Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

டி-20 கிரிக்கெட்: இந்திய தலைகள் உருண்டன; ஆஸி. அசத்தல் வெற்றி

கவுகாத்தியில் நடந்த ஆஸி. அணிக்கு எதிரான இரண்டாவது டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் கைகொடுக்காததால், 8 விக்கெட்டில் ஆஸி அணியிடம் தோல்வியைத் தழுவியது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரை 4-1 என இழந்தது. இந்நிலையில் இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது.

முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றியை பதிவு செய்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி கவுஹாத்தியில் இன்று (அக். 10) நடந்தது. இதில் ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் வார்னர், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

தலைகள் உருண்டன:

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா (8), ஷிகர் தவான் (2), விராட் கோலி (0), மனீஷ் பாண்டே (6) என ‘டாப்-ஆர்டர்’ பேட்ஸ்மேன்களை, ஆஸி பந்து வீச்சாளர் பெஹர்டெண்டிராப் பெவிலியனுக்கு அனுப்பினார். அடுத்து வந்த கேதர் ஜாதவ் (27), தோனி (13), பாண்டியா (25) நீண்டநேரம் தாக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து இந்திய அணி, 20 ஓவர்களில் 118 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஹென்ரிக்ஸ் அபாரம்:

எட்டக்கூடிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க வீரர்களான வார்னர் (2), பின்ச் (8) ஏமாற்றம் அளித்தனர். பின் வந்த ஹென்ரிக்ஸ், டிராவிஸ் ஹெட் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய பந்து வீச்சாளர்களை மிக எளிதாக சமாளித்த இந்த ஜோடி, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 1-1 என ஆஸ்திரேலிய அணி சமன் செய்தது. முதன்முறையாக இந்திய சுழல் பந்து வீச்சாளர்கள் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாத போட்டியாகவும் இந்த போட்டி அமைந்தது.

நழுவிய சாதனை:

இந்த தோல்வியின் மூலம் சுமார் 70 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 தொடர்களை தொடர்ச்சியாக கைப்பற்றும் வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டது. எனினும், அடுத்த போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் இந்த சாதனையை இந்திய அணி வசமாக்கலாம்.

கோஹ்லியின் முதல் முட்டை:

இந்தப் போட்டியில் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, ‘டக்’ ஆகி ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தார். முதல் ‘டக்’ அவுட்டை ஆஸி பந்து வீச்சாளர் பெஹர்டெண்டிராப் வீழ்த்தியதால், அவரும் கிரிக்கெட் வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார். இதுவரை 52 சர்வதேச டி-20 போட்டியில் ஆடியுள்ள கோஹ்லி, முதன்முறையாக ‘டக்’ அவுட் ஆகியுள்ளார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் கோஹ்லியின் சராசரி 54.57 ஆகும்.