Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு! மதுக்கடைகளுக்கு அனுமதி; பள்ளிகளுக்கு தடை; தனியார் நிறுவனங்கள் முழுமையாக இயங்கலாம்!!

கொரோனா நோய் பரவல்
அபாயம் காரணமாக,
தமிழகத்தில்
பிறப்பிக்கப்பட்டுள்ள
ஊரடங்கு உத்தரவு
ஜூன் 30ம் தேதியுடன்
முடிவடைய உள்ள நிலையில்,
தற்போது ஆறாவது
முறையாக ஊரடங்கு
உத்தரவை ஜூலை 1ம் தேதி
முதல் 31.7.2020ம் தேதி
நள்ளிரவு 12 மணி வரை
நீட்டித்து தமிழக அரசு
திங்களன்று (ஜூன் 29)
உத்தரவிட்டுள்ளது.

 

ஜூலை மாதத்தில்
5, 12, 19, 26 ஆகிய நான்கு
ஞாயிற்றுக்கிழமைகளிலும்
முழு ஊரடங்கு உத்தரவு
அமலில் இருக்கும் என்றும்
அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே நடைமுறையில்
உள்ள கீழ்க்காணும்
செயல்பாடுகளுக்கான தடைகள்,
மறு உத்தரவு வரும் வரை
தொடர்ந்து அமலில் இருக்கும்.
அதன் விவரம்:

 

நகர்ப்புற வழிபாட்டுத்
தலங்கள், பெரிய வழிபாட்டுத்
தலங்களில் பொதுமக்கள்
வழிபாடுகள், அனைத்து
மதம் சார்ந்த கூட்டங்களுக்கு
தடை நீடிக்கிறது.

 

நீலகிரி மாவட்டத்திற்கும்,
கொடைக்கானல், ஏற்காடு
போன்ற சுற்றுலா தலங்களுக்கு
வெளியூர் சுற்றுலா பயணிகள்
செல்ல தடை விதிக்கப்படுகிறது.
அனைத்து வகை தங்கும் விடுதிகள்,
விருந்தோம்பல் சேவைகளுக்கும்
தடை நீடிக்கிறது.
எனினும், மருத்துவத்துறை,
காவல்துறை, அரசு அலுவலர்கள்
உள்ளிட்ட வெளி மாநிலத்தவர்
மற்றும் தனிமைப்படுத்தப்படும்
பணிகளுக்கு மட்டும் விலக்கு
அளிக்கப்படுகிறது.

 

வணிக வளாகங்கள்,
பள்ளிகள், பயிற்சி நிறுவனங்கள்,
ஆராய்ச்சி நிறுவனங்கள்,
அனைத்து கல்வி நிறுவனங்கள்
திறக்கவும் தடை நீடிக்கிறது.
எனினும், கல்வி நிறுவனங்கள்
இணைய வழிக்கல்வி கற்றல்
தொடர்வதுடன், அதை
ஊக்கப்படுத்தவும்
செய்யலாம்.

 

மத்திய உள்துறை
அமைச்சகத்தால்
அனுமதிக்கப்பட்ட
பணிகளைத் தவிர சர்வதேச
விமான போக்குவரத்துக்கான
தடை நீடிக்கும். மெட்ரோ
ரயில், மின்சார ரயில்
போக்குவரத்து
இயக்கப்படமாட்டாது.

 

திரையரங்குகள்,
உடற்பயிற்சிக் கூடங்கள்,
நீச்சல் குளங்கள்,
கேளிக்கை விடுதிகள்,
மதுக்கூடங்கள்,
பெரிய அரங்குகள்,
கூட்ட அரங்குகள்,
கடற்கரை, சுற்றுலா
தலங்கள், உயிரியல்
பூங்காக்கள், மியூசியங்கள்
உள்ளிட்ட பொதுமக்கள்
அதிகம் கூடும் இடங்களுக்கு
தடை நீடிக்கிறது.

 

அனைத்து வகையான
சமுதாய, அரசியல்,
விளையாட்டு, பொழுதுபோக்கு,
கலாச்சார நிகழ்வுகள்,
சமய, கல்வி, விழாக்கள்,
கூட்டங்கள் மற்றும்
ஊர்வலங்களுக்கு தடை
உத்தரவு தொடர்கிறது.
மாநிலங்களுக்கு இடையேயான
பேருந்து போக்குவரத்துக்கு
அனுமதி இல்லை.

 

மேற்கண்ட கட்டுப்பாடுகள், நோய்த்தொற்றின் தன்மைக்கு ஏற்றவாறு படிப்படியாக தளர்த்தப்படும்.

 

அதேபோல், ஜூலை 5, 12, 19, 26 ஆகிய நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

 

திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. இறுதி ஊர்வலங்கள், அதைச் சார்ந்த சடங்குகளில் 50 நபர்களுக்கு மேல் கலந்து கொள்ள அனுமதி கிடையாது.

