Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

முதல்வர் தொகுதியில் ‘முதல்வரின்’ கோல்மால்!

பெரியார் பல்கலை உறுப்புக்கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன், இல்லாத பாடப்பிரிவுக்கு பாடம் நடத்தியதாக முன்அனுபவச் சான்றிதழில் குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதிக்கு உட்பட்ட கல்லூரியின் முதல்வரே இவ்வாறு தவறான தகவல்களை தந்துள்ளது தற்போது அம்பலமாகி உள்ளது.

வெங்கடேஸ்வரன்

சேலம் பெரியார் பல்கலை, கடந்த 1997ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல்கலை தொடங்கப்பட்ட நாள் முதலே ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதிலும், இணைவு கல்லூரிகளில் புதிய துறைகள் தொடங்கப்படுவதிலும் ஊழல் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டே உள்ளன.

இப்பல்கலையின் கீழ், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அரசு, தனியார், நிதியுதவி பெறும் கலைக்கல்லூரிகள் இணைவு பெற்று இயங்கி வருகின்றன. மேட்டூர், பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, இடைப்பாடி, சேந்தமங்கலம் ஆகிய 6 உறுப்புக் கல்லூரிகளும் செயல்படுகின்றன.

சேலம் மாவட்டம் இடைப்பாடியில் செயல்படும் பெரியார் பல்கலை உறுப்புக்கல்லூரியின் முதல்வர் வெங்கடேஸ்வரன் போலியான பணி அனுபவ சான்றிதழ் கொடுத்து, பணியில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கல்லூரி முதல்வராக நியமிக்கப்படக்கூடியவர்களுக்கு பல்கலை மானியக்குழு (யுஜிசி) சில தகுதிகளை வரையறை செய்துள்ளது.

அதன்படி, (1) முதுநிலை பட்டப்படிப்பில் 55% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (2) சம்பந்தப்பட்ட துறையில் பிஹெச்.டி முடித்திருப்பதுடன், அதற்குரிய கட்டுரைகளும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் (3) இணை பேராசிரியர் / பேராசிரியராக 15 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் (4) யுஜிசி தகுதி பட்டியல் இணைப்பு-3ல், 1 முதல் 9ம் அட்டவணை வரை உள்ள விதிகளின்படி மதிப்பீட்டு வரம்புக்குள் (Performance Based Appraisal System) இருக்க வேண்டும்.

இந்த விதிகளின்படி மட்டுமின்றி வழக்கமான இனசுழற்சி, இட ஒதுக்கீடு அடிப்படையில் கல்லூரி முதல்வர் பதவி நியமனம் செய்யப்படும். இதற்கென பல்கலை அளவில் ஏற்படுத்தப்பட்ட தேர்வுக்குழு முறையான நேர்காணல் நடத்தி, பணியிடங்களை நிரப்புவது நடைமுறை.

 

