஆண்டு நடந்த ஈழ இறுதி யுத்தத்தின்போது இந்தியாவில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பில் இருந்தது. விடுதலைப் புலிகள் மீதான போரின்போது இலங்கை ராணுவத்தினருக்கு இந்திய அரசு ராணுவப் பயிற்சி¤ அளித்தது குறிப்பிடத்தக்கது.