மாநிலத்தில், மாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தனியார், அரசு பொது பேருந்து போக்குவரத்து வரும் 1.7.2020ம் தேதி முதல் 15.7.2020ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

 

இ-பாஸ் நடைமுறை:

 

அந்தந்த மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும். வெளிமாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்குள் வரவும், மாவட்டங்களுக்கு இடையே சென்று வரவும் இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

 

முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் இடங்களில் 30.6.2020ம் தேதி வரை வழங்கப்பட்ட இ-பாஸ் 5.7.2020ம் தேதி வரை செல்லுபடியாகும். இதற்கு, மீண்டும் புதிய இ-பாஸ் பெறத் தேவையில்லை.

 

ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு அரசுப்பணிகளுக்கான ஒப்பந்தங்களில் பங்கேற்க விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கும், இப்பணிகள் சம்பந்தமாக அரசு அதிகாரிகளை சந்திக்க விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களால் இ-பாஸ் வழங்கப்படும்.

 

பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) 1.7.2020ம் தேதி முதலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகள் மற்றும் மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 6.7.2020ம் தேதி முதலும் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. அதன் விவரம்:

 

கிராமப்புறங்களில் உள்ள
சிறிய கோயில்கள்,
அதாவது ஆண்டுக்கு
10 ஆயிரம் ரூபாய்க்கும்
குறைவாக ஆண்டு
வருமானம் உள்ள
கோயில்களிலும்,
சிறிய மசூதிகளிலும்,
தர்காக்களிலும்,
தேவாலயங்களிலும்
பொதுமக்கள் தரிசனம்
அனுமதிக்கப்படும்.
சமூக இடைவெளி மற்றும்
பிற நோய்த்தடுப்பு
நடவடிக்கைகளை தவறாமல்
கடைப்பிடிக்க வேண்டும்.

 

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.

 

தொழில் நிறுவனங்கள்,
ஏற்றுமதி நிறுவனங்கள்
100 சதவீதம்
பணியாளர்களுடன்
இயங்க அனுமதிக்கப்படுகிறது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், 20 சதவீத பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற ஊக்குவிக்க வேண்டும்.

 

அனைத்து
தனியார் நிறுவனங்களும்
100 சதவீத பணியாளர்களுடன்
செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
எனினும், இயன்ற வரை
பணியாளர்கள் வீட்டிலிருந்தே
பணியாற்றுவதை ஊக்கப்படுத்த
வேண்டும்.

 

வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். ஒரே நேரத்தில், அதிகபட்சமாக 5 வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கடைகளில் குளிர்சாதன வசதி இருப்பினும், அவை இயக்கப்படக் கூடாது.

 

தேநீர் கடைகள்,
உணவு விடுதிகள்,
காய்கறி கடைகள்,
மளிகை கடைகள் ஆகியவை
காலை 6 மணி முதல்
இரவு 8 மணி வரை
அனுமதிக்கப்படுகிறது.
டாஸ்மாக் உள்ளிட்ட
இதர கடைகள் காலை
10 மணி முதல்
இரவு 8 மணி வரை
இயங்கலாம்.

உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் நோக்கத்துடன் மொத்த இருக்கைகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்தக் கூடாது.

 

தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 50 சதவீத அளவு மட்டும் வாடிக்கையாளர்களால் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

 

அத்தியாவசியமற்ற பொருள்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருள்களையும் இனி ஆன்லைன் சந்தையில் வழங்கவும் அனுமதிக்கப்படுகிறது.

 

வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

 

மீன் கடைகள், கோழி இறைச்சிக் கடைகள், மற்ற இறைச்சிக் கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள் சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

 

பொது விதிகள்:

 

சிஆர்பிசி சட்டப்பிரிவு 144ன் கீழ், பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும். தமிழ்நாடு முழுவதும் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.

 

அனைத்து தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணியாற்ற ஊக்குவிப்பதோடு, தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

 

முழு ஊரடங்கு 5.7.2020ம் தேதி வரை அமலில் உள்ள பெருநகர சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளைப் பொருத்தவரை தற்போதுள்ள நடைமுறை அதாவது, தொழிற்சாலை வளாகத்திலோ, அதன் அருகிலோ தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டு பணியாற்ற அனுமதிக்கும் நடைமுறை தொடர்வதற்கும் மற்ற பகுதிகளில் தற்போதுள்ள டிஎன் இ&பாஸ் முறை தொடர்வதற்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

 

முழு ஊரடங்கு அமலில் உள்ள மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள், அருகில் உள்ள அதாவது அந்த மாவட்டத்தை ஒட்டியுள்ள மாவட்டத்தில் இருந்து வந்து பணியாற்ற சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகம், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து அனுமதி பெற்று, தொழிலாளர்களுக்கு அனுமதி அட்டை வழங்கலாம். இந்த அனுமதி அட்டை, தொழிற்சாலை அமைந்துள்ள மாவட்டத்தை ஒட்டியுள்ள மாவட்டத்திற்கு மட்டுமே பொருந்தும். பிற மாவட்டங்களுக்கு பயன்படுத்தக் கூடாது.

 

அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் மக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் இந்த நோய் பரவலை தடுக்க இயலாது. பொதுமக்கள் வெளியில் செல்லும்போது பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

 

பொதுமக்கள் வீட்டிலும், பணியாற்றும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கைகளை கழுவுவதையும், முகக்கவசம் அணிந்து வெளியே செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடித்து அவசிய தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

– பேனாக்காரன்