போலி சான்றிதழ் புகார் கூறப்படும் வெங்கடேஸ்வரன், இடைப்பாடி உறுப்புக்கல்லூரியில் கடந்த 20.10.2014ம் தேதி முதல்வராக நியமிக்கப்பட்டார். இந்தப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் முன்பாக அவர் கல்லூரிக்கல்வி இணை இயக்குநருக்கு சமர்ப்பித்துள்ள பணி அனுபவ சான்றிதழில், மசக்காளிப்பட்டியில் உள்ள கஸ்தூரிபா காந்தி சுயநிதி கல்வியியல் கல்லூரியில் 5.5.2005 முதல் 31.7.2014 வரை பொதுத்தமிழ், சிறப்புத்தமிழ் பாடங்களை கற்பித்து வந்ததாகவும், 1.6.2010 முதல் 31.7.2014 வரை முதுநிலை மாணவர்களுக்கு தத்துவம் மற்றும் கல்வியில் சமூக அடிப்படை பாடங்களை (Philosophical and Sociological Foundations in Education) நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார். அதே கல்லூரியில் 1.5.2011 முதல் 31.7.2014 வரை முதல்வராக பணியாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆக மொத்தம் கஸ்தூரிபா கல்வியியல் கல்லூரியில் மட்டும் 9 ஆண்டுகள் 2 மாதங்கள் 25 நாள்கள் பணி அனுபவம் பெற்றிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சுப்ரமணியம் கலை அறிவியல் சுயநிதி கல்லூரியில் இளங்கலை மாணவர்களு க்கு இக்கால இலக்கியம், இலக்கணம்-1 ஆகிய பாடங்களை, 1.6.1998 முதல் 30.6.2004 வரை கற்பித்ததாக தெரிவித்துள்ளார். இதே கல்லூரியில், மேற்சொன்ன காலக்கட்டத்தில் முதுகலை மாணவர்களுக்கு (எம்.ஏ.,) தமிழ் இலக்கிய வரலாறு பாடம் நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆக மொத்தம் சுப்ரமணியம் கலை அறிவியல் கல்லூரியில் 6 ஆண்டுகள் 1 மாதம் பணியாற்றியதாக தனது அனுபவ சான்றிதழில் தெரிவித்துள்ளார்.

கல்லூரி முதல்வராக நியமிக்கப்படுவதற்குரிய 15 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவத்தை வெங்கடேஸ்வரன் பெற்றிருக்கிறார் என்பதை அவருடைய சான்றிதழ் சொல்கிறது. ஆனால், சுப்ரமணியம் கலை அறிவியல் கல்லூரியில் நாளது தேதி வரை எம்.ஏ. (தமிழ்) பாடப்பிரிவே தொடங்கப்பாடதபோது, முதல்வர் வெங்கடேஸ்வரன் தமிழ் இலக்கிய வரலாறு பாடத்தை யாருக்காக நடத்தி இருப்பார் என்பதுதான் இப்போதைய கேள்வி. அதுவும் வாரத்திற்கு நான்கு பாடவேளைகள் வீதம் 6 ஆண்டுகளுக்கு எடுத்திருக்கிறார்.

மேற்கண்ட கல்லூரியில் எம்.ஏ., (தமிழ்) என்ற பாடப்பிரிவே இல்லாதபோது, அந்தப்பாடப்பிரிவு மாணவர்களுக்கு பாடம் நடத்தியதாக ஏன் அனுபவ சான்றிதழ் பெற வேண்டும்? கல்லூரிக்கல்வி இணை இயக்குநரும் இந்த சான்றிதழை ‘அப்படியே’ ஏற்றுக்கொண்டு, மேலொப்பமிட்டுள்ளது ஏன்?

இது தொடர்பாக நாம் இடைப்பாடி அரசு கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரனிடமே கேட்டோம்.

”சுப்ரமணியம் கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை படிப்பு இல்லை என்பது எனக்கும் தெரியும். பி.எட்., பணி அனுபவ சான்றிதழ் பெறும்போது, அதிலிருந்த ஃபார்மட்டை தவறுதலாக அப்படியே டைப் செய்ததால் ஏதேனும் தவறு நடந்திருக்கலாம். இரண்டு கல்லூரி பணி அனுபவ சான்றிதழும் ஒரே நேரத்தில்தான் வாங்கினேன். அதனால் ஏற்பட்ட தவறாக இருக்கலாம். ஆனால் அந்தக் கல்லூரியில் 6 ஆண்டுகள் 1 மாதம் பணியாற்றினேன் என்பதை யாரும் மாற்ற முடியாது. கல்லூரி முதல்வராக நியமிக்கப்படுவதற்கு 15 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் இருந்தால் போதும் என்றுதான் நேர்காணலுக்கு முன்பாக பெரியார் பல்கலை விளம்பரம் செய்திருந்தது. அதற்கான தகுதி என்னிடம் இருக்கிறது,” என்றார்.

கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன் சொன்னதுபோல, அவர் ஒரே நேரத்தில் இரண்டு கல்லூரி அனுபவ சான்றிதழும் பெறவில்லை. சுப்ரமணியம் கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றியதற்கான அனுபவ சான்றிதழை 2013ம் ஆண்டு ஜூன் மாதமும், கஸ்தூரிபா காந்தி கல்வியியல் கல்லூரியில் இருந்து அனுபவ சான்றிதழை 2014ம் ஆண்டில், ஆகஸ்ட் மாதமும் பெற்றிருக்கிறார்.

வெங்கடேஸ்வரனிடம் பேசுவதற்கு முன்பாக, பெரியார் பல்கலை பதிவாளர் மணிவண்ணனிடம் இதுபற்றி கேட்டபோது, ”இது தொடர்பாக யாராவது குறிப்பிட்டு புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல், ஆசிரியரல்லாத ஊழியர்கள் மீது வேண்டுமானால் நான் நடவடிக்கை எடுக்க முடியுமே தவிர, கல்லூரி முதல்வர் மீது வரும் புகார்கள் குறித்து துணை வேந்தர்தான் நடவடிக்கை எடுக்க முடியும்,” என்றார்.

பெரியார் பல்கலையில் தற்போது துணை வேந்தர் பணியிடம் காலியாக உள்ளதால், பல்கலை ஒருங்கிணைப்புக்குழு (கன்வீனர் கமிட்டி) உறுப்பினரான பேராசிரியர் தங்கவேலிடம் இதுபற்றி பேசினோம்.

”கல்வி சான்றிதழ், அனுபவ சான்றிதழ் ஆகியவற்றின் உண்மைத்தன்மை ஆய்வு செய்யப்படுவது நடைமுறையில் இருக்கிறது. இருப்பினும், நீங்கள் சொல்லும் பிரச்னை குறித்து இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அதிகாரப்பூர்வமாக புகார்கள் வந்தால் பதிவாளரிடம் கலந்து பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

யுஜிசி குறிப்பிடும் நிபந்தனை, நடைமுறையில் சரியாக புரிந்து கொள்ளப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. மேலும், முதல்வர் வெங்கடேஸ்வரன், இல்லாத பாடப்பிரிவுக்கும் பாடம் நடத்தியதாக எதற்காக அனுபவ சான்றிதழ் பெற்றார் என்பதையும் பல்கலை நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மறைக்கும் பல்கலை: எடப்பாடி கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன் நியமனம் தொடர்பாக ஒருவர், பெரியார் பல்கலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்களைக் கேட்டிருந்தார். பெரும்பாலான கேள்விகளுக்கு உரிய பதிலை அளிக்காமல் மழுப்பலாகவே பதில் அளித்துள்ளார், பல்கலை தகவல் அலுவலர்.

உதாரணமாக, எடப்பாடி அரசு கல்லூரி முதல்வர் பதவிக்கு எத்தனை பேர் விண்ணப்பித்தனர்? அவர்களின் கல்வித்தகுதி, பணி அனுபவம் வாரியாக வழங்கவும் என்று கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு பல்கலை பொது தகவல் அலுவலர், ”மூன்றாம் தரப்பினர்களின் தகவல் இது. விண்ணப்பித்தவர்களின் பாதுகாப்பு கருதி தகவல் வழங்க இயலாது,” என்று பதில் அளித்துள¢ளா£ர். நேர்காணல் குறித்த மற்றொரு கேள்விக்கு, ”நேர்காணல் குழுவில் கலந்து கொண்டவர்கள் பாதுகாப்பு கருதி தகவல் வழங்க இயலாது,” என்றும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற மழுப்பலான பதில்களால், பெரியார் பல்கலையின் வெளிப்படைத்தன்மை குறித்த சந்தேகங்களும் உயர்கல்வித்துறையில் பலமாக எழுந்துள்ளன. இணைப்பு.

– எம். முரளி மனோகரன்.
தொடர்புக்கு: muralimanoharan1991@gmail.com